இது மிக ஆபத்தான மெளனம் : இந்த மெளனம் தொடர்ந்தால் மூன்று இலட்சம் மக்களும் அழிந்து போவார்கள்
இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக சிறிலங்க அரசு நடத்திய இனப் படுகொலைப் போரில் தங்களின் குடும்பம், இல்லம், சொந்தங்கள், சொத்துப் பத்துகள், நிலம், தொழில் என்று அனைத்தையும் இழந்து, எந்த வன்னி மண்ணில் ஒராண்டுக்கு முன்னர் வரை வளமாக வாழ்ந்தனரோ அதே பூமியில் இன்று முகாம்களில் அடைப்பட்டுக் கிடக்கும் ஈழத் தமிழர்கள் அனுபவித்துவரும் கொடுமைகள், எங்கே அவர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக அழிக்கப்பட்டுவிடுவரோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இறுதிப் போரில் சிறிலங்க இராணுவமும், விமானப் படையும் நடத்திய கொடூரத் தாக்குதலி்ல் உயிரிழந்த பல பத்தாயிரக்கணக்கான மக்கள் போக, குண்டடிபட்டு, கை, கால் இழந்து, மருத்துவ சிகிச்சை ஏதுமின்றி, சிங்கள இராணுவத்திடம் சிக்கிய சற்றேறக்குறைய 3 இலட்சம் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள 33 முகாம்களில் கடந்த வாரத்தில் பெய்த அடை மழையால் ஏற்பட்ட வெள்ளம் அவர்களை பெரும் அவதிக்கு ஆளாக்கியுள்ளது.
எங்கு பார்த்தாலும் தண்ணீர் தேங்கிக் கிடக்கிறது. பல இடங்களில் இடுப்பளவிற்கு நீர் பெருக்கு, எங்கும் தண்ணீர் சூழ்ந்ததால், அங்கு பூமியில் குழி வெட்டி ஏற்படுத்தப்பட்ட கழிவுக் குழிகள் சிதைந்து அதில் தேங்கியிருந்த கழிவுகள் வெள்ள நீருடன் கலந்து சுற்றுச் சூழலை கெடுத்துள்ளது, சமைக்க அளிக்கப்பட்ட விறகுகள் மழையில் நனைந்து ஈரமானதால் கொடுத்த கொஞ்ச நஞ்ச உணவுகளை சமைத்து உண்ண வழியில்லை, மழையால் அந்தச் செம்மண் பூமி சேறானதால் அந்தப் பகுதிக்கு வாகனங்களில் தூய குடி நீர் கூட கிடைக்காமல் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள இம்மக்கள் நரக வேதனையில் தள்ளப்பட்டுள்ளார்கள் என்று வந்த வந்து கொண்டிருக்கும் செய்திகள் கவலையை ஏற்படுத்தியுள்ளன.
இப்படிப்பட்ட நிலை ஏற்படும் என்றும், வட கிழக்கு பருவமழை பொழியும் காலத்தில் தாழ்வான பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த முகாம்களில் வெள்ள நீர் தேங்கும் நிலை ஏற்படும் என்றும், அதன் காரணமாக, ஏற்கனவே மோசமான சுகாதார சூழல் உள்ள அப்பகுதியில் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்படும் என்று அந்த முகாம்களுக்கு சென்று வந்தவர்கள் அபாய எச்சரிக்கை விடுத்தனர்.
பாதுகாப்பு வலயப் பகுதியில் தஞ்சமடைந்துள்ள முன்றரை இலட்சம் மக்களைக் காப்பாற்றுங்கள் என்று உலக நாடுகளுக்கு புலம் பெயர்ந்த தமிழர்களும், மனித உரிமை அமைப்புகளும் அபாய அறிவிக்கை செய்தும் போரை நிறுத்தி மக்களைக் காக்க எந்த நடவடிக்கையும் உலக நாடுகளும் ஐ.நா.வும் எடுக்காததால் இறுதிக் கட்டப் போரில் ஐம்பதாயிரத்திற்கும் அதிகமான மக்கள் சிறிலங்கப் படைகளால் கொல்லப்பட்டது மட்டுமின்றி, அந்த அடையாளங்களும் அழிக்கப்பட்டுவிட்டன. இந்த நிலையில், மிகக் கொடுமையான சூழலில், போதுமான அடிப்படைத் தேவைகளும், வசதிகளும் இல்லாத முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களை இயற்கையால் ஏற்படும் அந்த ஆபத்தில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்று மனித உரிமை கருத்தரங்குகளில் பேசப்பட்டும், அதற்கான முயற்சிகளும் எடுக்கப்பட்ட சூழலில், சற்றும் எதிர்பாராத வகையில் திடீரென்று மழை பெய்து அவர்களின் துயரத்தைப் பண்மடங்காகியுள்ளது.
திசை திருப்பும் சிறிலங்க அரசு!
போர் முடிந்துவிட்டது, விடுதலைப் புலிகளை முற்றிலுமாக அழித்துவிட்டோம், இதற்கு மேல் அவர்களால் துளிர் விட முடியாது என்று கொழும்புவில் இருந்து கொண்டு வீர வசனம் பேசிம் சிறிலங்க அரச தலைவர்கள், முகாம்களில் அடைக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான எந்த வசதியையும் ஏற்படுத்தித் தரவில்லை. அதற்கான நிதிப் பலமும் சிறிலங்க அரசிற்கு இல்லை.
ஈழத் தமிழர்களை அழித்தொழிக்க உலக நாடுகளிடமும், பன்னாட்டு நிதி அமைப்புகளிடமும் வாங்கிய கடன்கள் அனைத்தையும் இராணுவத்திற்கு செலவிட்டுவிட்டு, போரில் இறந்து போன இராணுவ வீரர்களுக்கு அளிக்க வேண்டிய மாத ஊதியத்தைக் கூட தர வக்கற்ற நிலையில், இறந்த போன வீரர்கள் பல்லாயிரக்கணக்கானோரை காணாமல் போனவர்கள் பட்டியலில் வைத்து சிங்கள மக்களை ஏமாற்றிவரும் சிறிலங்க அரசு, முகாம்களில் உள்ள மக்களை ஐ.நா.வின் அகதிகள் அமைப்பிடம் ஒப்படைக்காமல், தனது கட்டுப்பாட்டிலேயே வைத்து விசாரணை என்ற பெயரில் அவர்களைப் பிரித்து, துன்புறுத்தி கொன்று வருகிறது. இதனை உலகம் அறிந்து கொள்ளாமல் தடுக்க முகாம்களுக்கு பத்திரிக்கையாளர்களை அனுபதிக்க மறுத்து வருகிறது. அதன் இப்படிப்பட்ட நடவடிக்கைகளுக்கு இந்தியா, சீனா போன்ற தெற்காசிய வல்லரசுகள் துணை போய்க்கொண்டிருக்கின்றன.
