Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic

தமிழீழத் தாகம் தணியாது...! எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது....!!

online

'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...!
தூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்!!'

-பாவேந்தர் பாரதிதாசன்

ஏதோ ஒரு பாட்டு mp3

ஏதோ ஒரு பாட்டு mp3
Found at bee mp3 search engine

Pages

Friday, June 19, 2009

♥ " ஒரு தமிழீழத் தமிழனின் திடுக்கிடும் டைரிக் குறிப்புகள் ♥

http://i.d.com.com/i/dl/media/dlimage/95/04/1/95041_large.jpeg

http://www.kalachuvadu.com/issue-113/page44.asp

யாழ்ப்பாணக் குறிப்பேடு

அநாமதேயன்

யாழ்ப்பாணம்
20.03.2009

இத்துடன் யாழ்ப்பாணக் குறிப்பேடு எனும் யாழ்ப்பாணத்தின் தற்போதைய
நிலைமைகளைப் பிரதிபலிக்கும் விடயங்களை உள்ளடக்கிய பகுதியை
அனுப்பிவைக்கிறேன். எனது சொந்தப் பெயரைப் பாதுகாப்பு நோக்கங்கருதிக்
குறிப்பிடவில்லை. இங்கிருந்து அனுப்பப்படும் தபால்கள் கிழித்து வாசித்த
பின்னரே அனுப்பப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகின்றன. சிலவேளை இப்பிரதி
உங்களுக்குக் கிடைக்காமலும் போகலாம். தற்செயலாகக் கிடைத்தால்
காலச்சுவட்டில் பிரசுரிப்பீர்கள் என நம்புகிறேன். பிரசுரிப்பதும்
பிரசுரிக்காமல் விடுவதும் உங்களைப் பொறுத்தது. பிரபாகரனின் படம்
முகப்பில் வெளியான 'ஆனந்த விகட'னை விற்பனைசெய்தமைக்காக பூபாலசிங்கம்
புத்தகசாலை உரிமையாளர் ஸ்ரீதரசிங் கைதுசெய்யப்பட்டுச்
சிறையிலடைக்கப்பட்டிருப்பதை அறிந்திருப்பீர்கள். இதுதான் ஈழத்தின் இன்றைய
நிலவரம்.

அநாமதேயன்

குறிப்பு (1)

மட்டக்களப்பிலிருந்து சலீம் தொலைபேசியில் கதைத்தான். ஜூலை 2008
காலச்சுவடு பற்றிய பேச்சு வந்தது. சலனி, நவாஸ் சௌபி ஆகியோரது
கவிதைகளும் 1983 கறுப்பு ஜூலை பற்றிய சிறப்புப் பகுதியும் அதற்கேற்ற
முகப்புப் படமும் தாங்கி அவ்விதழ் வெளிவந்திருப்பதாகச் சொன்னான். எனக்கு
அது இதுவரை வாசிக்கக் கிடைக்கவில்லை. யாழ்ப்பாணத்திலுள்ள பூபாலசிங்கம்
புத்தகசாலையில் பலதடவைகள் விசாரித்தும் வரவில்லையென்று சொன்னார்கள்.
சிற்றிதழ்களுடன் பரிச்சயமுள்ள நண்பன் ஒருவனிடம் இது பற்றிக் கேட்டேன்.
1983 கறுப்பு ஜூலை பற்றிய சிறப்புப் பகுதி அவ்விதழில் இடம்பெற்றுள்ளதால்
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு அவ்விதழை எடுத்துவர இராணுவம்
தடைவிதித்துள்ளதாகச் சொன்னான். இதேபோல் செப்ரெம்பர் 2006 காலச்சுவடு
இதழின் முகப்பில் 'சுதந்திர இலங்கை'க்குள் இராணுவ 'வீரன்' ஒருவன்
நின்றுகொண்டு 'Stop' எனக் காட்டும் (ஏ-9 வீதி மூடப்பட்டிருப்பதை
வெளிப்படுத்தும்) படம் இடம்பெற்றதால் கொழும்பிலிருந்து
யாழ்ப்பாணத்திற்கு எடுத்துவரப்பட்ட அவ்விதழின் எல்லாப் பிரதிகளினதும்
முகப்புக் கிழிக்கப்பட்டிருந்ததையும் நினைவுகூர்ந்து 'ஒக்கமே மஹிந்த
சிந்தனையாக்' (எல்லாம் மகிந்த சிந்தனை) எனச் சிரித்தான்.

