Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic

தமிழீழத் தாகம் தணியாது...! எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது....!!

online

'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...!
தூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்!!'

-பாவேந்தர் பாரதிதாசன்

ஏதோ ஒரு பாட்டு mp3

ஏதோ ஒரு பாட்டு mp3
Found at bee mp3 search engine

Pages

Wednesday, July 22, 2009

♥ "இலங்கைத் தமிழர் வரலாறு பாகம் 52 -"தினமணி" தொடர் ♥







"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு'- 52: தி.மு.க.வின் முகவை மாநாடு!







இலங்கையில் ஏற்படும் சம்பவங்கள் தமிழகத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவது புதிதல்ல. ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்த தொப்புள்கொடி உறவு என்பதால், இலங்கையில் ஏற்படும் அவலங்கள் இங்கே பாதிப்பை ஏற்படுத்தத் தவறவில்லை.

1983 இனக்கலவரத்தைப் பற்றி கேள்விப்பட்டதுமே மதுரை மாவட்டம் நத்தம் என்ற பேரூரைச் சேர்ந்த திராவிட முன்னேற்றக் கழக இளைஞர் அணியைச் சேர்ந்த ஷாஜகான், சென்னை இலங்கைத் தூதுவர் அலுவலகம் முன் இலங்கை அரசை எதிர்த்துத் தீக்குளித்தார்.

இவரது திடீர்ச் செயலால் பரபரப்படைந்த மக்கள், உடலில் தீ பரவாமல் தடுத்தனர். பின்னர் சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

ஜூலை 18, 1983-இல் நடந்த கலவரத்திற்கு ஆரம்பமாக விடுதலைப் புலிகளின் இயக்கத்தைச் சேர்ந்தவரான சார்லஸ் அந்தோனி என்பவர் ராணுவத்தாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இலங்கையில் விடுதலை உணர்வு உள்ள தமிழர்களைப் பற்றியும், அவர்களை ஒடுக்குவதற்காக எடுக்கப்படும் ராணுவ நடவடிக்கைகளைப் பற்றியும் தகவல் வெளியிடத் தடை விதிக்கப்பட்டது.

கடந்த இருபத்து நான்கு மணி நேரத்தில் 18 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இலங்கையில் தமிழர்கள் யாவரும் தங்கள் உயிருக்குப் பயந்து இந்தியத் தூதுவர் அலுவலகத்திற்குள் வந்து தஞ்சம் புகுந்தனர். தமிழர்கள் பெருமளவில் கொல்லப்படுவதற்கு இந்தியா கவலை தெரிவித்தது. இதற்கு இந்தியாவின் தற்காலிகத் தூதர் ஆர்.எம். அய்யங்காரை அழைத்து, வெளி விவகார அமைச்சர் தன் அதிருப்தியைத் தெரிவித்தார். இலங்கை பத்திரிகைகளான தி ஐலண்ட், சன் போன்றவைகள், இந்தியா இலங்கையின் உள்விவகாரத்தில் தலையிடுவதாகக் கண்டித்து எழுதின.

ஜூலை 23-இல் 168 உறுப்பினர்கள் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் முக்கிய எதிர்க்கட்சியாக இருந்த தமிழர் ஐக்கிய விடுதலைக் கட்சியின் 16 உறுப்பினர்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.

ஜூலை 26-இல் தமிழ்நாட்டில் திமுக தலைவர் மு.கருணாநிதி, தனக்கு, இதுவரை நாற்பது பேர் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதாக லண்டன், பாரிஸ் மூலம் தகவல் வந்திருப்பதாகத் தெரிவித்தார். மறுநாள் (ஜூலை 27-இல்) இலங்கைத் தமிழர் பாதுகாப்புப் பேரணி நடத்தப்படும் என்றும் அறிவித்தார்.

இலங்கைக்கும், சென்னைக்கும் முற்றாகச் செய்தித் தகவல் தொடர்பு இல்லாமல் துண்டிக்கப்பட்டது. மறுநாள் இலங்கைச் சிறையில் குட்டிமணி, தங்கதுரை, ஜெகன் உள்பட மொத்தம் முப்பத்தி ஏழு பேர் சிங்களக் கைதிகளால் அடித்துக் கொல்லப்பட்டனர் என்ற செய்தியுடன் விடிந்தது.

உலகமே கண்டிராத காட்டுமிராண்டிச் செயலாக அந்தச் சிறைச்சாலைப் படுகொலை அமைந்திருந்தது என்பதை பின்பு வந்த செய்திகள் உறுதிப்படுத்தின.

இலங்கை அரசு இஸ்ரேல் ராணுவத்தின் அதிரடிப் பிரிவு ஒன்றை வரவழைத்து ஒரு மாதம் ராணுவப் பயிற்சி கொடுத்ததாகச் செய்திகள் வெளியாயின.

கொழும்பிலும் இதர நகரங்களிலும் வீடு வாசல் இழந்த பத்து லட்சம் பேர் யாழ்ப்பாணத்துக்கு ஓட விரும்பினர் என்று டெய்லி டெலிகிராஃப் (லண்டன்) செய்தி வெளியிட்டது.

டாக்ஸி டிரைவரை தாஜா செய்து சிங்கப்பூர் வந்த பாகிஸ்தானிய நிருபர் ஜாவேத் அப்பாஸ், ""இம்முறை சிங்களவர்களின் கொடுமையால் தமிழர்கள் முற்றிலுமாக அழிந்து போவார்கள்! கொழும்பு சுடுகாடாகக் காட்சியளிக்கிறது'' என்றார்.

தில்லி செல்லும் வழியில் நிருபர்களைச் சந்தித்த இலங்கை வெளிநாட்டுச் செயலரை, "ராணுவம் ஏன் கலவரக்காரர்களை அடக்கவில்லை?' என்றனர் பத்திரிகையாளர்கள். ""அடக்கினால் அவர்கள் அரசுக்கெதிராகத் திரும்பிவிடுவார்கள்'' என்றார் அவர்.

பல அகதிகள் முகாம்கள் கூண்டோடு கொளுத்தப்பட்டன. தமிழ்ப் பெண்கள் கற்பழிக்கப்பட்டனர்.

ஏழு மணி நேர அவகாசத்தில் திமுக தலைவர் மு.கருணாநிதி அறிவித்த தமிழர் பாதுகாப்புப் பேரணியில் லட்சக்கணக்கானோர் கலந்துகொண்டனர். கடைகள் அடைப்பு; ஆட்டோக்கள் ஓடவில்லை.

""தமிழன் வாழ்வதா? வீழ்வதா? என்கிற கேள்விக் குறியில் நிற்கிறான். அம்மையார் (இந்திரா காந்தி) அவர்களே, உங்களிடமிருந்து பதில் தேவை. வெறும் வார்த்தைகளால் அல்ல. செயலால் பதில் தேவை...

""இந்திய ராணுவம் இலங்கைக்கு வரும் என்று குரல் கொடுத்தால் தமிழனுடைய பிணம் விழாமல் தடுக்கலாம்'' என்று பேரணியின் முடிவில் திமுக தலைவர் மு.கருணாநிதி கூறினார்.