முகாமிலுள்ள மக்களை தங்களிடம் ஒப்படைக்காத நிலையிலும், அவர்களுக்குத் தேவையான இருப்பிட வசதிகளை (கூடாரங்கள், சமையல் பாத்திரங்கள் போன்றவற்றை) ஐ.நா.வின் அகதிகள் அமைப்புதான் வழங்கி வருகிறது. இந்த மூன்று இலட்சம் மக்களுக்கும் தேவையான உணவும் ஐ.நா.வின் உலக உணவும் திட்டத்தின் கீழ்தான் வழங்கப்படுகிறது. ஆனால் அவர்களை நேரடியாக அம்மக்களிடம் விநியோகிக்க அனுமதிக்காமல், சிறிலங்க இராணுவமே பெற்றுக் கொண்டு விநியோகித்து வருகிறது (ஐ.நா.வின் இந்தத் திட்டத்திற்கும் போதுமான நிதி உலக நாடுகள் இடமிருந்து வராததால், தங்கள் திட்டத்தின் கீழ் வழங்கிவரும் உணவு அளவை பாதியாகக் குறைக்கும் நிலை ஏறபட்டுள்ளது என்று இவ்வமைப்பு கூறியுள்ளது). உண்மை இவ்வாறிக்க, மழையினால் முகாம்களில் உள்ள மக்களுக்கு ஏற்பட்டுள்ள அவதிகளுக்கு ஐ.நா.தான் காரணம் என்று கூசாமல் கூறியுள்ளார் சிறிலங்க பாதுகாப்புத் துறைச் செயலர் கோத்தபய ராஜபக்ச! “தமிழர்கள் எங்கள் மக்கள், அவர்களை எப்படிப் பாதுகாப்பது என்று எங்களுக்குத் தெரியும், இப்போதே அவர்கள் வாழ்ந்த இடங்களில் குடியமர்த்த முற்பட்டால் அங்கு புதைத்து வைக்கப்பட்டிருக்கும் கண்ணி வெடிகளில் சிக்கி அவர்கள் உயிரிழக்க நேர்ந்தால் யார் பொறுப்பு? நாங்களல்லவா?” என்று கருணைக் கடலாகப் பேட்டி அளித்துவிட்டு, அவர்களைக் காப்பாற்ற வக்கற்று, எல்லாவற்றையும் ஐ.நா.தான் செய்கிறது, எனவே அவர்களே பொறுப்பு என்று கூறுவது எவ்வளவு வெட்கம் கெட்டப் பேச்சு. ஆனால் வெட்கம், கருணை, மனிதாபிமானம் என்பதெல்லாம் இந்த பெளத்த - சிங்கள இனவெறியாளர்களிடம் தேடினால் எங்கிருந்து கிடைக்கும்!
மூன்று இலட்சம் மக்களுக்கு ஒரு வேளை உணவு மட்டுமே கொடுத்துவிட்டு, குடிக்க தண்ணீர் பெறவும், கழிவறைக்கு செல்வதற்காகவும் அவர்களை நாள் முழுவதும் வரிசையில் நிற்க வைத்து நாளும் அலைக்கழித்துவரும் இந்த வெறியர் இன்று கூறுகிறார் ‘அவர்களிடையே பதுங்கியுள்ள புலிகளைத் தேடுகிறோம், எல்லா புலிகளையும் தேடி கண்டு பிடிக்கும் வரை மீள் குடியமர்த்த முடியாது. அவர்களை இப்போதே வெளியில் விட்டால் வன்னிக் காடுகளில் புதைத்து வைத்துள்ள ஆயுதங்களை எடுத்து மீண்டு்ம் போரைத் துவக்கி விடுவார்கள்’.
“விடுதலைப் புலிகளே இல்லை, எல்லோரையும் ஒழித்துவிட்டோம். புலிகளின் படியி்ல் இருந்து தமிழர்களை மீட்டு விட்டோம்” என்று சிங்களப் படைத் தளபதி சரத் பொன்சேகாவும், நாடாளுமன்றத்தில் ராஜபக்சவும் வீராவேசத்தோடு முழங்கினார்களே? இப்போது மீண்டும் புலிகளைத் தேடுவது எதற்கு?
கோத்தபய கூறியதில் இருந்து ஒரு உண்மை வெளிவந்துள்ளது. முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள மக்களில் இருந்த பல ஆயிரக்கணக்கான (24,000 பேர் என்று கூறுகிறார்கள்) இளம் வயதினரை தனியாக பிரித்து அவர்களைப் புலிகள் என்று முத்திரையிட்டு, சித்தரவதை செய்து வருகின்றனர். அந்தப் பகுதிகளுக்கு யாரையும் நுழைய விடாமல் பலத்த பாதுகாப்பு போட்டுள்ளது சிறிலங்க இராணுவம்.
இவர்கள் மட்டுமின்றி, மேலும் 3,000 இளம் பெண்களை அவர்களின் குடும்பத்தாரிடமிருந்து பிரித்து கடத்தி சென்றுள்ளனர். அவர்களின் கதி என்ன என்பது இன்றுவரை தெரியவில்லை என்றும் தகவல்கள் கூறுகின்றன. மீதமுள்ள மக்களையும் நாளுக்கு ஒரு வேளை உணவு மட்டுமே கொடுத்து கொஞ்சம் கொஞ்சமாக கொல்கின்றனர். இப்படிப்பட்ட வதைகளையெல்லாம் இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மனியின் நாஜி முகாம்களில் நடத்தப்பட்டதை வரலாறு படித்தவர்கள் அறிந்திருப்பர். அதையே இன்று ஈழத் தமிழர்கள் மீது செயல்படுத்துகிறது சிறிலங்க அரசு.
இதையெல்லாம் இந்தியாவும், சீனாவும், பாகிஸ்தானு்ம் ஏற்றுக் கொள்ளலாம், ஏனென்றால் இந்த மூன்று நாடுகளுமே தமிழினப் படுகொலைக்கு எல்லா விதத்திலும் உதவின. ஆனால் மற்ற உலக நாடுகள் ஏன் மெளனம் சாதிக்கின்றன என்பதுதான் புரியவில்லை.