குறிப்பு (2)

இப்போது நான் செய்தித்தாள்களைப் பார்ப்பதைத் தவிர்த்துவருகிறேன்.
'புதுக்குடியிருப்பில் எறிகணை வீச்சு', 'நூற்றுக்கு மேற்பட்டோர் உடல்
சிதறிப் பலி', 'ஐம்பதிற்கும் மேற்பட்டோர் படுகாயம்', 'வீதியெங்கும்
சடலங்கள்' எனத் தலைப்பிட்டு ஒவ்வொரு நாளும் கண்டு சகிக்க முடியாத
படங்களுடன் யாழ்ப்பாணத்துச் செய்தித் தாள்கள்
வெளிவந்துகொண்டிருக்கின்றன. இரண்டு மூன்று தினங்கள் இவற்றைத் தொடர்ந்து
வாசித்ததில் சாப்பிட முடியவில்லை. உறங்க முடியவில்லை. கனவில்கூடப்
படுக்கை விரிப்புகளிலும் சாக்குகளிலும் கூழாகிப்போன பிரேதங்கள்
அள்ளப்படும் காட்சிகளே தொடர்ந்து வருகின்றன. அலென்ரனேயின் ஹிரோஸிமா
மொர் அமோர் திரைப்படந்தான் உடனடியாக நினைவுக்கு வருகிறது.
இணையதளத்துடன் பரிச்சயமுள்ள நண்பனொருவன் வீட்டிற்கு வந்திருந்தபோது
இணையதளமொன்றில் 'மனதைரியமுள்ளவர்கள் மட்டும் பார்க்கலாம்' என்ற
தலைப்பில் சில படங்களைப் பார்க்க நேர்ந்ததாகவும் எறிகுண்டு வீசப்பட்டுக்
கருகிப்போன நிலையில் பற்கள் வெளித்தள்ளிய நிலையில் குவியல்
குவியல்களாகச் சடலங்கள், தலை சிதறிய முண்டங்கள் அப்படங்களில்
நிரம்பியிருந்ததாகவும் ஐந்தாறு படங்களுக்கு மேல் பார்க்க
முடியவில்லையென்றும் சொன்னான்.

குறிப்பு (3)

அண்மையில் யாழ்ப்பாணம் மத்தியூஸ் வீதியில் வசிக்கும் தேவராஜா சாளினி
(வயது 18) சுருக்கிட்டுத் தற்கொலைசெய்துகொண்டதாகத் தகவல் வந்தது.
இப்பெண் சென்ற வருடம் உயர்தரப் பரீட்சைக்குத் தேற்றி 2AB என்ற
பெறுபேற்றைப் பெற்றிருந்தும் 'Z' முறைத் தரப்படுத்தலின் காரணமாக யாழ்
பல்கலைக் கழகத்தின் கலைப்பீட உள்நுழைவுக்கான அனுமதியைப் பெற முடியாத
நிலையில் மனவிரக்தியுற்றுத் தற்கொலை செய்துகொண்டதாகவே கூறப்பட்டது.
ஆனால் உண்மையில் நடந்ததோ வேறு. சம்பவம் நடைபெற்ற தினத்தில் இப்பெண்
வீட்டில் தனித்திருந்துள்ளார். இவரது வீட்டிற்கருகில் இராணுவக் காவலரண்
அமைந்துள்ளது. அங்கே காவற்பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் வீட்டினுள்
புகுந்து சாளினியை வல்லுறவுக்குட்படுத்திக் கழுத்தை நெரித்துக்
கொன்றுவிட்டுத் தூக்கில் தொங்கவிட்டுச் சென்றுள்ளனர். வெளியே
சென்றிருந்த பெற்றோர் திரும்பி வந்து பார்த்தபோது தூக்கில் தொங்கிய
சாளினியின் தொடைப் பகுதியிலிருந்து இரத்தம் கசிந்திருந்தது. படையினர்
சாளினியை வல்லுறவுக்குட்படுத்தியமைக்கு வலுவான ஆதாரங்கள் இருந்தும்
எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்க முடியவில்லை. இதுதவிர சாளினியின் மரண
விசாரணை அறிக்கைகூடத் தற்கொலையால் மரணம் சம்பவித்துள்ளதாகவே
வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறான மனித உரிமை மீறல் நடவடிக்கைகள் தற்போது
யாழ்ப்பாணத்தில் பரவலாக நடைபெற்றுவருகின்றபோதிலும் வெளிக்கொணர முடியாத
நிலையில் பத்திரிகையாளர்களையும் மனித உரிமை ஆர்வலர்களையும் எந்நேரமும்
துப்பாக்கிகள் குறிபார்த்துக்கொண்டிருக்கின்றன.