தில்லியிலுள்ள இலங்கைத் தூதரக வாசலில் திமுக உள்பட பல்வேறு கட்சிகளின் எம்.பி.க்கள் ஊர்வலம் சென்று எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஜூலை 28-இல் குட்டிமணி பிறந்த ஊரே பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டது. நான்கு நாட்கள் வன்முறையில் சுமார் 1000 பேர் உயிரிழந்தனர். தமிழர் கட்சியும் ஏனைய பிரிவினைக் கோரும் அமைப்புகளும் தடை செய்யப்படும். அவர்களது சிவில் உரிமைகள் பறிக்கப்படும் என்றார் ஜெயவர்த்தன.

இன்னொரு சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழர் தலைவர்கள் 17 பேர் கொலை செய்யப்பட்டனர்.

இந்திரா, ஜெயவர்த்தனாவுடன் பேசிய பிறகு நிலைமை அறிய இந்திய வெளிநாட்டு மந்திரி நரசிம்மராவ் இலங்கைக்கு அனுப்பப்பட்டார். நரசிம்மராவிற்கு அகதிகள் முகாம்களைப் பார்வையிட அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

சென்னையில் வசிக்கும் குட்டிமணி, ஜெகன் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினார் மு.கருணாநிதி.

ஜூன் 29, தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். சென்னையில் அனைத்துக் கட்சி கூட்டம் ஒன்றைக் கூட்டினார். அக்கூட்டத்தில் இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபை உடனே தலையிட வழிவகை காணவேண்டும் என வற்புறுத்தி பிரதமர் இந்திரா காந்திக்கு தந்தி ஒன்றை எம்.ஜி.ஆர். அனுப்பினார்.

ஜூலை 30-இல் இலங்கையில் தமிழர்களைக் காப்பாற்றுகிறேன் என்று சொல்லி ரயிலில் அழைத்துச் சென்று தீ வைத்தனர். 200-க்கு மேற்பட்டவர்கள் மரணமடைந்தனர். பலநூறு பேருக்கு தீக்காயம்.

கொழும்பு நகருக்குள் ராணுவத்தை எதிர்த்து விடுதலைப்புலிகள் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர். ராணுவ உடையில் வந்து தாக்கினர். அவர்கள் கப்பற்படை உடை போன்று ஆடை அணிந்திருந்தனர் என்று தப்பி வந்தவர்கள் தெரிவித்தனர்.

ஜூலை 31-இல், வெவ்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவொன்றுக்கு தலைமை தாங்கி, புது தில்லி சென்றார் முதல்வர் எம்.ஜி.ஆர். அப்போது பிரதமரிடம் அளிக்கப்பட்ட மனுவில், ""இலங்கையின் கொடிய, காட்டுமிராண்டித்தனமான கொலைகளை அந்நாட்டின் உள்நாட்டு விவகாரமெனத் தள்ளிவிட முடியாது. இந்திய அரசு, இலங்கையிலுள்ள தமிழர்களைக் காப்பாற்றுவதற்கு உரிய முயற்சிகளைத் தீவிரமாகவும் அவசரமாகவும் தலையிட்டு எடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதென நாங்கள் திட்டவட்டமாக உணர்கிறோம்'' என்று கூறப்பட்டிருந்தது.

1983 ஜூலை 31-இல் ராமநாதபுரத்தில் நடந்த முகவை மாவட்ட தி.மு.க. மாநாடு ஈழத்தமிழர்களுக்கான மாநாடாகவே நடந்தது. ஆகஸ்ட் 2-இல் முழு அடைப்பு நடத்துவது என்ற தீர்மானத்தை, திமுக செயற்குழு அங்கீகரித்தது.

""இலங்கையில் தனித் தமிழ்நாடு கேட்பவர்களின் சுயஉரிமையை-குடிஉரிமையை ரத்து செய்வதற்காக வருகிற ஆகஸ்ட் 4-ஆம் தேதி இலங்கைப் பாராளுமன்றத்தில் சட்டம் கொண்டு வரப்படுவதைக் கண்டித்து அதே ஆகஸ்ட் நான்காம் தேதி வியாழக்கிழமை தமிழ்நாடு முழுவதும் அனைத்துத் தமிழர்களும் வீடுகளிலும், கடைகளிலும், அலுவலகங்களிலும் கறுப்புக் கொடி ஏற்ற வேண்டும்'' என்றும் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் 5-ஆம் தேதி ரயில் நிறுத்தப் போராட்டம் செய்வதென்றும் திமுக செயற்குழு தீர்மானித்தது.

""சர்வதேச அமைதிப் படையை அனுப்புவதற்கான முயற்சியை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் இது சைப்ரஸ் தீவில் கிரேக்க மொழி பேசுவோர்க்கும், துருக்கி மொழி பேசுவோர்க்கும் இடையே நடைபெற்ற போரில் அமைதியான சூழ்நிலையை உருவாக்க ஐக்கிய நாடுகள் சபை சார்பில் சர்வதேச அமைதிப் படை அனுப்பியது போலாகும்'' என்றும் கருணாநிதி செய்தியாளர்கள் கூட்டத்தில் கூறினார்.

அன்று இரவு மாநாட்டில் கருணாநிதி பேசும்போது, ""ஆகஸ்ட் 4 மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம், 5-ஆம் தேதியன்று ரயில் நிறுத்தப் போராட்டம், தில்லியில் மாநிலங்களவை உறுப்பினர்களான எல்.கணேசன், வை.கோபால்சாமி ஆகியோர் துவக்கும் உண்ணாவிரதம் ஆகிய அறப்போராட்டங்கள் நடைபெறும்'' என்று அறிவித்தார்.


http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Editorial%20Articles&artid=92887&SectionID=133&MainSectionID=133&SEO=&Title=

♥ "இலங்கைத் தமிழர் வரலாறு பாகம் 51 -"தினமணி" தொடர் ♥







"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' -51: பின்னிப் பிணைந்த உறவும் வரலாறும்!


சுவாமி விபுலானந்தர், எஸ்.ஜி.கிட்டப்பா, கே.பி.சுந்தராம்பாள


புத்தளத்திற்கு வடக்கே பொன்பரப்பியில் கண்டெடுக்கப்பட்ட ஈமத்தாழிகளும், தமிழ்நாட்டின் ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட ஈமத்தாழிகளும் ஒரே வகை என்பதையும் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்பதையும் முன்பே கண்டோம்.

மதுரையில் சங்கம் நடத்தியபோது பூதன் தேவனார் ஈழத்திலிருந்து வந்ததையும், பாடல்கள் பாடியதையும் சங்கப் பாடல்கள் அகநானூறு (88,231,307), குறுந்தொகை (189,343,360), நற்றிணை (365) தெளிவுபடுத்துகின்றன.