இறுதிக் கட்டப் போரில் பல பத்தாயிரக்கணக்கான அப்பாவி மக்களை படுகொலை செய்ததை அறிந்து அதிர்ச்சியுற்ற உலக நாடுகள், அதற்காக பன்னாட்டு விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிய உலக நாடுகள், இன்று முகாம்களில் 3 இலட்சம் மக்களை முட்கம்பி வேலிகளுக்குள் சிறைப்படுத்தியிருப்பதை ஏன் கண்டும் காணாமல் இருக்கின்றன. இது மனித உரிமை மீறலில்லையா? தன்னால் காப்பாற்றப்பட வேண்டிய மக்களை முகாம்களில் அடைத்து வைத்து ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டுமே உணவு கொடுத்து கொல்கிறதே சிறிலங்க அரசு, இது அவர்களை காப்பாற்றம் பொறுப்பை திட்டமிட்டே தவிர்க்கும் குற்றம் அல்லவா?
போர் முடிந்துவிட்டது என்று அறிவித்தப் பின்னரும் அப்பகுதிக்கு பத்திரிக்கையாளர்களையும் மற்ற ஊடகங்களையும் அனுமதிக்காததை அம்னெஸ்டி மட்டுமே கண்டிக்கிறதே, ஐ.நா. ஏன் வாய் திறக்கவில்லை? அந்த மக்கள் அனுபவித்துவரும் கொடுமைகளை ஏன் ஐ.நா. பாதுகாப்புப் பேரவை விவாதிக்கவில்லை?
இது மிக ஆபத்தான மெளனம். இந்த மெளனம் இன்னும் சில மாதங்களுக்குத் தொடர்ந்தால் இந்த மூன்று இலட்சம் மக்களும் கொஞ்சம் கொஞ்சமாக சிறிலங்க அரசப் படைகளாலும், அங்கு நிலவும் படுமோசமான சூழலால் ஏற்படப்போகும் தொற்று நோய்களாலும் அழிந்து போவார்கள்.
அப்படி ஒன்று நிகழுமானால், இந்த உலகில் ஐ.நா.வும் (ஏற்கனவே அது ‘கைப்பாவை’ என்று அந்தஸ்த்துடன்தான் உள்ளது), அதன் மனித உரிமை அமைப்புகளும், அதன் அமைவிற்கு அடிப்படையான தார்மீக நெறிமுறைகளுக்கும் எந்த மரியாதையுமின்றி போய்விடும்.
இறுதிக் கட்டப் போரில் கொல்லப்பட்டவர்களை கண்டு கொள்ளாமல் விட்டதுபோல, இன்றுவரை உயிருடன் இருக்கும் இம்மக்களையாவது காத்து தங்கள் தார்மீக கடமைகளை உலக நாடுகள் நிறைவேற்றட்டும்.
இங்குள்ள தலைவர்களும் அங்கு சுமூக நிலை நிலவுகிறது என்று விவரம் தெரியாமல் பேசுவதைத் தவிர்த்துவிட்டு, மனிதாபிமான அடிப்படையிலாவது அவர்களை காப்பாற்றுமாறு குரல் கொடுக்கட்டும்.
நமது நாட்டில் மத்திய அரசிலாகட்டும், மாநிலங்களிலாகட்டும் ஆட்சியில் அமரும் எந்த கட்சி அல்லது கூட்டணியாயினும் தாங்கள்தான் இந்த நாட்டின் ஒற்றுமையையும், இறையாண்மையும் காக்கப் பிறந்த தேச பக்தர்கள்போல் பேசுவார்கள், சட்டம் இயற்றுவார்கள், வலிமையான பாதுகாப்பு வலயத்திற்குள் நின்று கொண்டு பிடிக்க முடியாத பயங்கரவாதிகளுக்கு இந்த நாட்டின் சார்பாக கடும் எச்சரிக்கைகளை விடுப்பார்கள்.
ஆயினும் பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடரும், அப்பொழுதெல்லாம் மேற்குறிப்பிட்டது போல் வசனங்கள் பேசுவதும் தொடரும். எப்படி இந்தத் தாக்குதல் நடந்தது, அதற்கு எவருடைய செயலின்மை காரணம் என்றெல்லாம் இரண்டு, மூன்று நாட்களுக்குப் பேசுவார்கள். பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்கள் போக, படுகாயமடைந்தவர்களை மருத்துவமையில் சென்று பார்த்து ஆறுதல் கூறிவிட்டு வருவார்கள். அப்போதெல்லாம் முகத்தை மிகப் பரிதாபமாக வைத்துக் கொண்டு காயம் பட்ட குடும்பத்தினருடன் அக்கறையுடன் பேசுவார்கள்.
அதன்பிறகு, அடையாளம் தெரியாத அந்தப் பயங்கரவாதிகள் எங்கிருந்து வந்தார்கள் என்று பேச ஆரம்பித்து, பக்கத்து நாடுகளை பழிக்கு இழுத்து பிரச்சனையை எல்லையைக் கடந்து கொண்டு சென்று ஆக்ரோஷமாக விவாதிப்பார்கள். வழக்கு நடக்கும்… பல ஆண்டுகளுக்கு. இப்படித்தான் இருபது ஆண்டுகளாக இந்த நாட்டில் நடைபெற்று வருகிறது. பயங்கரவாத தாக்குதல்களும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. வீர வசனங்கள் பேசும் தலைவர்கள்தான் மாறுகின்றனரே தவிர, வசனங்கள் என்னவோ அதேதான்.
அப்படியான வசனங்களில் ஒன்றுதான் ‘இந்த தேசத்தின் ஒற்றுமை மற்றும் இறையாண்மைக்கு பங்கம் ஏற்படுவதை சகித்துக் கொள்ள மாட்டோம்’ என்பது. தேசப் பாதுகாப்பில் தங்களுக்கு உள்ள பற்றைக் காட்ட இவர்கள் சட்டமியற்றுவார்கள். சட்டமியற்றி பயங்கரவாதத்தை எப்படி ஒடுக்குவீர்கள் என்றால் பதிலிருக்காது. அவ்வாறு இயற்றப்பட்ட சட்டங்களால் எந்த அளவிற்கு பயங்கரவாத நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன என்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்படும் போது, அந்த சட்டம் போதுமானதாக இல்லை, அதனை மேலும் வலுவூட்ட வேண்டும் என்று பதில் கூறி, சட்டங்களை மேலும் கடுமையாக்குவார்கள்.