குறிப்பு (4)

யாழ்ப்பாணத்துக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வருகை தந்துவிட்டால் மக்கள்
பதகளிக்கத் தொடங்கிவிடுவர். அவர் கொழும்புக்குத் திரும்பிச்
செல்லும்வரை ஆகக் குறைந்தது நாலைந்து பேராவது 'அடையாளம் தெரியாத
நபர்களால்' சுட்டுக்கொல்லப்படுவர். அவர் யாழ்ப்பாணத்திற்கு வரும்போதே
இம்முறை யார் யாரைச் சுட்டுக்கொல்வது என்ற பட்டியலுடனேயே வருவார்.
யாழ்ப்பாணத்திற்கு வந்து இறங்கியதுமே அப்பட்டியலைத் தமது
தொண்டரடிப்பொடிகளிடம் கொடுத்துவிடுவார். அவர்களும் நாளுக்கொருவராகப்
போட்டுத்தள்ளிவிடுவர். பத்திரிகை நண்பர் ஒருவரைச் சந்திக்க ஒரு நாள்
சென்றேன். அவர் பரபரப்பாக இருந்தார். காரணம் கேட்டேன். 'டக்ளஸ்
யாழ்ப்பாணம் வந்திட்டானடாப்பா. இனி Front pageஇல் சுட்டுக் கொலைக்கெண்டு
ஒரு column ஒதுக்க வேணும்' என்றார். இனி வரவிருக்கும் நாள்களை எண்ணிப்
பார்க்கும்போது பயமாக இருக்கிறது.

சுட்டுக்கொல்வது ஒருபுறமிருக்க யாழ் மக்கள் மோசமாக
அவமதிப்பிற்குள்ளாகும் இன்னொரு விடயத்தையும் குறிப்பிட வேண்டியுள்ளது.
சமூக சேவைகள், சமூகநலத் துறை அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா
யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்து, ஸ்ரான்லி வீதியிலமைந்துள்ள ஸ்ரீதர்
தியேட்டரில் தங்கியிருப்பது வழக்கம். அக்காலப்பகுதியில் கல்லூரி அதிபர்
மற்றும் ஆசிரியர்கள், கூட்டுறவுச் சங்கப் பணியாளர்கள், அரசாங்க
அலுவலர்கள் ஆகியோரைத் தனது அலுவலகத்திற்கு அழைத்து மாநாடுகள்
நடத்துவார். இதுதவிரப் பொதுமக்கள் குறைகேள் சேவையையும் நடத்துவார்.
இதற்கென யாழ் மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்தும் வருகைதரும் மக்கள்
மோசமான உடற்சோதனைக்கு உள்ளாக்கப்பட்டே அமைச்சரைச் சந்திக்க முடியும்.
உடற்சோதனை சாதாரணமானதல்ல. ஆண், பெண் இருபாலாரும் தனித்தனி
மறைவிடங்களுக்குக் கொண்டுசெல்லப்பட்டு நிர்வாணமாக்கப்பட்டே
இவ்வுடற்சோதனை நிகழ்த்தப்படுகிறது. இதன்போது பெண்களே மிகுந்த
நெருக்கடிக்குள்ளாகின்றனர். மார்பகங்கள் உண்மையானவைதானா என்பதை
உறுதிப்படுத்திக்கொள்ளப் பல தடவை அமுக்கப்படுகின்றன. யோனித்
துவாரங்களுக்குள் விரல் நுழைத்தும் பார்க்கப்படுகிறது. ஆண்களுக்கோ
விதைப்பைகள் நசுக்கிப் பார்க்கப்படுகின்றன. இக்'கௌரவிப்பு' நிகழ்வுகளை
மூலைக்குமூலை பொருத்தப்பட்டிருக்கும் கமராக்கள் பதிவுசெய்கின்றன.
எனக்குத் தெரிந்தவொரு பெண் தனது பணி இடமாற்றம் தொடர்பாக அமைச்சர்
டக்ளஸ் தேவானந்தாவைச் சந்திக்கப் போய்வந்தாள். அவளிடம் இவ்வுடற்சோதனை
குறித்து விசாரித்தபோது சொன்னாள், "எங்களுக்கு மார்பகப் புற்றுநோய்
இருக்கா? எண்டு பரிசோதிக்க ஆஸ்பத்திரிக்குப் போகத் தேவையில்லை. ஸ்ரீதர்
தியேட்டருக்குப் போனால் போதும்."

குறிப்பு (5)

