ஈரோட்டில் பாரதிராஜாவின் முழக்கம்
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
திரையுலகத் தமிழீழ ஆதரவு இயக்கத்தின் சார்பில் துவக்கப்பட்ட பரப்புரைப் பயணத்தின் முதல் கூட்டம் ஈரோட்டில் நடந்தது.
அந்தக் கூட்டத்தில் இயக்குநர் இமயம் பாரதிராஜா பேசியது இது..
"நான் எத்தனையோ சினிமா சம்பந்தப்பட்ட கூட்டங்களில் பேசியிருக்கிறேன். எழுத்தாளர்கள் கூட்டத்தில் பேசியிருக்கிறேன். ஆனால் அரசியல் மேடைகளில் பேசி 40 ஆண்டுகள் ஆகிவிட்டன.
என்னுடைய அம்மா, அப்பா, என் குடும்பம் முழுவதும் காங்கிரஸ் குடும்பம். 1962-67-களில் காங்கிரஸ் கட்சிக்காக மேடையேறி பேசியிருக்கிறேன். அப்போது எதை எல்லாம் பேச வேண்டும் என்று ஒரு குறிப்பு தருவார்கள். நான் கேட்பேன் "எல்லாம் பொய்யாக இருக்கிறதே.." என்று.. "அரசியல் என்றால் இப்படி எல்லாம் பேச வேண்டும்.." என்று சொல்லி பேசச் சொல்வார்கள். பிறகு எதற்கு பொய் சொல்லும் அரசியல்..? கலைத்தொழிலே போதும் என்று அரசியலைவிட்டு விலகிவிட்டேன். அன்று 'பொய் பேச வேண்டாம்' என்று அரசியலை விட்டேன். இப்போது 'மெய் பேச வேண்டும்' என்று இந்தக் கூட்டத்தில் பேச வந்திருக்கிறேன். என்னை இழுத்து வந்துவிட்டார்கள்.
டெல்லி அரசு எனக்கு 'பத்மஸ்ரீ' விருது கொடுத்தது. 'பத்மஸ்ரீ பாரதிராஜாவா'..? 'தமிழன் பாரதிராஜாவா..?' எனற கேள்வி வந்தபோது 'தமிழன் பாரதிராஜா' என்கிற பெருமை மட்டும் போதும் என்று முடிவு செய்தேன். தமிழன் என்பதற்கு இணையான வேறு பட்டமே கிடையாது.
"பாரதிராஜா யார் என்று வயலார் ரவிக்குத் தெரியுமா..?" என்கிறார் இளங்கோவன். அவருக்குத் தெரியுமா? நானும், வயலார் ரவியும் 25 ஆண்டு கால நண்பர்கள் என்று.
"முத்துக்குமாரை தெரியாது.." என்கிறார். முத்துக்குமாரை தெரியாமல் தமிழன் இருக்கலாமா? அவருக்கு ஓடுவது தமிழ் ரத்தமா..?
தனி ஈழம் என்று யார் குரல் கொடுத்தாலும் அவர்களை வாழ்த்துகிறோம். துரோகிகளை நாங்கள் அடையாளம் காட்டுகிறோம். நல்லவர்களைத் தேடிக் கொள்ளுங்கள். 16 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக வாக்களிக்க வேண்டும். இப்போது புரட்சியைத் தொடங்க இருக்கிறோம். இன்னும் 10 நாட்களில் தேர்தலில் அது பிரளயமாக மாற வேண்டும்.
ஓட்டு கேட்க சோனியா வரக்கூடாது. அப்படி அவர் சென்னைக்கு வந்தால் மிக பலத்த எதிர்ப்பு காட்ட வேண்டும். தாய்மார்களே.. பொதுமக்களே.. நீங்கள் உங்கள் வீடுகளில் கருப்புத் துணியைக் கட்டுங்கள். சிறு கருப்புத் துணியை அணிந்து கொள்ளுங்கள். யராவது கேட்டால் 'சோனியா வரும் நாள் எங்களுக்குத் துக்க நாள்..' என்று சொல்லுங்கள்.."
இதே கூட்டத்தில் இயக்குநர் சீமான் பேசியது..
"தந்தை பெரியாருக்கு காங்கிரஸை அழிக்க வேண்டும் என்ற குறிக்கோள் இருந்தது. அதை நிறைவேற்ற அவருடைய பேரனாக நான் சிறையில் இருந்து புலியாக வெளியில் வந்துள்ளேன். இன்னும் 10 நாடகள் தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்து பேசுவேன்.
இலங்கையில் திட்டமிட்ட இனப்படுகொல¨யை நடத்துகிறது சிங்கள ராணுவம். அதற்கு துணை போகிறது என் தேசம். இறையாண்மை பேசும் என் தேசம் தலாய்லாமா நாட்டைப் பிரித்து கேட்டால் ஆதரவு அளிக்கிறது. தமிழர்கள் நாட்டை கேட்டால் ஒழிக்க நினைக்கிறது. அப்போது சீனாவுக்கு இறையாண்மை ஒருமைப்பாடு இல்லையா..?
யாரும் எங்களது போராட்டத்துக்கு ஆதரவு தராத நிலையில் 'தனி ஈழம்தான் தீர்வு..' என்று ஜெயலலிதா கூறியிருக்கிறார். அவரை வணங்குகிறேன்.
நான் இப்போது இந்தியா உட்பட உலக நாடுகளை கேட்பது எல்லாம் நீங்கள் விடுதலைப்புலிகளை அழிக்க ஆயுதமோ எந்த உதவி வேண்டுமானாலும் செய்யுங்கள். ஆனால் அவர்களுக்கான தடையை மட்டும் நீக்கிவிடுங்கள். தனி ஈழம் மலர பிரபாகரன் நடவடிக்கை எடுப்பார். இந்தியாவில் மட்டும் விடுதலைப்புலிகளுக்கான தடை நீக்கப்பட்டு எங்களை இலங்கைக்கு செல்ல அனுமதித்தால் 15 லட்சம் பேர் இலங்கை செல்ல தயாராக இருக்கிறார்கள். 10 நாட்களில் தமிழ் ஈழம் மலரும்.."
இக்கூட்டத்தில் இயக்குனர்கள் ஆர்.சுந்தர்ராஜன், கவுதமன், சிபிசந்தர், பாடலாசிரியர் அறிவுமதி, எழுத்தாளர் தேவிசந்திரா, பெப்ஸி செயலாளர் சிவா, கலை இலக்கிய சங்கத் தலைவர் சண்முகம், ம.தி.மு.க. தலைமை கழகப் பேச்சாளர் வக்கீல் ராமசிவசங்கர் ஆகியோர் பேசினார்கள்.
நிகழ்ச்சியில் சீனாவின் முற்றுகையில் இந்தியா என்ற புத்தகத்தை பாரதிராஜா வெளியிட்டார்.
இயக்குனர் ஆர்.கே.செல்வமணி வரவேற்று நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்.
நன்றி : தினத்தந்தி
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com