இப்படி சட்டங்களைப் போட்டு, அதில் திருத்தம் கொணர்ந்து மேலும் பலப்படுத்தி பாதுகாப்புப் படைகளுக்கு அதிகாரமளித்து இவர்களால் மேம்படுத்தப்பட்ட சட்டங்கள் அதன் பிறகாவது பயங்கரவாதத்தை வேரறுத்ததா என்றால் இல்லை! ஆனால் இப்படிப்பட்ட சட்டங்களைக் காட்டி தங்கள் அரசியல் எதிரிகளை (எதிர்கட்சி்த் தலைவர்களைத்தான்) கைது செய்து உள்ளே வைப்பது, அப்பாவிகளை கைது செய்து, போதுமான சட்ட வசதிகளை அளிக்காமல் குற்றவாளியாக்கி தண்டிப்பது, அவரே காஷ்மீரத்தைச் சேர்ந்தவராக இருந்தால் தூக்கு தண்டனை கொடுத்துவிட்டு, அவரை ஏன் இன்னமும் தூக்கி்ல் போடவில்லை என்று தேசப்பற்றுடன் குரல் எழுப்புவார்கள். இப்படிபட்ட நாடகங்கள் நமது நாட்டில் குறைவின்றி நடந்து வருகின்றன.
தங்கள் அரசியல் எதிரிகளை மட்டுமல்ல, அதையும் தாண்டி சில நேரங்களில் மனித உரிமைக்களுக்காக குரல் எழுப்புபவர்களையும் மிரட்டுவதற்கு இந்தச் சட்டங்கள் பயன்படுத்தப்படுகிறது. அப்படிப்பட்ட ஒரு நடவடிக்கையைத்தான் தமிழக அரசு எடுத்துள்ளது.
அதுதான் நாளிதழ்களில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ள தமிழக அரசின் ஒரு அறிவிப்பு. “தடை செய்யப்பட்ட இயக்கங்களை ஆதரித்துப் பேசுவது, தடை செய்யப்பட்ட இயங்கங்களின் தலைவர்களின் படங்கள், கொடி மற்றும் இலச்சினைகளை பொது விளம்பரங்களுக்கு உபயோகித்தல் மற்றும் பத்திரிக்கை, தொலைக்காட்சிகளில் பிரசுரித்தல்/ காண்பித்தல் ஆகியவை சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (Unlawful Activities (Prevention) Act -1967) படி தண்டனைக்குரிய குற்றங்களாகும். எனவே, பொதுக் கூட்டங்கள், மாநாடு, பேரணி போன்றவற்றை நடத்துபவர்கள் யாராயினும், எந்த அமைப்பைச் சார்ந்தவர்களாயினும் இதை மனதில் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது. மீறுபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் எச்சரிக்கப்படுகிறது” என்று தமிழக அரசின் தலைமைச் செயலர் பெயரில் ஒரு விளம்பரம் செவ்வாய்கிழமையன்று காலையிலும், மாலையிலும் எல்லா நாளிதழ்களிலும் வெளிவந்துள்ளது.
அந்தச் சட்டம் கூறுவது என்ன?
1967ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டு, கடந்த ஆண்டு மும்பையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலிற்குப் பிறகு கடுமையாக்கப்பட்ட சட்டத்திற்கு முரணான நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் நோக்கம்:
“இந்தியாவின் இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் எதிரான நடவடிக்கைகளை எதிர்கொள்வதற்குரிய அதிகாரங்களை வழங்கவும், நாட்டின் நலன் கருதி கருத்துரிமைக்கும், ஒன்று கூடுவதற்கும், அமைப்பு அல்லது சங்கங்களை உண்டாக்குவதற்கும் உள்ள உரிமைகள் மீது காரணத்திற்குரிய அளவிற்கு கட்டுப்பாடுகளை (Reasonable restrictions) விதிக்க அரசிற்கு அதிகாரமளிக்கவும் இச்சட்டம் நிறைவேற்றப்படுகிறது” என்று கூறுகிறது.
இதுமட்டுமின்றி, மும்பைத் தாக்குதலிற்குப் பிறகு, பயங்கரவாத நடவடிக்கைகளை ஒடுக்குவதற்கு சில திருத்தங்களும் நிறைவேற்றப்பட்டு சேர்க்கப்பட்டபோது, இச்சட்டத்தின் நோக்கத்தை விரிவுபடுத்தும் ஒரு முகப்புரையும் (Preamble) சேர்க்கப்பட்டது. அதன்படி, 2001ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகரின் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து கூடிய ஐ.நா.வின் பாதுகாப்புப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் எண் 1373இன் படியும், அதற்கு முன்னரும் ஐ.நா.பா.பே. நிறைவேற்றிய பல்வேறு தீர்மானங்களின் அடிப்படையிலும், பயங்கரவாதத்தை சர்வதேச அளவில் ஒடுக்குவதற்கு ஏதுவாக இச்சட்டம் பல்வேறு துணைப் பிரிவுகள் சேர்க்கப்பட்டு கடுமையாக்கப்பட்டது.
இச்சட்டத்தின் பகுதி 4 பயங்கரவாத நடவடிக்கை மேற்கொள்வோர் மீது தண்டனை அளிப்பது குறித்து வரையறை செய்கிறது. அதில் பயங்கரவாத செயல் எது என்பது குறித்தும் வரையறுக்கப்பட்டுள்ளது (இதனை குறிப்பிடும் இச்சட்டத்தின் பிரிவு 15, 2008ஆம் ஆண்டு திருத்தப்பட்டுச் சேர்க்கப்பட்டது).
“இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு அல்லது இறையாண்மை ஆகியவற்றிற்கு எதிராகவோ அல்லது மக்களை அல்லது ஒரு பகுதி மக்களை அச்சுறுத்தும் நோக்குடனோ இந்தியாவிலோ அல்லது அயல் நாட்டிலோ, வெடிகுண்டுகள், டைனமைட் அல்லது வேறு ஏதாவது வெடிபொருள் அல்லது எரிக்கின்ற பொருள் அல்லது துப்பாக்கிகள் அல்லது மற்ற கடுமையான ஆயுதங்கள் அல்லது விஷ வாயுக்கள் அல்லது இரசாயண பொருட்கள் அல்லது அபாயத்தை விளைவிக்கக் கூடிய உயிரியல் பொருட்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி இந்தியாவிலோ அல்லது அயல் நாட்டிலோ மக்களை அச்சுறுத்தும் நோக்குடன் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் பயங்கரவாத செயல்கள் ஆகும்” என்று கூறியுள்ளது.