வேதாரணியம் கோவிலின் பரம்பரை அறங்காவலர்கள் யாழ்ப்பாணத்தை அடுத்த தென்கணரவாய்ப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும், "பசுக்கறி' கேட்ட போர்த்துக்கீசியருக்கு போக்குக் காட்டி, சிதம்பரம் வந்து சேர்ந்ததுடன் அங்கு திருக்குளம் வெட்டி திருப்பணி செய்தவர் ஞானப்பிரகாசர் என்றும்,

முப்பதுக்குமேற்பட்ட அரிய தமிழ்நூல்களைப் பதிப்பித்து சென்னை மற்றும் சிதம்பரத்தில் அச்சகம், பாடசாலை நடத்தி அச்சொத்துக்களை இங்கேயே விட்டுச் சென்றவர் ஆறுமுகநாவலர் என்றும்,

சென்னைப் பல்கலையின் முதல் பட்டதாரிகளானவர்கள் கரோல் விசுவநாதப் பிள்ளையும் சி.வை.தாமோதரம் பிள்ளையும் என்றும்,

சென்னை மாகாணத்தில் பல இடங்களிலும் தேடிக் கண்டுபிடித்த அரிய நூல்களைப் பதிப்பித்ததுடன், உ.வே. சாமிநாதய்யருடன் சேர்ந்து செயல்பட்டவர் ஈழத்தின் சிறுப்பிட்டியைச் சேர்ந்த சி.வை.தாமோதரம் பிள்ளை என்றும்,

தாகூரின், மகாத்மா காந்தியின், தனிச் செயலாளராக இருந்து, அடிப்படைக் கல்வி முறையை செயல்படுத்திய டாக்டர் அரியநாயகம், ராஜாஜியின் திருச்செங்கோடு ஆசிரமத்தின் பொறுப்பாளராக இருந்த சிவகுருநாதன், தஞ்சையில் பிறந்து, வாழ்ந்து யாழ்ப்பாணம் பொன்னம்பலம் இராமநாதனின் மருமகனான நடேசபிள்ளை காங்கேயன் துறை நாடாளுமன்ற உறுப்பினர் என்றும்,

மூனப்புதூரில் பிறந்து மலையக் தமிழர்களின் தலைவராகவும், இலங்கை அமைச்சரவையில் அமைச்சராகவும் ஆனவர் தொண்டமான் என்றும்,

இன்றைய அண்ணாமலைப் பல்கலைக்கழகம் உருவாகக் காரணமாக இருந்தவர் சுவாமி விபுலானந்தர் என்ற காரணத்தால், அவரையே முதல் தமிழ்த்துறைப் பேராசிரியராக நியமனம் செய்து அண்ணாமலை அரசர் கவுரவித்தார் என்றும்,

1927-இல் சென்னை மகாண சட்டசபைத் தேர்தலில்-எழும்பூரில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டியிட்டவர் யாழ்ப்பாணத்துக் கலைப்புலவர் நவரத்தினத்தின் மாமியார் மங்களம்மாள் (மறவன்புலவு க.சச்சிதானந்தத்தின் பெரிய அம்மா) என்றும்,

தமிழறிஞர் தண்டபாணி தேசிகரின் குரு யாழ்ப்பாணம் மட்டுவில் க.வேற்பிள்ளை என்றும்,

யாழ்ப்பாணப் புறநகர் பாஷையூரில் பிறந்து, வளர்ந்து தமிழகத்தில் சிறந்த தொழிற்சங்கவாதியானவர் ஏ.சி.சி. அந்தோணிப்பிள்ளை என்றும்,

தமிழகத்தின் புகழ்பெற்ற தவில் கலைஞர் வலங்கைமான் சண்முகசுந்தரத்தின் தந்தை மற்றும் உடன் பிறப்புகள் வசித்தது யாழ்ப்பாணம் நாச்சியார் கோயிலடி என்றும், யாழ்ப்பாணத்திற்குத் தாய்த் தமிழகத்திடம் இருந்த தொடர்புக்கு எண்ணிலடங்கா உதாரணங்கள் கூறமுடியும்.

வரலாற்று ரீதியாக, வழிபாட்டு ரீதியாக உரிமைகளும், பண்பாட்டுப் பாரம்பரிய முறைகளும், பழமைகளும், உறவுகளும் பின்னிப் பிணைந்த வரலாறு, ஈழத்துக்கும் தமிழகத்துக்குமான வரலாறு.

அதேபோன்று, தமிழர் இசைமரபில் இலங்கைத் தமிழருடைய இசை மரபு மிக முக்கியமானது. அதிலும் குறிப்பாக இலங்கை நாதஸ்வர தவில் இசை மரபு வரலாற்று சிறப்புமிக்கது. தமிழகத்தில் தவில் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்த நீடாமங்கலம் மீனாட்சி சுந்தரம், நாதஸ்வர சக்கரவர்த்தியாகத் திகழ்ந்த திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை போன்றோர் இலங்கையில் வாசித்து புகழ்பெற்ற தமிழகக் கலைஞர்கள் ஆவார்கள்.

அதுபோன்று, இலங்கையிலும் நாதஸ்வரத்தில் அளவெட்டி பத்மநாபன், தவில் வாசிப்பதில் யாழ்ப்பாணம் தெட்சிணாமூர்த்தி, யாழ்ப்பாணம் சின்னராஜா, தட்டாரத்தெரு கருப்பையா போன்றோர்கள் முக்கியமானவர்கள். அளவெட்டி பத்மநாபன் தமிழகத்தில் பந்தநல்லூர் நாதஸ்வரக் கலைஞர் தெட்சிணாமூர்த்தியை குருவாக ஏற்று அவர் வழியில் வாசித்து இலங்கையில் பெருமை பெற்றார். யாழ்ப்பாணம் தெட்சிணாமூர்த்தி இலங்கையில் மட்டுமின்றி இந்தியாவில் தமிழகத்தில் மூன்று ஆண்டுகள் தங்கி, வாசித்து தமிழகத்திற்கு பெருமை சேர்த்தவர். இவருடன் இணைந்து தவில் வாசித்தவர்களுள் வளையப்பட்டி சுப்பிரமணியன், அரித்துவாரமங்கலம் ஏ.கே.பழனிவேலு, நாதஸ்வரத்தில் பந்தநல்லூர் தெட்சிணாமூர்த்தி, பருத்தியப்பர் கோயில் செüந்தரராஜன் போன்ற மேதைகளைச் சொல்ல வேண்டும்.

தமிழகத்தில் வருவாய் குன்றியதால் ஈழம் சென்று தங்கியிருந்த எஸ்.ஜி.கிட்டப்பா, வருவாய் ஈட்டிப் பெரும் செல்வரானபின் அதே காரணத்தால் அங்கு வந்த கே.பி.சுந்தராம்பாளை அங்கு வைத்தே திருமணம் செய்து பின் இருவரும் தமிழகம் திரும்பினர்,

கும்பகோணம் தங்கவேல் பிள்ளையை, யாழ்ப்பாணத்தில் கோயில் விழாவிற்கு காரில் அழைத்து வரும்போது அவரைப் பார்ப்பதற்கென்றே ரசிகர் கூட்டம் மொய்த்துவிடும் என்று நினைவு கூர்கின்றனர், தற்போது வாழ்ந்து வரும் இசை மேதைகள்.