வன்னிப் பெருநிலப்பரப்பில் நிகழ்ந்துகொண்டிருக்கும் அகோர எறிகணை வீச்சு
மற்றும் கண்மூடித்தனமான விமானக் குண்டுவீச்சுத் தாக்குதல்களால்
காயமடைவோரை சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கத்தின் வழித்துணையோடு வவுனியா
மற்றும் திருகோணமலை வைத்தியசாலைகளுக்குக் கொண்டுசென்று
சிகிச்சையளிப்பதுடன் அவ்வைத்தியசாலைகளைச் சுற்றிப் பலத்த இராணுவப்
பாதுகாப்பு ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. எவரும் வைத்திய
சாலைகளுக்குட் சென்று நோயாளரைப் பார்வையிட முடியாத நிலைமையே
காணப்படுகின்றது. இந்நிலையில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் உதயன்,
தினக்குரல், வலம்புரி ஆகிய நாளிதழ்களில் வன்னியில் காயமடைந்து
சிகிச்சைக்காக வவுனியா மற்றும் திருமலை வைத்திய சாலைகளுக்குக்
கொண்டுசெல்லப்பட்டவர்களின் பெயர்ப்பட்டியல்கள் பிரசுரமாகிவருகின்றன. சில
தினங்களுக்கு முன்பு பத்திரிகை வாங்கக் கடைக்குச் சென்றபோது
பத்திரிகைகள் விற்றுத் தீர்ந்துவிட்டன. கடைக்காரர் சொன்னார், 'இப்ப
காயப்படுகிற ஆக்களின்ரை பெயர்ப்பட்டியல் வாறதால பேப்பரெல்லாம் உடனை
முடிஞ்சுபோகிடுது. மேலதிகமாக அஞ்சு பேப்பர் எடுத்தும் போதாமலிருக்கு.
இன்னும் பத்துப் பேப்பர் மேலதிகமாய் எடுத்தால்தான் சரிப்பட்டுவரும்.'
இதைக் கேட்டு நான் வேதனைக்குள்ளானேன். யாழ்ப்பாணத்தில் பத்திரிகை
விற்பவர் உட்பட எல்லா வியாபாரிகளுமே யுத்தம் தொடர்வதைத்தான்
விரும்புகின்றனர்.

மேலும் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து இராணுவக்
கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்துசேரும் வன்னி மக்களைப் படைத்தரப்பினர்
வவுனியா மற்றும் மன்னார் பகுதிகளிலமைக்கப்பட்ட புனர்வாழ்வு முகாம்களில்
தங்கவைத்திருப்பதாகச் செய்திகள் வெளியாகின்றன. இம்முகாம்களிலிருந்து
எவரும் வெளியேறிச் செல்ல முடியாதவாறு பாதுகாப்பு ஏற்பாடுகள்
பலப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றிலிருக்கும் இளம்வயதினரின் நிலைமை
கேள்விக்குள்ளாகி வருகின்றது. கடந்த சில தினங்களில் இம்முகாம்களில்
தங்கவைக்கப்பட்டிருந்த இளம்வயதினரில் 28 பேர் காணாமற்போயுள்ளனர். மேலும்
இங்குள்ள பெண்களை விசாரணைக்கென அழைத்துச்சென்றுள்ள படைத் தரப்பினர்
பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி எரித்துக் கொன்றுள்ளதாகவும் தகவல்கள்
கிடைத்துள்ளன. இதை முற்றாக மறுத்துள்ள படைத்தரப்பானது புலிகள் தமது
கட்டுப்பாட்டிலுள்ள மக்கள் வெளியேறிச் செல்வதைத் தடுக்குமோர் உத்தியாகவே
இப்பொய்ப் பிரசாரத்தை மேற்கொண்டுவருவதாகத் தெரிவித்துள்ளது.

குறிப்பு (6)