ஆக, இந்தச் சட்டத்திற்கு முரணான நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் நோக்கம் (அதன் திருத்தத்திற்குப் பிறகு) இரண்டு தான்:
இந்தியாவின் இறையாண்மை, ஒற்றுமை, ஒருமைப்பாடு ஆகியவற்றிற்கு எதிரான செயல்பாடுகளைத் தடுப்பது;
இந்தியாவின் இறையாண்மை, ஒற்றுமை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு ஆகியவற்றை சீர்குலைக்கும் நோக்குடன் இந்தியாவிலோ அல்லது அயல்நாட்டிலோ மேற்கொள்ளப்படும் அல்லது அவ்வாறு திட்டமிடப்படும் பயங்கரவாத செயல்களைத் தடுப்பது என்பதே.
அதாவது இந்தியாவின் நாடாளுமன்றத்தால் அரசியல் காரணங்களுக்காகவே அதிகமாகப் பயன்படுத்தப்பட்டது என்று குற்றம் சாற்றப்பட்டு நிராகரிக்கப்பட்ட பயங்கரவாத தடுப்புச் (POTA) சட்டத்தின் கடுமையான பிரிவுகளை ஒரு திருத்தத்தின் மூலம் ஏற்கனவே இருந்த சட்டத்திற்கு முரணான நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தில் புகுத்தி, அதன் மூலம் நிராகரிக்கப்பட்ட பொடா சட்டத்தின் சாராம்சம் கொண்டதாகவே இச்சட்டம் மாற்றப்பட்டுள்ளது. எனவே இச்சட்டத்தையும் அரசியல் காரணங்களுக்காக தவறாகப் பயன்படுத்தப்படும் நிலை ஏற்படும் என்று அத்திருத்தங்களை எதிர்த்தவர்கள் கூறியதுதான் இப்பொழுது தமிழக அரசின் இந்த அறிக்கையின் மூலம் நிரூபணமாகியுள்ளது.
உச்ச நீதிமன்றம் கூறியதென்ன?
தடை செய்யப்பட்ட இயக்கங்களை ஆதரித்துப் பேசுவது குற்றமாகாது என்று பொடா சட்டத்தின் கீழ் மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச் செயலர் வைகோ, நெடுமாறன் உள்ளிட்டவர்களை அ.இ.அ.தி.மு.க. அரசு கைது செய்து சிறையில் அடைத்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இந்தியாவின் உச்ச நீதிமன்றம் தெளிபடுத்தியது மட்டுமின்றி, அவ்வழக்கிலிருந்து வைகோ உள்ளிட்டவர்களை விடுவித்தும் உத்தரவிட்டது. தடை செய்யப்பட்ட இயக்கத்தினை ஆதரித்துப் பேசுவது, அந்த இயக்கத்திற்கு உதவுவதாக ஆகும் என்ற அரசின் சட்ட விளக்கத்தை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. ஒரு இயக்கம் தடை செய்யப்பட்டதாக இருந்தாலும், அதன் நோக்கத்தை அல்லது குறிக்கோளை ஆதரித்துப் பேசுவதற்கு எவரொருவருக்கும் உரிமையுள்ளது என்று அத்தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது.
எனவே, தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்தோ அல்லது அதன் நோக்கத்தை ஆதரித்தோ பேசுவதும், ஆதரவு திரட்டுவதும் எந்த ஒரு குறிப்பிட்ட கடுமையான சட்டத்தின் நோக்கின்படியும் குற்றமாகாது என்பதும், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையிலும், அதன் பிரிவு 19இன் கீழ் உறுதி செய்யப்பட்டுள்ள கருத்துரிமைக்கு உட்பட்டதே என்பதும் அத்தீர்ப்பின் சாரமாக இருந்தது.
இப்பொழுது திருத்தப்பட்டு கடுமையாக்கப்பட்டுள்ள அல்லது வலுவூட்டப்பட்டுள்ள சட்டத்திற்கு முரணான நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தில், நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை, ஒருமைப்பாடு ஆகியவற்றை காப்பாற்றும் நோக்குடன் இந்திய அரசமைப்பு சட்டம் அளித்துள்ள கருத்துரிமை உரிமையின் மீது காரண அளவிற்கு கட்டுப்பாட்டை (Reasonable restriction) விதிக்க அரசிற்கு இச்சட்டம் அதிகாரமளித்துள்ளது. இந்த அடிப்படையை பயன்படுத்தியே தமிழக அரசு வெளியிட்டுள்ள அந்த ‘கருத்துரிமைக் கட்டுப்பாட்டு’ அறிக்கை அமைகிறது.
இங்கே கூர்ந்து கவனிக்கத் தக்க ஒரு விடயம் யாதெனில், தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவான அல்லது அதன் நோக்கத்தை ஆதரித்து பேசப்படுவது இந்தியாவின் ஒற்றுமைக்கும், இறையாண்மைக்கும் எதிரானதா இல்லையா என்பதே. இந்த அடிப்படை விடயத்திற்கு விடைதேட வேண்டுமெனில் அந்த அறிக்கை எந்த இயக்கத்தை குறிப்பாகக் கொண்டு வெளியிடப்பட்டுள்ளது என்பதை ஆராய்வது அவசியமாகிறது.
விடுதலைப் புலிகள் இயக்கம் விடுதலை இயக்கம் அல்லவா?