திருமெய்ஞானம் நடராஜசுந்தரம், திருவெண்காடு சுப்பிரமணியம், திருவிடைமருதூர் பி.கே.மகாலிங்கம், ராமலிங்கம், வேதாரண்யம் வேதமூர்த்தி, வல்லம் கிருஷ்ணன் போன்ற தமிழக இசை மேதைகள் இலங்கையில் வாசித்து பெருமை பெற்ற மாமேதைகள் ஆவார்கள்.

தவில் மேதைகளான திருமுல்லை வாசல் முத்துவீர சாமி, திருநகரி நடேசன், வடபாதிமங்கலம் தெட்சிணாமூர்த்தி, வலங்கைமான் சண்முகசுந்தரம், திருச்சேறை முத்துகுமாரசாமி, சுவாமிமலை கோவிந்தராஜ் ஆகியோருக்கு ரசிகர் கூட்டம் அங்கு நிறைய உண்டு.

இலங்கை வானொலி இம்மேதைகள் வாசிப்பதை பயன்படுத்தி கொண்டு தனது அலைவரிசைகள் மூலம் உலகெங்கிலும் உள்ள ரசிகர்களுக்கு ஒளிப்பரப்புவார்கள். தமிழக சினிமா பாடல்களில் உள்ள ராகங்கள், கீர்த்தனைகள், அதன் வடிவ அழகு, பாடலாசிரியர்கள் முதலியவற்றோடு ஒழுங்குபடுத்தி ரசிகர்களுக்கு வழங்கும் முறை இலங்கை தமிழ் வானொலியிடமிருந்து நம்மிடம் வந்த ஒன்றாகும். (கலைவிமர்சகர் தேனுகாவிடம் நேர்காணல்)

இவ்வாறு உடலாலும், உள்ளத்தாலும் ஒன்றுபட்ட தொப்புள்கொடி உறவுகளின் துன்பத்துக்கு தாய்த் தமிழகம் அளித்த பங்கு என்ன?

நாளை:


தி.மு.க.வின் முகவை மாநாடு!

http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Editorial%20Articles&artid=92207&SectionID=133&MainSectionID=133&SEO=&Title=

♥ "இலங்கைத் தமிழர் வரலாறு பாகம் 50-"தினமணி" தொடர் ♥






"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு'- 50: இலங்கையின் சீன, பாகிஸ்தான் தொடர்புகள்!





இரண்டாம் உலக யுத்தத்தின்போது இங்கிலாந்தின் யுத்தக் கப்பல்கள் திருகோணமலை துறைமுகத்தில் பெட்ரோல் நிரப்பிக் கொண்டன. இது உலகம் அறிந்த செய்தி. காரணம் இதன் துறைமுகத்தின் பரப்பளவு ஆழம். இதன் பிறகு வல்லரசுகளின் கவனம் திருகோணமலை துறைமுகத்தின்மீது விழுந்தது. இதில் அமெரிக்காவும் விதிவிலக்கல்ல. இதன் வெளிப்பாடு 1980-இல் அமெரிக்கத் தளபதிகள் கூட்டமைப்பு நடத்தும் ஙண்ப்ண்ற்ஹழ்ஹ் டர்ள்ற்ன்ழ்ங் எனும் சஞ்சிகையில் எழுதப்பட்ட கட்டுரை மூலம் தெரிய வந்தது.

திருகோணமலை அமெரிக்க ராணுவம் பயன்படுத்தும் தளங்களில் ஒன்று' என்று ஜெனரல் டேவிட் சி.ஜோன்ஸ் (மநஅஊ) குறிப்பிட்டதை உலகம் கூர்ந்து கவனித்தது. ஆனால் ""இந்த வரி தவறுதலாக இடம் பெற்றுவிட்டது-இது ஒரு பிழை'' என்று அந்த சஞ்சிகை பதில் கூறியது. மழுப்பலாக பதில் கூறினாலும் அது அமெரிக்காவின் விருப்பம் என்பது வெளிப்பட்டது. 1981-இல் அந்நியப் போர்க்கப்பல் திருகோணமலை துறைமுகத்தில் தங்குவதற்கு இருந்த தடை நீக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அமெரிக்கப் போர்க்கப்பல்களின் பல்வேறு காரணங்களைக் கூறி திருகோணமலை துறைமுகம் வருவதும் அதிகரித்தது.

1983-இல் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் காஸ்பர் வெய்ன்பேர்கர் கொழும்பு வருகை தந்தார். "தேநீர் விருந்து மட்டுமே. அதுவும் இந்த வழியாகப் போகும் வழியில் சிறு தங்கல்' என்று வெளிப்படையாகச் சொல்லப்பட்டது. ஆனால், உண்மை அவ்வாறிருக்க வேண்டுமென்பதில்லை.

ஏனென்றால் காஸ்பர் வருகையைத் தொடர்ந்து, அமெரிக்க ராணுவ ஜெனரல் வெர்னர் வால்டர்ஸ் வருகையும் அமைந்தது. அப்போதும் ராணுவ ஒப்பந்தம் ஏதுமில்லை என்றுதான் மறுக்கப்பட்டது. இந்த மறுப்புகளுக்கிடையில், அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் பாதுகாப்பு நிதி ஒதுக்கீடுக் குழுத் தலைவர் ஜோசப் ஆட்போ தலைமையில் ஆறு பேர் கொழும்பு வந்தனர். அவர்கள் ""லங்கையின் ராணுவ பாதுகாப்புக்கு 3.5 லட்சம் அமெரிக்க டாலர் நிதியுதவி வழங்க சிபாரிசு செய்வோம். இலங்கை கடற்படை வசதி பெறுவதையும், தேவையான பயிற்சி பெறுவதையும் உறுதி செய்வோம்'' என்றும் அறிவித்தனர்.

திருகோணமலை துறைமுகத்தையொட்டி, ராணுவப் பயன்பாட்டுக்காக 10 ஆயிரம் டன் பெட்ரோல் சேமித்து வைக்கும் 100 கிடங்குகள் உள்ளன. 1920-இல் இங்கிலாந்து இந்த கிடங்குகளைக் கட்டியது. தேசிய மயமாக்கப்பட்ட இந்த டாங்குகள் குத்தகைக்கு விடப்பட்டன. இதில் இந்தியாவுக்கு சில டாங்குகள் உண்டு. அமெரிக்காவும் இந்த டாங்குகளைப் பயன்படுத்த விரும்புகிறது. திருகோணமலை எண்ணெய்ச் சுத்திகரிப்பு ஆலைக்கென அமெரிக்கா நிறுவனத்திடம் 2500 ஏக்கர் வழங்கப்பட்டிருக்கிறது.