அண்மையில் வடமராட்சிப் பகுதியில் நடைபெற்ற துவாரகனின் 'மூச்சுக் காற்றால்
நிறையும் வெளிகள்' கவிதைத் தொகுதிக்கான விமர்சனக் கருத்தரங்கில் ஓர்
இலக்கியவாதி கருத்துரை வழங்கியபோது இக்கவிதை நூலுக்கான விமர்சனக்
குறிப்பொன்றைக் காலச்சுவடு டிசெம்பர் 08 இதழில் ராஜமார்த்தாண்டன்
எழுதியிருப்பதாகவும் அக்குறிப்பில் 'முதுகுமுறியப் பொதிசுமக்கும்
ஒட்டகங்கள்', 'வெள்ளெலிகளோடு வாழுதல்' போன்ற சமகால ஈழத்தின் சூழலைப்
பிரதிபலிக்கும் கவிதைகளை சூழ்நிலை பற்றிய புரிந்துணர்வின்மையால் ராஜ
மார்த்தாண்டன் முக்கியத்துவப்படுத்தவில்லையெனவும் காலச்சுவடு பெப்ருவரி
09 இதழில் ஈழத்துச் சிறுகதையென்ற பேரில் வெளியாகியுள்ள தி. மயூரனின்
'கண்ணீர் தேசம்' என்ற கதையும் சமகாலச் சூழலைப் பற்றிய காலச்சுவட்டினது
புரிந்துணர்வின்மையையே எடுத்துக் காட்டுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இவ்விமர்சனக் கருத்தரங்கு முடிவுற்று இருதினங்களின் பின்பே பெப்ருவரி
மாதக் காலச்சுவடு எனக்குக் கிடைத்தது. தி. மயூரனின் சிறுகதையை
வாசித்தபோது முழு அபத்தமாகத் தோன்றியது. குறித்த எழுத்தாளரைப் பற்றிய
அறிமுகத்தில் தினக்குரல், சுடரொளிப் பத்திரிகைகளில் கதை எழுதியிருப்பவர்
எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இவ்விரு பத்திரிகைகளுமே சராசரிக்கும்
கீழான தரத்திலமைந்த சிறுகதைகளையே பிரசுரித்துவருகின்றன என்பதும்
குறிப்பிடத்தக்கது. இக்கதையில் மாதவி என்ற பெண்ணைப் படையினனொருவன்
விரும்புவதாகவும் அவனைத் திருமணம்செய்து தருமாறு அவளது வீட்டிற்கு வந்து
கேட்பதாகவும் அவளது தந்தை மறுத்து ஆவேசிப்பதாகவும் பின்னர் அவளுடன்
கொழும்புக்குப் புறப்படத் தயாராகவுள்ள நிலையில் இரவு வீட்டிற்குள்
படையினர் உட்புகுந்து மாதவியைப் பாலியல் வல்லுறவுக்குட்படுத்த
முயலும்போது அவள் குறித்த படையினனைத் துப்பாக்கியால்
சுட்டுக்கொல்வதாகவும் வருகிறது. எழுத்தாளர் ராஜேஷ்குமாரையும்
சுஜாதாவையும் நிறைய வாசித்து வருகிறார் என நம்புகிறேன். ஏனெனில்
அவர்களின் கதைகளிலேயே மாதவிகள் தம்மைப் பாலியல் வல்லுறவுக்குட்படுத்த
வருபவர்களைச் சுட்டுக்கொல்வது சாத்தியம். சமகால யாழ்ப்பாணச் சூழலில் இது
சாத்தியமல்ல. யாழ்ப்பாணத்தில் படையினர் பெண்களை விரும்புவது வழமை. ஆனால்
அவர்களது அணுகுமுறை மயூரனின் கதையில் வருவது போன்றதல்ல. முற்றிலும்
வேறுவிதமானது. படையினனொருவன் தமிழ்ப் பெண்ணொருத்தியை விரும்பினால் அவளை
அடைய அதற்குப் பல்வேறு மாற்று வழிகளைக் கையாளக்கூடிய சாத்தியமுள்ளது.
இதற்கான ஒரு தகுந்த எடுத்துக்காட்டாக தேவராஜா சாளினியின் கொலைச்
சம்பவத்தைக் குறிப்பிடலாம் [பார்க்க: குறிப்பு(3)]. இதைத் தவிர வீட்டைச்
சோதனையிடுதல் என்னும் பேரில் உள்நுழைந்து அங்கே வெடிபொருட்களை
மறைத்துவைத்துவிட்டு வீட்டிலுள்ளவர்களே மறைத்துவைத்திருந்ததாகவும்
அவர்களுக்குப் புலிகளுடன் நீண்ட காலமாகத் தொடர்பிருக்கிறதெனவும் கூறி
அவ் வீட்டிலுள்ளவர்களைக் குறிப்பாக இளம் பெண்களை, கைதுசெய்து
கொண்டுசென்று பாலியல் வல்லுறவுக்குட்படுத்தும் சம்பவங்களும்
நிகழ்ந்துவருகின்றன. மேலும் தற்போது யாழ்குடா நாட்டில் இரவு 9:00 மணி
தொடக்கம் அதிகாலை 4:30 மணிவரை ஊரடங்குச் சட்டம் அமலிலிருப்பதால்
நள்ளிரவு வேளையில் படையினரதும் ஒட்டுக்குழுக்களினதும் அட்டகாசம்
எல்லைமீறியதாகக் காணப்படுகிறது. அண்மையில் யாழ்ப்பாணத்திலுள்ள
நாயன்மார்கட்டு என்ற பகுதியிலமைந்துள்ள அரச நிர்வாக அலுவலர் ஒருவரின்
வீட்டினுள் புகுந்த ஆயுததாரிகள் அவ்வலுவலரின் மகளை ஆயுதமுனையில்
மிரட்டிப் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கியுள்ளனர். இது போன்ற சம்பவங்கள்
யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் நிகழ்ந்துவருவது வழமையாகிவிட்டது.
இதுதவிரப் பதின்ம வயதுப் பிள்ளைகளை 'எனது ஆசையைப் பூர்த்திசெய்யாவிடின்
உனது குடும்பத்தையே சுட்டுக் கொன்றுவிடுவேன்' என மிரட்டி ஆயுததாரிகள்
சிலர் வல்லுறவுக்குள்ளாக்கிய சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. அண்மைக் காலமாக
யாழ்ப்பாணத்திலுள்ள மனித உரிமை ஆர்வலர்கள் சிலர் யாழ்குடா நாட்டில்
திருமணமாகாமலே கருத்தரிக்கும் பெண்களினது எண்ணிக்கை (குறிப்பாகப் பதின்ம
வயதினர்) வேகமாக அதிகரித்துவருவதாகவும் இதன் பின்னணியில் படையினரும்
ஒட்டுக்குழுக்களுமே இருந்துவருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்நிலையில் தி. மயூரனின் 'கண்ணீர் தேசம்' என்ற சிறுகதை காலச் சூழலைப்
பிரதிபலிப்பதில் எவ்வளவுக்கு விலகி நிற்கிறது என்பதை வாசகர்கள்
உணர்ந்துகொள்ளலாம்.