தமிழக அரசின் இந்த அறிவிப்பு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை குறிப்பிட்டே வெளியிடப்பட்டுள்ளது என்பது விவரம் அறிந்த எவருக்கும் எளிதில் புரியக் கூடியதே. அதன் வெளிப்பாடு இந்த விளம்பரம் அளிக்கப்படுவதற்கு முன்னரே - ஞாயிறு, திங்கட்கிழமைகளில் - சென்னையில் பல்வேறு இடங்களில், அமைந்தகரையில் திங்கட்கிழமை விடுதலை சிறுத்தைகள் நடத்திய மாநாடு தொடர்பாக ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளிலும், அவர்கள் நிறுத்தியிருந்த விளம்பரப் பதாகைகளிலும் அச்சிடப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் படத்தையும், ஈழம் என்ற வார்த்தையும் காவல் துறையினர் அழித்திருந்தனர். ‘அழிக்கச் சொல்லி அரசு உத்தரவிட்டிருந்தது, அதனால் அழித்துள்ளோம்’ என்று காவல் துறையால் பதில் கூறப்பட்டதாக செய்திகளும் வந்திருந்தன.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு தமிழக மக்களிடையே பரவலான, ஆழமான ஆதரவு உள்ளது என்பதும், எந்த நோக்கத்திற்காக அந்த இயக்கம் ஆயுதம் தரித்துப் போராடியதோ அந்த இயக்கத்தின் நோக்கமான தமிழீழ விடுதலையை தமிழக மக்கள் பலமாக ஆதரிக்கின்றனர் என்பதும், அந்த இயக்கத்தையும், அந்த விடுதலை நோக்கத்தையும் ஆதரிக்கும் அரசியல், அரசியல் சார்பற்ற அமைப்புகளுக்கே இந்த எச்சரிக்கை அறிவிப்பு என்பதும் நன்றாகவே புலனாகிறது.
நமது கேள்வி இதுதான்: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கதிற்கு ஆதரவாகப் பேசுவதும், அந்த இயக்கத்தின் தலைவரான பிரபாகரன் படத்தை விளம்பரத்தில் போடுவதும் எவ்வாறு இந்திய நாட்டின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும், இறையாண்மைக்கும் எதிரான நடவடிக்கை என்று ஆகும்?
இன அழிப்பை தட்டிக் கேட்காததேன்?
இலங்கை விடுதலைப் பெற்ற 1948ஆம் ஆண்டிலிருந்து அந்நாட்டின் பூர்வீகக் குடிமக்களான தமிழர்களுக்கும், 150 ஆண்டுகளுக்கு மேலாக அந்நாட்டின் வளர்ச்சிக்கும் பொருளாதார செழிப்பிற்கும் காரணமான மலையகத் தமிழர்களுக்கும் இயல்பாக இருந்த உரிமைகளை, அடுத்தடுத்து வந்த சிறிலங்க அரசுகள் ஒவ்வொன்றாக பறித்து தமிழர்களை சம உரிமையற்றவர்களாக, இரண்டாம் தர குடிமக்களாக ஆக்கியது. மலையகத் தமிழர்களின் குடியுரிமையைப் பறித்தது. அதற்கு இந்திய அரசு முழுமையாக ஒத்துழைத்தது. சம உரிமை கோரி தமிழர்கள் மேற்கொண்ட சாத்வீகப் போராட்டங்கள் அரச படைகளால் கடுமையாக ஒடுக்கப்பட்டது. தமிழர்களை அழித்து அவர்களை எந்த உரிமையும் அற்ற அடிமைகளாக மாற்ற தொடர்ந்து முயற்சி நடந்தது, இன்றும் நடக்கிறது.
தங்களுடைய சாத்வீகப் போராட்டம் ஆயுத பலத்தால் ஒடுக்கப்பட்டதையடுத்து அதன் இயற்கையான நேர் வினையாக தமிழர்கள் ஆயுதமெடுத்துப் போராடத் துவங்கினர். அந்த ஆயுதப் போராட்டத்தை இந்தியா (இந்திரா காந்தி பிரதமராக இருந்துபோது) ஆதரித்தது, அவர்களுக்கு ஆயுத பயிற்சி அளித்தது மட்டுமின்றி, ஆயுதங்களையும் கொடுத்தது, நிதியுதவியையும் செய்தது. ஏனெனில் தமிழர்களின் ஆயுதம் தாங்கிய போராட்டத்ததின் நியாயத்தை இந்திய அரசு (அன்று) உணர்ந்திருந்தது.
அப்படி ஆயுதமேந்தி ஈழத் தமிழர்களின் சுய நிர்ணய உரிமைப் போராட்டத்தை முன்னெடுத்த இயக்கங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் வலிமையாக வளர்ந்து, சிறிலங்க அரசின் அரச பயங்கரவாத நடவடிக்கைகளை முன்னின்றுப் போராடி முடக்கியது. அடுத்தடுத்து வந்த சிறிலங்க அரசுகள் மேற்கொண்ட தமிழினப் படுகொலையை தடுத்து நிறுத்தி அதன் ஆயுத பலத்தை நிர்மூலமாக்கியது. தமிழர் இனப் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காணும் நிலைக்கு சிறிலங்க அரசை பலமுறை தள்ளியது விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வீரம் சொரிந்த போராட்டமே.
ஆனால் அந்த இயக்கத்தை தனது கைப்பாவையாக்க இந்திய அரசு முயன்றபோது அதனை ஏற்காததால், விடுதலைப் புலிகளை ஒரு பயங்கரவாத இயக்கமாக சித்தரித்த சிறிலங்க அரசின் முயற்சிக்கு துணைபோனது. இந்திய அரசிற்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் இடையே ஏற்பட்ட இந்த முரணே, ஈழத் தமிழர்களின் விடுதலை நோக்கத்தை அடிப்படையில் புறக்கணித்து உருவாக்கப்பட்ட இந்திய - சிறிலங்க ஒப்பந்தத்திற்கும், இலங்கைக்குச் சென்ற இந்திய அமைதிப் படைக்கும், புலிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலிற்கும், அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட இராஜீவ் படுகொலைக்கும் வித்திட்டது. இப்படிப்பட்ட சங்கிலித் தொடர்பான நிகழ்வுகளின் பின்னணி முழுமையாக மக்கள் அறிந்திராத நிலையை தங்களுக்குச் சாதமாக பயன்படுத்திக் கொண்டும், இராஜீவ் படுகொலையை கேடயமாக பயன்படுத்தியும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை பயங்கரவாத இயக்கமாக அறிவிக்கத் தலைப்பட்டது இந்திய அரசு. ஆனால் இராஜீவ் படுகொலை ஒரு பழிவாங்கும் நடவடிக்கையே, பயங்கரவாத செயல் அல்ல என்றும், அந்த நடவடிக்கை இந்தியாவை சீர்குலைக்கும் நடவடிக்கை என்று கருதுவதற்கு இடமில்லை என்றும், இந்தியாவின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது, அதன் முயற்சிக்குத் தடையானது.