இது தவிர, வாய்ஸ் ஆஃப் அமெரிக்காவிடம் போட்ட 1951 மற்றும் 1985 ஒப்பந்தங்கள் உள்ளன. இதற்காக இலங்கையில் மேற்குக் கரையோரமுள்ள கிராமங்கள் நூற்றுக்கணக்கில் காலி செய்து தரப்பட்டுள்ளன. இந்த ஒலிபரப்பு மூலம் செயற்கைக்கோள் சாதனங்களுடனும் தொடர்பு கொள்ளலாம். நீர்மூழ்கிக் கப்பலில் உள்ள சாதனங்களுக்கும் தகவல் அனுப்பலாம்; மறிக்கலாம்.

பாகிஸ்தான் இலங்கைத் தொடர்பு என்பது, பங்களாதேஷ் பிரச்னையை ஒட்டி உருவானது. இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரில், இந்திய வான் எல்லை வழியாக பாக் விமானங்கள் பறக்க முடியாத நிலை ஏற்பட்டது. அப்போது வருவாயைக் காரணம் காட்டி பாகிஸ்தானின் விமானங்கள், இலங்கையின் விமான நிலைய வசதிகளை பயன்படுத்திக் கொண்டன.

இந்தியாவுடன் நட்பு நாடு என்று சொல்லிக் கொண்ட திருமதி பண்டாரநாயக்காவின் செயல் சந்தேகங்களை எழுப்பியது. அது மட்டுமன்றி கிழக்கு பாகிஸ்தானில் என்ன நடைபெற்றாலும் அந்தச் செய்திகளை அரசு சார்ந்த செய்தி நிறுவனங்கள் மூலம் தடைசெய்து, பாகிஸ்தான் ஆதரவு நிலை எடுத்ததும் இந்தியாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அன்று தொடங்கிய பாகிஸ்தான் நட்பு, 1983-க்குப் பிறகு அதிமாகியுள்ளது. 1984-இல் இலங்கை வெளியுறவு அமைச்சர் ஏ.சி.எஸ். ஹமீது மற்றும் ராணுவத்தினர் பாகிஸ்தான் சென்று வந்தனர். அதே ஆண்டில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் மாலத்தீவில் நடைபெற்ற சார்க் மாநாட்டில் கலந்து கொண்டு பாகிஸ்தான் திரும்பியபோது கொழும்பு வழியாக சென்றார்.

இதனைத் தொடர்ந்து 1985-இல் இலங்கை அதிபர் ஜே.ஆர்.ஜெயவர்த்தன பாகிஸ்தான் சென்றார். பதிலுக்கு பாகிஸ்தான் அதிபர் ஜியா வுல் ஹக் இலங்கை வந்தார். அப்போது ஜியா வுல் ஹக் 20 கோடி டாலருக்கு பாகிஸ்தான் - இலங்கை இடையே வர்த்தகம் நடந்துள்ளது என குறிப்பிட்டார்.

இவையெல்லாம் வெளிப்படையான செய்திகள். ஆனால் பாகிஸ்தானில் இலங்கை ராணுவத்தைச் சேர்ந்த ஆயிரம் பேருக்கு 1986-இல் ராணுவப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என்பது ரகசியம். இந்தப் பயிற்சி அனைத்தும் கிளர்ச்சியை முறியடிக்கும் விதமான பயிற்சிகள் ஆகும். ராணுவத்தின் வெவ்வேறு பிரிவுகளைச் சேர்ந்த முக்கியமானவர்களுக்கு பாகிஸ்தான் ராணுவம் பயிற்சி அளித்தது. இவ்வாறு பயிற்சி பெற்றவர்களுக்கு கருப்பு உடை சீருடையாக அளிக்கப்பட்டது. அவர்களின் அணுகுமுறை கொடுமையானது; வித்தியாசமானது.

""இலங்கையின் இறையாண்மையில் அதன் ஆதிபத்திய உரிமையில் அந்நியர் தலையீடு கூடாது. இவ்வகையான தலையீட்டை ஏற்கவோ, அந்நாட்டைப் பிரிக்கவோ கூடாது'' என்று சீனா ஒருமுறை அதாவது 1983 வாக்கில் கருத்து தெரிவித்தது. இதன் பொருள் வெளிப்படையானது. இந்தியாவை முன்னிறுத்திச் சொன்ன கருத்துதான் அது. அதனைத் தொடர்ந்து இலங்கையில் தனது செல்வாக்கை நிலைநிறுத்த சீனா விரும்புகிறது.

1983-இல் ஆயுத உதவி கோரி இலங்கை கோரிக்கை வைத்த நாடுகளில் சீனாவும் ஒன்று. அதனையொட்டி, சீனம் அதிக அளவில் ஆயுதத் தளவாடங்களை இலங்கைக்கு வழங்கியுள்ளது. ஜெயவர்த்தனாவின் தம்பி ஹெக்டர் ஜெயவர்த்தன சீனா சென்று பரிவர்த்தனைக்கு அடித்தளமிட்டார். தொடர்ந்து ஜெயவர்த்தனாவும் சீனா சென்றார்.

சீனா விமானப்படைக்குழு கொழும்பு சென்றது (1984). அதே ஆண்டில் தகவல் தொடர்புக்குப் பொறுப்பு ஏற்கும் தளபதி ஜெனரல் வீரசிங்காவுடன், பாதுகாப்புத் துறை அமைச்சர் லலித் அதுலத் முதலியும் சீனா சென்றார்.

சீன அதிபர் லீசின் கொழும்பு வந்தார். இலங்கையின் இறையாண்மை மக்களின் ஒற்றுமை குறித்து மட்டுமே அவர் பேசினார். ஆயுத உதவி குறித்து பேசவில்லை. ஆனால் அவை செயலில் நடைபெற்றன.

இது தவிர இதாலி, தென்கொரியா, தென் ஆப்பிரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் தனிப்பட்ட ஆயுத வியாபாரிகளிடமிருந்து ஹெலிகாப்டர், விமானங்கள், கவச விமானங்கள், அதிவிரைவுப் படகுகள் முதலியவை வாங்கப்பட்டுள்ளன.


http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Editorial%20Articles&artid=91752&SectionID=133&MainSectionID=133&SEO=&Title=

♥ "இலங்கைத் தமிழர் வரலாறு பாகம் 49 -"தினமணி" தொடர் ♥







"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - 49: இலங்கை - இங்கிலாந்து - இஸ்ரேல்


பாவை சந்திரன்


இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு முன்பாக ஆங்கிலேய ஆட்சியின்போதே, "தமது ஆட்சிக்குரிய பகுதிகளின் பாதுகாப்பு' என்று கூறி அந்நாட்டுக்கு ஏராளமான ராணுவ உதவிகளை இங்கிலாந்து அளித்தது. இவ்வகை ராணுவ உதவி என்பது வெடிமருந்துகள் மற்றும் ஆயுதங்கள் ஆகும். இவற்றைக் கையாள இலங்கையின் அன்றைய ராணுவத்தினருக்கு பயிற்சி அளிக்க இலங்கை - இங்கிலாந்து இடையே ஏற்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தம் வகை செய்தது. இந்த ஒப்பந்தம் காரணமாகவே 1955 வரை, இலங்கை ஐ.நா.வில் ஓர் உறுப்பு நாடாக சேர முடியாமல் சோவியத் நாடு தனது "வீடோ' அதிகாரத்தைப் பயன்படுத்தி தடுத்தது.