குறிப்பு (7)

வெகுசன இதழொன்றில் உதவி ஆசிரியனாகப் பணிபுரிந்து வரும் நண்பன் ஒருவன்
வில்லு என்ற திரைப்படம் தொடர்பாக விமர்சனக் குறிப்பொன்றை எழுதித்
தரும்படி கேட்டுக்கொண்டான். வில்லு யாழ்ப்பாணத்தில் வெளியாகி ஓரிரு
தினங்களே ஆகியிருந்த நிலையில் வீடியோக் கடைகளில் சீடியும்
கிடைக்காதென்பதால் சீடி கிடைத்ததும் படத்தைப் பார்த்துவிட்டு எழுதுவதாக
நண்பனிடம் சொன்னேன். அவன் படம் இப்போதுதான் வெளியாகியிருப்பதால் சீடி
வெளி வருவதற்கு ஒரு மாதமாகுமென்றும் அத்திரைப்பட விமர்சனம் அடுத்த கிழமை
தன் இதழில் வெளியாக வேண்டுமென்றும் என்னைத் திரையரங்கில் போய்ப்
பார்த்துவிட்டு உடனடியாக விமர்சனத்தை எழுதும் படியும் நுழைவுச்
சீட்டுக்கான செலவைத் தானே பொறுப்பேற்றுக்கொள்வதாகவும் அவன் கேட்டுக்
கொண்டதால் அப்படம் வெளியாகி ஓடிக்கொண்டிருந்த திரையரங்குக்குப்
போனேன். நான் போனது காலை 10:30 காட்சிக்கு. திருவிழாவைப் போல் கூட்டம்
அலை மோதியது. பிற்பகல் 2:30 காட்சியைப் பார்க்கவுள்ளோரும் அப்போதே
வந்திருந்தனர். நான் திரும்பிவிடலாமென்று தான் நினைத்தேன். அங்கே
வந்திருந்த நண்பனொருவன் நுழைவுச் சீட்டெடுக்க முண்டியடித்துக்கொண்டு
நின்றிருந்தவர் வரிசையில் தென்பட்டான். அவனிடம் 150 ரூபாய் கொடுத்துப்
பின்வரிசை நுழைவுச் சீட்டை எடுத்துக்கொண்டு உள்ளே போனேன். ஆசனங்கள்
ஏற்கெனவே நிறைந்திருந்தன. ஒதுக்குப்புறமாக இருந்த ஆசனமொன்றில்
அமர்ந்தேன். எனக்குப் பின்புறம் ஙிஷீஜ் என்னும் பெயரில் அமைக்கப்பட்ட 200
ரூபாய் நுழைவுச் சீட்டுக்குரிய கூண்டுகளுக்குள் சோடிகளாகச் சிலர்
அமர்ந்திருந்தனர். ஒருவாறு 10:45 மணியளவில் படம் தொடங்கியது. இளம்
வயதினர் துள்ளிக்குதித்துக் கூக்குரலிட்டு ஆரவாரித்தனர். சிலர்
உள்ளங்கைகளில் கற்பூரம் கொழுத்திச் சுற்றினர். வேறு சிலர் கரகோச
மெழுப்பியும் விசிலடித்தவாறுமிருந்தனர். இந்த ஆரவாரங்கள் ஓய்வதற்குச்
சுமார் பத்து நிமிடங்கள் எடுத்தன. பின்னர் கூண்டுப் பகுதியிலிருந்து
இடைக்கிடையே (படம் முடியும்வரை) முனகல் சத்தங்கள் கேட்டன. உண்மையில் நான்
திகைப்படைந்துபோனேன். நான் யாழ்ப்பாணத்தில்தான் இருக்கிறேனா? என ஒரு
கணம் அதிர்ந்துதான் போனேன். படம் முடிந்து வரும்போது நண்பனிடம் இது
குறித்த ஆதங்கத்தைத் தெரிவித்தேன். அவன் சிரித்து விட்டுச் சொன்னான்.
'யாழ்ப்பாணத்தில இண்டைக்கு மொத்தமாக 3 தியேட்டர் இயங்குது.
எல்லாத்திலயும் இது நடக்குது. நாதன் தியேட்டருக்குப் போய்ப்பார்.
மூன்றாவது மாடியில படுக்கையறை வசதியளுமிருக்கு. அதுக்குள்ள சோடியள்
மட்டுந்தான் போகலாம். சோடியள் முதல்ல சேர்ந்து வாறேல்ல. பொடியன் வந்து
தியேட்டருக்குள்ள நிண்டுகொண்டு மிஸ்ட்கோல் அடிக்கப் பெட்டை வரும்.
இரண்டு பேரும் ரிக்கற் எடுத்துக்கொண்டு மூண்டாம் மாடிக்குப் போவினம்.
இன்ரேர்வலுக்கும் வெளில வராயினம். ஆனால் படம் முடிய முன்னம் வெளிக்கிட்டு
வேற வேற திசையால போவினம்.' அவன் இதையெல்லாம் ஒரு சாதாரண நிகழ்வாகவே
கருதுகிறான். யாழ்ப்பாணத்தின் பண்பாடு, விழுமியம் என அனைத்தையுமே
திட்டமிட்டுச் சீரழிக்கும் செயற்பாடுகள் 1996 காலப்பகுதியில் யாழ்ப்பாணம்
படையினரின் ஆக்கிரமிப்பிற்குள் வந்ததும் படிப்படியாக ஆரம்பித்தன. இதனொரு
பகுதிதான் யாழ்நகரில் திரையரங்குகளை மீளவும் செயற்பட அனுமதி
வழங்கியமையாகும். இதைத் தொடர்ந்து 2002 காலப்பகுதியில் புரிந்துணர்வு
உடன்படிக்கை கைச்சாத்தாகித் தரைவழிப் பாதை திறந்தவுடன் கைத்தொலைபேசிப்
பாவனை மிகப் பரவலடைந்தது. இப்போது 2700 ரூபாய் விலையில் டயலொக்
நிறுவனம் யாழ்ப்பாணத்தில் கைத்தொலைபேசியை அறிமுகப்படுத்தியுள்ளது.
விற்பனை முகவர் நிலையங்களெங்கும் இளம் பிராயத்தினர் கூட்டம்
அலைமோதுகிறது. இன்றைக்கு யாழ்ப்பாணத்தில் கைத்தொலைபேசிகளை
நோண்டிக்கொண்டும் காதில் வைத்துக்கொண்டும் அலையும் இளம் பிராயத்தினரே
நீக்கமற நிறைந்துள்ளனர்.