அதன் பிறகே, சட்டத்திற்கு முரணான நடவடிக்கைகளைத் தடுக்கும் சட்டம் அளிக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடை செய்யப்பட்ட இயங்கங்களின் பட்டியில் இந்திய அரசு சேர்த்தது. அதற்கு அது கூறிய காரணம் என்னவெனில், தமிழகத்தை தனி நாடாக்கும் முடிவுடன் செயல்படும் தலைமறைவு இயக்கங்களுக்கு இரகசியமாகப் பயிற்சியளித்ததாக ஒரு குற்றச் சாற்றைக் கூறியது. இது சட்டப்படி நிரூபிக்கப்பட்ட ஒரு குற்றச் சாற்று அல்ல.
இச்சட்டத்தின் பகுதி 2, பிரிவு 3இன் படி, (1) எந்த ஒரு அமைப்பும் சட்டத்திற்கு முரணானது என்றோ அல்லது அவ்வாறு ஆகலாம் என்றோ மத்திய அரசு கருதுமானால் ஒரு அரசிதழை வெளியிட்டு அதனை சட்டத்திற்கு முரணான அமைப்பாக அறிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. அதனைப் பயன்படுத்தியே விடுதலைப் புலிகளை தடை செய்யப்பட்ட அமைப்புகள் பட்டியலில் சேர்த்தது மத்திய அரசு.
அவ்வாறு ஒரு அமைப்பை சட்டத்திற்கு முரணான அமைப்பாக அறிவிப்பதற்கு (2) என்ன அடிப்படை என்றும், அதற்கான மற்ற காரணங்களையும் அவசியம் என்று மத்திய அரசு கருதினால் அந்த அரசிதழில் குறிப்பிட வேண்டும் என்று அச்சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
அப்படி தெரிவிக்க வேண்டிய விவரங்களையும் கூட, அது பொது நலனிற்கு பாதகமானதாக இருக்கலாம் என்று மத்திய அரசு கருதுமானால் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் அந்தப் பிரிவு கூறுகிறது.
இப்படி எல்லா விதத்திலும் முழு அதிகாரமளிக்கப்பட்ட ஒரு சட்டத்தின் அடிப்படையிலேயே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மத்திய அரசு தடை செய்யப்பட்ட இயக்கங்களின் பட்டியலில் சேர்த்துள்ளது.
இவ்வாறு சேர்த்தது சரியா தவறா என்று இதுநாள் வரை நீதிமன்றத்திலோ அல்லது அப்படிப்பட்ட தடையை மறுபரிசீலனை செய்யும் இச்சட்டத்தின் கீழ் அமைக்கப்படும் தீர்பாயத்திலோ (Tribunal) உறுதி செய்யப்படவில்லை என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.
ஏனெனில் தடை செய்யப்பட்ட இயக்கங்களின் சார்பாக அந்த இயக்கமோ அல்லது அதன் உறுப்பினரோதான் தீர்ப்பாயத்தில் முறையீடு செய்ய வேண்டும் என்று இச்சட்டம் ஒரு நிபந்தனையை (பிரிவு 36) விதிக்கிறது. எனவே விடுதலைப் புலிகள் மீதான தடை இரண்டாண்டுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்பட்டு நீட்டிக்கப்பட்டே வந்துள்ளது. இப்பொழுதும் தொடர்கிறது.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடை செய்யப்பட்ட இயக்கங்களின் பட்டியலில் சேர்ப்பதோடு நின்றுவிடவில்லை, அதனை அயல் நாட்டு பயங்கரவாத இயக்கமாக (Foreign Terrorist Organization) அறிவித்து தடை செய்யுமாறு வலியுறுத்தி அதன் காரணமாக அந்த இயக்கம் இன்று 30 நாடுகளில் தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அறிவிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது எப்போது தெரியுமா? நார்வே நாட்டின் அனுசரணையுடன் விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்க அரசிற்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகி, இனப் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண அமைதிப் பேச்சுவார்த்தை நடந்துக் கொண்டிருந்தபோதுதான் புலிகள் இயக்கத்தை ஐரோப்பிய ஒன்றியத்தின் பல நாடுகள் பயங்கரவாத இயக்கமாக அறிவித்தன!
என்ன நியாயம்! எப்படிப்பட்ட அரசியல் அணுகுமுறை! அரச பயங்கரவாதத்தால் அழிக்கப்பட்டுவரும் ஒரு இனத்தின் சுய நிர்ணய உரிமைக்காக போராடும் ஒரு இயக்கத்தை, அது அரசியல் ரீதியான தீர்வு காணும் நோக்குடன் - சர்வதேச சமூகத்தின் வற்புறுத்தலை ஏற்று - தங்கள் இனத்தை அழித்துவரும் அரசுடனேயே பேச்சுவார்த்தை நடத்தும்போது பயங்கரவாத இயக்கமாக அறிவிக்கப்பட்டு தடை செய்யப்படுகிறது!
ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை தெற்காசிய வல்லரசுகளின் ஆதரவுடன் அழித்தொழிக்கும் முயற்சிக்கு வித்திடப்பட்ட முதல் நடவடிக்கை புலிகள் இயக்கம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தபோது அதனை பயங்கரவாத இயக்கமாக மேற்கத்திய நாடுகள் தடை செய்தன என்றே அரசியல் நோக்கர்கள் பலரும் கருதுகின்றனர்.
அதனால்தான், போர் நிறுத்த ஒப்பந்தத்தை தன்னிச்சையாக நிராகரித்துவிட்டு இராணுவ நடவடிக்கையின் மூலம் இனப் பிரச்சனைக்குத் தீர்வு காணு்ம் நடவடிக்கையை துணிந்து முன்னெடுத்தார் ராஜபக்ச என்றால், அவருக்கு அந்தத் ‘துணிவை’ அளித்த பின்னணி இதுதான்.
தங்கள் மீது திணிக்கப்பட்டப் போரை நேர்மையாகவும், தீரத்துடன் எதிர்கொண்ட விடுதலைப் புலிகளை அழித்தொழிக்க தெற்காசிய வல்லரசுகள் அனைத்தும் சிறிலங்க அரசிற்கு முழு ஒத்துழைப்பை அளித்தன. அதிலும் இந்திய அரசின் ஒத்துழைப்பு எப்படிப்பட்டது என்பதற்கு போர் முடிந்ததாக சிறிலங்க அரசு அறிவிக்கப்பட்டப் பிறகு கோத்தபய ராஜபக்ச அளித்த பேட்டியே சான்றாகும்.