இலங்கை - இங்கிலாந்து பாதுகாப்பு ஒப்பந்தப்படி திருகோணமலையில் கப்பற்படை, கட்டுநாயக்காவில் விமானப்படை என இங்கிலாந்து ராணுவத் தளங்கள் அமைய வழியேற்பட்டது. (பெüத்த சிங்களவரும் சிறுபான்மையினரும் - சந்தியாபிள்ளை கீத பொன்கலன் பக். 185) இந்த ஒப்பந்தத்தின் பலன், இலங்கை ராணுவத்தினருக்கு தொடர்பயிற்சி அளிக்கப்பட்டதுதான். 1983 வன்முறையின்போது இலங்கை அரசு இங்கிலாந்து, அமெரிக்கா, பங்களாதேசம் உள்ளிட்ட நாடுகளிடம் ராணுவ உதவிகளைக் கேட்டபோது பெரும் சர்ச்சை எழுந்தது. இங்கிலாந்து அரசு அந்தக் கோரிக்கையை மறுத்த அதே நேரத்தில் கோரிக்கை வைக்கப்பட்டதை அந்த நாட்டின் வெளி விவகாரத்துறை ஒப்புக் கொண்டது.

எவ்வித ஆயுத உதவியும் செய்யவில்லை என்று இங்கிலாந்து கூறி வந்த போதிலும் இலங்கைக்குத் தேவையான ராணுவத் தளவாடங்கள் இங்கிலாந்திலிருந்துதான் வந்தன. 1977-இல், செவர்டன் கம்பெனி என்ற ராணுவத் தளவாட நிறுவனம் கடற்காவலுக்கென 5 விசைப்படகுகளை இலங்கைக்கு அனுப்பி வைத்தது. இரு அரசுகளிடையேயும் அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் ஒன்று 1980-இல் மேற்கொள்ளப்பட்டு, ராணுவத் தளவாடங்கள் விற்பனைக்கு உறுதி செய்யப்பட்டது.

இங்கிலாந்தில் உள்ள தனியார் நிறுவனங்கள் அந்நிய நாடுகளுக்கு ஆயுத விற்பனையைச் செய்ய முடியாது. ஆயுதங்கள் விற்பதானால், அந்நிய நாட்டின் பாதுகாப்புக் காரணங்களுக்காக மட்டும் ஆயுதங்களை ஏற்றுமதி செய்ய, வர்த்தக இலாகாவின் அனுமதியைப் பெற வேண்டும். இந்த அனுமதியின் காலம் ஓராண்டாகும்.

அரசு கனரக, ராணுவத் தளவாடங்கள் ஆலை இதே போன்று ஏற்றுமதியைச் செய்ய வேண்டுமானால், வெளி விவகார இலாகா அனுமதிவேண்டும். அதுமட்டுமன்றி ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் பட்டியல் குறித்து ஆய்வும் மேற்கொள்ளப்படும். இது நடைமுறை. ஆனால் இங்கிலாந்திலிருந்து பல தடவை ராணுவத் தளவாடங்கள் இலங்கை வந்து சேர்ந்திருக்கின்றன.

இஸ்ரேலிய நாட்டுடன் இலங்கைக்கு சுமுகமான உறவில்லாத நிலை. பாலஸ்தீனிய அரசு உரிமை சார்ந்த ஐ.நா.வின் 242-வது தீர்மானத்தின்படி, ஒத்துப் போகாத இஸ்ரேலுடன் உலக நாடுகள் பலவும் தூதரக உறவைத் துண்டித்தன. அந்த நாடுகளில் இலங்கையும் ஒன்று.

1983-ஆம் ஆண்டில், இலங்கை அரசு கேட்ட இடங்களில் இருந்து ராணுவ உதவி கிடைக்கவில்லை. இதனையொட்டி, இஸ்ரேலிய உதவியும் நாடப்பட்டது என்று இலங்கைப் பத்திரிகைகளில் செய்தி வெளியாயின. உதவி கோரி அமைச்சரவைச் செயலர் இஸ்ரேலுக்கு ரகசியப் பயணம் மேற்கொண்டார். இதன் தொடர்ச்சியாக இலங்கை - இஸ்ரேல் உடன்பாடு ஏற்பட அமெரிக்காவின் ராணுவ ஜெனரல் வெர்னன் வால்டர்ஸ் பெரிதும் உதவினார்.

1984-இல், அமெரிக்கத் தூதுவர் அலுவலகத்தில் "இஸ்ரேலிய நலன் பிரிவு' ஒன்று தொடங்கப்பட்டது. ஆசியப் பகுதியில் இஸ்ரேலிய நலப் பணியாளர் பொறுப்பு வகித்த டேவிட் மத்நாய் இலங்கைப் பிரிவின் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டார்.

இஸ்ரேலிய ராணுவப் பிரிவினர் இலங்கை வந்து ராணுவத்தினருக்கு பயிற்சிகள் அளிக்க ஆரம்பித்தனர். இந்தச் செயல் முஸ்லிம்களிடையே கொதிப்பை ஏற்படுத்தியது. மட்டக்களப்பு பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை தொழுகை முடிந்து வெளியே வந்தவர்கள், அமைதியான முறையில் இஸ்ரேலியர் வருகையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் காயமுற்றனர். தொடர்ந்து அவசர கால ஒழுங்குவிதி 14(ஐஐ) பயன்படுத்தப்பட்டது. பத்திரிகைத் தணிக்கையும் அமல்படுத்தப்பட்டது. இதன்மூலம் இஸ்ரேலியரின் வருகை - ராணுவத்தினருக்கான பயிற்சி தொடர்பான செய்திகளுக்குத் தடைவிதிக்கப்பட்டது.

தொடர்ந்து ஐக்கிய தேசிய கட்சியின் உயர்மட்டக் குழு கூடியபோது அதில் அங்கம் வகித்த முஸ்லிம் தலைவர்கள், இஸ்ரேலிய ராணுவப் பயிற்சிக்கும், மட்டக்களப்பில் ஏற்பட்ட மோதலுக்கும் கடும் கண்டனம் எழுப்பினர். "முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தின் முடிவை ஆதரிக்க வேண்டும் - ஆதரிக்க விருப்பமில்லாவிட்டால் கட்சியை விட்டு வெளியேறலாம்' என்று குடியரசுத் தலைவர் ஜே.ஆர். ஜெயவர்த்தன எச்சரித்தார்.