இதற்கிடையில் நான் வில்லு பற்றிய எனது விமர்சனத்தை நண்பனுக்கு
அனுப்பிவைத்தேன். குறித்த விமர்சனம் அவ்வெகுசன இதழில் வெளிவந்ததைப்
பார்த்தபோது உண்மையில் அதிர்ச்சியடைந்தேன். நான் மூன்று பக்கங்களில்
எழுதியிருந்த விமர்சனம் ஒரு பக்கத்தில் சுருக்கப்பட்டு இடைவெளிகளுக்குள்
வில்லுவின் வண்ணமயமான 'ஸ்ரில்'கள் சொருகப்பட்டிருந்தன. நண்பனிடம்
தொடர்புகொண்டு கேட்டபோது எனது விமர்சனத்தைப் பரிசீலனைக்கு
எடுத்துக்கொண்ட ஆசிரியர் குழுவானது நயன்தாரவைப் பற்றி மோசமாக
எழுதப்பட்டிருப்பதாகவும் அவர் ஈழத் தமிழர்களுக்கு 5,00,000 ரூபாவை
நன்கொடையாக வழங்கியிருப்பதால் இவ்விமர்சனம் முழுமையாகப் பிரசுரமானால்
வாசகர்களின் எதிர்ப்பைச் சந்திப்பதுடன் விஜய் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக
உண்ணாவிரதமிருந்ததால் அவரைக் கிண்டலடித்து எழுதிய பகுதிகளை வெளியிடுவதும்
குறித்த இதழின் விற்பனையில் சரிவை ஏற்படுத்திவிடுமெனக் கருதி எனது
விமர்சனம் சுருக்கப்பட்டதாக அவன் விளக்கமளித்ததுடன் வெகுவிரைவில்
நுழைவுச் சீட்டு மற்றும் விமர்சனப் பகுதிக்கான கொடுப்பனவுகளை உள்ளடக்கிய
650 ரூபாய் பெறுமதியான காசோலை எனது முகவரிக்கு அனுப்பிவைக்கப்படுமெனவும்
தெரிவித்தான்.