பாதுகாப்பு வலயம் என்று அறிவித்து அப்பகுதிக்கு நிராயுதபாணியாக மக்கள் வந்தவுடன் அவர்கள் மீது கனரக ஆயுதங்களைக் கொண்டும், விமான குண்டு வீச்சின் மூலமும் சிறிலங்க இராணுவம் ஒவ்வொரு நாளும் நூற்றுக் கணக்கில் அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்பட்டதற்கு, தாங்கள் வகுத்த யுக்தியே காரணம் என்று ராஜபக்ச பேட்டியளித்துள்ளாரே!
“பாதுகாப்பு வலயத்தை ஐ.நா.வோ அல்லது உலக நாடுகளோ உருவாக்கவில்லை, இராணுவம் தான் உருவாக்கியது. அங்கு அவர்கள் அனைவரும் வந்தப் பிறகு அதன் மீது குண்டு வீசி அனைவரையும் அழித்தோம்” என்று தனது ஆங்கில பத்திரிக்கையாள நண்பரிடம் அளித்த பேட்டியில் ராஜபக்ச கூறியுள்ளாரே? இதனை ஏன் இந்தியா உட்பட எந்த நாடும் கண்டுகொள்ளவில்லை. ஏனென்றால் கோத்தபய ராஜபக்ச கூறியது போல இவை யாவும் ஒவ்வொரு நாளும் கூடிப்பேசி மேற்கொள்ளப்பட்ட கூட்டு நடவடிக்கைகள்!
இப்படித்தான் பேசி, ஆலோசித்து, திட்டமிட்டு இறுதிக் கட்டப் போரில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்களைக் கொன்று, அடையாளம் ஏதுமின்றி அழித்து, பயங்கரவாதத்தை அழித்து விட்டதாக ராஜபக்ச கூறுகிறார்.
இலங்கையில் பலத்த மழை: வன்னி தமிழர் முகாம்களில் நோய் பரவியது-5 பேர் பலி; 251 பேரை காப்பாற்ற தீவிர சிகிச்சை
கொழும்பு, ஆக. 19-
இலங்கையில் பெய்து வரும் பலத்த மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கி 5 பேர் பலியானார்கள். மேலும் நோய் வாய்ப்பட்டுள்ள 251 பேரை காப்பாற்ற தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.தற்போது, இலங்கையில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் வன்னியில் உள்ள தமிழர்களின் முகாம் களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதில், ஒரு சிறுவன் உள்பட 5 பேர் பலியானார்கள். அங்குள்ள “செப்டிக் டேங்க்” வெள்ளத்தில் அடித்து செல் லப்பட்டது. இதையடுத்து அந்த குழிக்குள் விழுந்து சிறுவன் பலியானான். மற்ற 4 பேரும் கடும் குளிர் தாங்காமல் இறந்துள்ளனர்.
முகாம்களில் சேறும், மனித கழிவும் சேர்ந்துள்ளது. சுத்தமான குடிநீர் கிடைக்கவில்லை. இதனால் அங்குள்ள மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.
வவுனியா, செட்டிகுளம் பகுதிகளில் உள்ள முகாம் களில் பெருமளவுக்கு தொற்று நோய் பரவுகிறது. செட்டிகுளம் பகுதியில் உள்ள 13 முகாம்களில் வயிற்றுப்போக்கு நோய் அதிக அளவில் பரவியுள்ளது.
அங்குள்ள முகாம்களில் 735 பேர் வயிற்று போக்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 251 பேர் கடுமையாக பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.
எனவே, அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வயிற்றோட்டத்துடன் 120 பேருக்கு அம்மை நோய் பரவியுள்ளது.
இலங்கை கடற்படை தாக்குதல் எதிரொலி: ராமேசுவரத்தில்; மீனவர்கள் காலவரையற்ற ஸ்டிரைக்; கடற்கரை இன்று வெறிச்சோடியது
ராமேசுவரம், ஆக. 21-
ராமேசுவரத்தில் இருந்து மீன் பிடிக்க சென்ற மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்கி துன்புறுத்தி வருகின்றனர். வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டும் விரட்டியடிக்கின்றனர். நேற்று முன் தினமும் ராமேசுவரத்தில் இருந்து மீன் பிடிக்க சென்ற மீனவர்களை கச்சத்தீவு பகுதியில் இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டு விரட்டினர்.
எனவே இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது நடத்தும் தொடர் தாக்குதல் நடவடிக்கையை கண்டித்தும் பாக்ஜலசந்தி, மன்னார் கடல் பகுதியில் தமிழக மீனவர்களுக்கான மீன்பிடி உரிமையை பெற்று தர கோரி ராமேசுவரத்தில் மீனவர்கள் காலவரையற்ற ஸ்டிரைக்கில் ஈடுபட போவதாக அறிவித்தனர்.
அதன்படி இன்று மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தினை தொடங்கினர். சுமார் 800 விசைப்படகுகளும் மீன்படி தொழிலை சார்ந்த 25 ஆயிரம் பேரும் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.
மீன்பிடி தொழிலை நம்பி இருந்த ஐஸ் கம்பெனிகள், லேத் பட்டறைகள் மூடப்பட்டன.
♥ தூங்கும் புலியை....♥
-
தமிழ் mp3
*http://youthsmp3.blogspot.com/*
*வணக்கம் நண்பர்களே !எனக்காக இணையத்தில் பாடல்களை தேடினேன். அவைகளை உங்களோடு
பகிர்ந்து கொள்ளும் முயற்சியாக...
கூகிளின் அதி வேக புதிய தமிழ் புரட்சி.....!
-
[image: http://i34.tinypic.com/2nsrsz6.jpg]
கூகுளின் புதிய விரைவான,எளிமையான தமிழ் தட்டச்சு மென்பொருள்
கூகிள் சிறப்பான சேவைகள் நமக்கு பயனுள்ளதாக அமைந்து வரு...
பெண்களிடம் நல்லபெயர் வாங்க என்ன செய்யலாம்?
-
[image:
http://2.bp.blogspot.com/_VABrPZnj4j0/SwtvSziJvqI/AAAAAAAACDE/OO8_QsNvIbw/s1600/HappyBirthdayFlowers.jpg]
பெண்களிடம் நல்லபெயர் வாங்க என்ன செய்யலாம...