அடுத்த சில நாட்களிலேயே இலங்கையின் பாதுகாப்புத் துறை அமைச்சர் லலித் அதுலத் முதலி, "ராணுவத்தினருக்கு இஸ்ரேலியரின் ஷின்பெய்த் என்னும் நிறுவனம் பயிற்சியளிப்பது உண்மைதான்' என ஒத்துக்கொண்டார். இஸ்ரேலிய நலன்பிரிவின் கொழும்பு பொறுப்பை கூடுதலாக கவனித்த டேவிட் மத்நாய் விடுவிக்கப்பட்டு, நிரந்தர அதிகாரியாக அக்ரயில் கார்பி' என்பார் பொறுப்பேற்றார்.

இஸ்ரேலியரின் இலங்கை வருகை "விசா' எதுவுமின்றி அனுமதிக்கப்பட்டது. இவர்களின் வருகையும், பயிற்சியும் இலங்கை ராணுவத்தினரின் செயல்பாடுகளில் நன்கு வெளிப்பட்டது. பாலஸ்தீனத்தில் நடைபெறும் இஸ்ரேலியரின் வெஸ்ட்பாங்க் தாக்குதலை அவை ஒத்திருந்தன.

தொடர்ச்சியான ஒரு மணி நேர ஊரங்குச் சட்டம் அமல் செய்யப்பட்டது. இளைஞர்கள் கைது, தொடர்ந்து விசாரணைக்காக பெற்றோர்கள் பிள்ளைகளை ஒப்படைக்கும் உத்தரவு அறிமுகம் செய்யப்பட்டது. பொய்வாக்குறுதிகள், சிறையில் தள்ளுதல், மோசமான வழிமுறைகளைப் பயன்படுத்தி விசாரணை, கடற்கரை கிராமங்களில் குண்டுவீச்சு, கிராமங்கள் தீக்கிரை-என எல்லாமே இஸ்ரேலிய உத்திபடி நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Editorial%20Articles&artid=91165&SectionID=133&MainSectionID=133&SEO=&Title=

♥ "இலங்கைத் தமிழர் வரலாறு பாகம் 48 -"தினமணி" தொடர் ♥







"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - 48: நிர்மலா சிறைமீட்பு!
பாவை சந்திரன்


தமிழீழப் புரட்சிகரப் போராளியான நிர்மலா 1982-ஆம் ஆண்டு நவம்பர் 20-ஆம் தேதி தனது கணவர் நித்யானந்தனுடன் கைது செய்யப்பட்டார். அவர்மீது சாட்டப்பட்ட குற்றம்:

சாவகச்சேரி போலீஸ் நிலையத்தைத் தாக்கிக் காயமுற்ற ஈழ விடுதலைப் போராட்ட வீரர்களுக்குப் புகலிடம் கொடுத்தார். விடுதலைப் போராளிகளைப் பற்றிய தகவல் அறிந்தும் போலீஸôருக்குத் தெரிவிக்கவில்லை என்பதாகும்.

இவர் குருநகரின் ராணுவ முகாமில் சில காலமும் வெலிக்கடைச் சிறையிலுமாக வைக்கப்பட்டார். வெலிக்கடைச் சிறையில் தங்கதுரை, குட்டிமணி, ஜெகன் போன்றோர் படுகொலை செய்யப்பட்டபோது இவரின் உயிருக்கும் உலை வைக்கப்பட்டது. அந்தச் சதியிலிருந்து நிர்மலா தப்பினார். பின்னர் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார்.

1983 செப்டம்பர் 23-ஆம் தேதி ஈழப் போராட்ட வீரர்கள் மட்டுநகர் சிறைச்சாலையிலிருந்து தப்பி வெளியேறியபோது இவர் தப்ப முடியாத நிலை ஏற்பட்டது. இந்தத் தப்பித்தல் நடந்த பிறகு ராணுவத்தின் அதிரடிப் படைப்பிரிவினர் மட்டக்களப்பு சிறைச்சாலையின் பாதுகாப்புக்கென நிரந்தரமாக்கப்பட்டனர்.

நிர்மலாவைத் தப்பிப்பது என்பது சாத்தியமில்லை என்று அனைவராலும் நம்பப்பட்டது. ஆனாலும் தமிழீழ விடுதலைப் புலிகள் துணிகரமான சிறை மீட்பு திட்டம் ஒன்றினைத் தீட்டினர்.

1984 ஜூன் 15-இல் கொழும்பு உயர்நீதிமன்றத்தில் நடக்கும் விசாரணைக்கெனக் கொழும்பிற்கு நிர்மலாவைக் கொண்டு செல்ல அரசு முடிவு செய்திருந்தது. அதற்கு முன்னதாக நிர்மலாவை மீட்க வேண்டும்.

விடுதலைப் புலிகள் ஜூன் 10-ஆம் தேதி இரவு 7.15 மணியளவில் அதி நவீன ரக ஆயுதங்களுடன் மட்டக்களப்புச் சிறைச்சாலையை முற்றுகையிட்டனர். வீரர்கள் அனைவரும் சிறைக்காவலாளி உடையில் இருந்தனர்.

சிறைச்சாலைக் கதவைத் தட்டி, கொழும்பிலிருந்து சில கைதிகளை அடைப்பதற்காகக் கொண்டு வந்திருப்பதாகக் கூறி கதவைத் திறக்கச் சொன்னார்கள். முதலாவது கதவு ஒருக்களித்தவாறு திறக்கப்பட, விடுதலைப் புலிகள் உள்ளே நுழைவதற்குள் அசம்பாவிதம் நடக்கப்போகிறது என்று சிறை அதிகாரிகள் உணர்ந்து உஷாராயினர். விரைவாகக் கதவை மூடவும் முற்பட்டனர்.

சிறைக்குள் துப்பாக்கிப் பிரயோகம் செய்வது நல்லதல்ல, பாதுகாப்பானதும் அல்ல என்ற முடிவுக்கிணங்க விடுதலைப் புலிகள் துப்பாக்கியின் துணையை நாடவில்லை. மாறாக, சற்றும் தாமதிக்காது அதிரடி முறையில் கைகளால் மட்டுமே தாக்குதலைத் தொடுத்தனர். சிறை அதிகாரிகளை மடக்கினர். இந்த மோதலில் இரண்டு சிறை அதிகாரிகளுக்குப் பலத்த காயம் ஏற்பட்டது.

சிறைச்சாலைக்குள்ளேயும் பலத்த பாதுகாப்பு இருந்தது. இரண்டாவது-இரும்புக் கதவுக்குரிய சாவியைச் சிறை அதிகாரிகளிடமிருந்து பெறமுடியவில்லை. இரும்புக்கதவை உடைத்தே திறந்தனர். விடுதலைப்புலிகளின் தாக்குதலை அறிந்த காவலாளிகள் பலர் எதிர்த்துப் போராடாது தப்பினால் போதும் என்று ஓடி ஒளிந்தனர். இரும்புக் கதவை உடைத்துத் திறந்ததும் பெண்களுக்கான சிறைக் கதவையும் உடைத்தனர்.