குறிப்பு (8)

இந்த வருடத்தின் பெப்ருவரி நான்காம் திகதி இலங்கை சனநாயகச் சோசலிசக்
குடியரசின் அறுபத் தொராவது சுதந்திர தினம் தலைநகர் கொழும்பில்
வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டது. முன்னைய வருடங்களில் கொண்டாடப்பட்ட
சுதந்திர தினங்களைக் காட்டிலும் இது சிங்களப் பேரினவாதிகளுக்கு
இவ்வாண்டின் சுதந்திர தினம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக
அமைந்துவிட்டது. ஏனெனில் இவ்வாண்டின் தொடக்கத்தில் புலிகளின் கோட்டை
எனக் கருதப்பட்ட கிளிநொச்சியைப் படையினர் கைப்பற்றி ஏ-9 வீதியையும்
திறந்துவிட்டனர். இதன் பிரதிபலிப்போ யாழ்ப்பாணத்தில் வேறுவிதமாக
அமைந்திருந்தது. சுதந்திர தினத்திற்குச் சில வாரங்கள் முன்னதாகவே
மோட்டார் சைக்கிள்கள் உட்படச் சகல வாகனங்கள் மற்றும் வீடுகளிலும்
சிங்கக் கொடி பறக்கவிடப்பட வேண்டுமென்ற கடுமையான உத்தரவு
பிறப்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து வியாபாரிகள் பாடு
படுகொண்டாட்டம்தான். ரூ. 300 தொடக்கம் ரூ. 1000 வரையான விலைகளில்
சிங்கக் கொடிகள் அமோகமாக விற்பனையாகின - சிங்கக் கொடியைப்
பறக்கவிடாதோர் படையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து
குறித்த ஒரு நாளில் சிங்கக் கொடி விற்பனை 25,000 ரூபாயை எட்டியதாகத்
தெரியவந்தது. பெப்ருவரி மாத முடிவில் சிங்கக் கொடியின் விற்பனை வருமானம்
ரூ. 7,00,000 எனக் கணக்கிடப்பட்டது. யாழ்நகரின் புத்தக சாலை உரிமையாளர்
ஒருவர் சொன்னார், 'புத்தகங்களை விக்கிறதைக் கைவிட்டுட்டு இனிச் சிங்கக்
கொடி விக்கலாம்போல இருக்கு.'

குறிப்பு (9)

யாழ்ப்பாணத்தில் மின்விநியோகம் மூன்று மின்பிறப்பாக்கிகள் மூலமே
நடைபெற்றுவருகிறது. இதனடிப்படையில் தினமும் மாலை வேளைகளில் 6:30 அல்லது
7:30 மணிக்கு அமல்படுத்தப்படும் மின்வெட்டு ஏறத்தாழ இரண்டு
மணித்தியாலங்கள்வரை நீடிக்கும். சில தினங்களில் இரவு முழுவதும்
மின்வெட்டு நிகழ்வதும் வழமையாகிவிட்டது. பிரதேசச் செயலக மட்டத்தில்
மின்சார சபை ஊழியர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலொன்றில் இம்மின்தடை
பற்றி விவாதித்தபோது அவர்கள் சட்டரீதியற்ற மின் பாவனை
அதிகரித்திருப்பதாகவும் தவிர்க்க முடியாத சில காரணங்களால் நடவடிக்கை
எடுக்க முடியாதிருப்பதாகவும் தெரிவித்தனர். அவர்களிடம் தனிப்பட்ட
முறையில் விசாரித்தபோது சில இடங்களில் இராணுவத்தினரே தமது
முகாம்களுக்குச் சட்டரீதியற்ற மின்னிணைப்புகளை மேற்கொண்டு மின்சாரம்
பெறுவதாகவும் வேறு சில இடங்களில் தனிப்பட்டவர்கள் சட்டரீதியற்ற மின்
பாவனையை மேற்கொண்டு வருவதையறிந்து அம்மின்னிணைப்புகளைத் துண்டித்து
நடவடிக்கை எடுக்க முயன்றபோது இராணுவத்தினர் வந்து மின்னிணைப்புகளைத்
துண்டித்தால் சுட்டுக் கொன்றுவிடுவோம் என மிரட்டியதாகவும் வேறுசில
இடங்களில் விசாரித்துப் பார்த்தபோது அத்தனிப்பட்டவர்களின்
குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் இராணுவத்தினருடன் பாலியல் தொடர்புகளை
வைத்திருப்பதாகவும் அறிய முடிந்ததெனத் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

வணக்கம்!

"ஓடும் நதி.....!"



பதிவுக்கான மறுமொழிப் பெட்டி

நன்றி..!

♥ ஆதிசிவம்@சென்னை ♥

www.odumnathi.blogspot.com

smail

நன்றி....!

நன்றி....!

Locate IP Address on Map

Blog Widget by LinkWithin

இலவச மின் சந்தா

Enter your email address:

Delivered by FeedBurner

ஏதாவது சொல்லணும் தோனுதா....?

Guestbook

http://www.google.co.in/transliterate/indic/Tamil

தமிழில் எழுத....
ammaa=அம்மா appaa=அப்பா
குறிப்பு:
ஆங்கில தட்டச்சுக்கு மாற  Ctrl+g பட்டணை அழுத்தவும்
தமிழ் தட்டச்சுக்கு     மாற Ctrl+g  பட்டணை அழுத்தவும்
animated gifs

சற்று முன்...!

இந்த வலைப்பதிவில் தேடு

லேபிள்கள்

முந்தைய பதிவுகளில் மூழ்கித் தேட....!