நிர்மலா இருந்த சிறைக்கதவுச் சாவியை வைத்திருந்தவர் ஓடி ஒளிந்து விட்டதால் அந்தக் கதவையும் உடைத்தே திறந்தனர். வெளியே ஏதோ நடக்கிறது என்பதைச் சூசகமாக உணர்ந்து கொண்ட நிர்மலா தனது அறையின் கதவு உடைபடுவதை அறிந்து தயார் நிலையில் இருந்தார். கொரில்லா வீரர்கள் சிறைக்கதவை உடைத்ததும், தாமதம் ஏதும் செய்யாது சில மணித்துளிகளில் அங்கிருந்து வீரர்கள் யாவரும் வெளியேறினர். நிர்மலா நித்யானந்தன் சிறை மீட்கப்பட்டதும் அவரையும் கணவர் நித்யானந்தனையும் அதி வேகப் படகு மூலம் தமிழகத்திற்கு அழைத்து வந்தனர். விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் வே.பிரபாகரன், பேபி சுப்ரமணியம், ரகு உள்ளிட்டோர் நிர்மலாவை புலவர் புலமைப்பித்தன் இல்லத்தில் தங்க வைத்தனர்.

இந்தச் சிறை மீட்புப்பணி தமிழீழ விடுதலைப்புலிகளின் புரட்சிகரமான ஆயுதப் போராட்ட வரலாற்றில் சிறப்பான அத்தியாயமாயிற்று!


http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Editorial%20Articles&artid=90551&SectionID=133&MainSectionID=133&SEO=&Title=

♥ "இலங்கைத் தமிழர் வரலாறு பாகம் 47-"தினமணி" தொடர் ♥







"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - 47: மட்டுநகர் சிறையுடைப்பு!


தீக்கிரையாக்கப்பட்ட தமிழர் கடைகளில் ஒன்று...

தமிழர்களின் கடைகளையும் தொழிற்சாலைகளையும் அழிப்பதற்கு அடையாளம் காட்டியவரும், புத்தமத வெறியரும் தொழிற்சங்கத் தலைவருமான சிறில் மத்தியூதான் ராணுவ-சிங்கள வெறிக் கும்பலின் தமிழர் அழித்தொழிப்பு திட்டங்களின் "மூளை' எனப்படுபவர்.

இந்த மத்தியூ பாராளுமன்றத்தில் புத்தமதப் பலாத்காரத்தை நியாயப்படுத்திப் பேசினவர் ஆவார்.

""சிங்களவர்கள் பல வருடங்களாகவே தளர்ச்சி அடைந்துள்ளனர். அவர்கள் வேறுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் பெரும்பான்மையான இனமாக இருக்கும்போது அவர்கள் ஏன் ஆசியாவிலும் பெரும்பான்மையராக இருக்கக் கூடாது'' என்று கூச்சலிட்டார்.

சிங்கள இனவாத வெறியுடன் கூடவே பாசிச ஜெயவர்த்தனா அரசாங்கம் தமிழர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளத் தொடுத்த அனைத்து எதிர்ப்பு நடவடிக்கைகளையும் கடுமையான பலாத்காரத்துடன் ஒடுக்கியது. அதேசமயம் சிங்களவர்களின் அட்டூழியத்தைக் கண்மூடி மெüனியாகவே எதிர்கொண்டது.

தமிழர் வாழும் பகுதியில் பீரங்கி வண்டிகளைத் தெருக்களில் நடமாடவிட்டும், ஹெலிகாப்டர்களைத் தாழ்வாகப் பறக்கவிட்டும் தமிழர்களுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன.

கொழும்புக்கு வெளியே பதின்மூன்று மாவட்டங்களில் ராணுவ சிவிலிய நடவடிக்கைகளை ஒன்றிணைக்க 10 மூத்த ராணுவ அதிகாரிகளையும், மூன்று உயர்மட்ட அதிகாரிகளையும் அரசு நியமித்தது.

இலங்கையின் 13,000 பேர் கொண்ட இலங்கை ராணுவத்தில் பாதிக்கு மேல் யாழ்ப்பாணப் பகுதியில் மட்டுமே குவிக்கப்பட்டு தொடர்ந்து அங்கு நிற்க வைக்கக்கூடிய பகுதியாக அது மாற்றப்பட்டது.

யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார் மாவட்டங்களில் ராணுவ ஆட்சியாலும், நெருக்கடி நிலை சட்டங்களாலும் பலப்படுத்தப்பட்டதன் விளைவாக எவ்வித பின்விளைவு பற்றியும் பயமின்றி பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை பயன்படுத்துவதில் சர்வ சுதந்திரமாகச் செயல்பட ராணுவம் அனுமதிக்கப்பட்டது.



மேலும் பிரிவினை கோரும் அனைத்துக் கட்சிகளையும் தடை செய்து ஓர் அரசியல் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது.

இக்கலவரத்தின் உச்சகட்டத்தில் அரசாங்கம் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்படும் மக்களின் சடலங்களை, அவர்கள் யார் என்ற விவரம் தெரிவிக்காமல் புதைக்கவும், எரிக்கவும் அனுமதித்தது. லண்டனில் உள்ள சர்வதேச மனித உரிமைக் கழகமானது, இலங்கைப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பற்றி கருத்துக் கூறுகையில், இலங்கையில் செய்யப்பட்டிருக்கும் அரசியல் சட்டத் திருத்தம் தென் ஆப்பிரிக்காவில் உள்ள சட்டங்களைக் காட்டிலும் மிக மோசமான சட்டமாகும் என்று கூறுகிறது.

இச்சட்டத்தின்படி விசாரணை இன்றி 18 மாதம் சிறை வைக்கவும், விருப்பப்படி கைது செய்யவும், சந்தேகப்படும் யாரையும் மிக மோசமான சித்திரவதை வழிமுறைகளில் விசாரணை செய்யவும், நடைமுறையில் வரம்பில்லாத அதிகாரத்தை ராணுவத்திற்கு அளிக்கிறது.

இவ்வளவு வன்முறைகளும், கொலைகளும், கொள்ளைகளும் நடத்தப்பட்ட ஜூலைக் கலவரம் சிங்களச் சிப்பாய்கள் 20 பேர் கொல்லப்பட்டதன் தொடர்நிகழ்வு என்று ஜெயவர்த்தன அரசும் வேறு சிலரும் பிரசாரம் செய்தார்கள்.

ஆனால், தன்னை மறந்த நிலையில் ஜெயவர்த்தன ஜூலைக் கலவரத்தின் இரு வாரங்கள் கழித்து, பி.பி.சி நிருபருக்கு அளித்த பேட்டியில், ""இவ்வன்முறை தொடங்குவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பே, ஜூலை முதல் வாரத்தையடுத்து, கலவரத்தைத் தூண்டும் நோக்கில் தமிழருக்கு எதிரான உணர்வுடன் ராணுவம் கட்டுக்கடங்காமல் நடந்துகொண்டது. இந்தச் செய்தியை வேண்டுமென்றே மறைத்துவிட்டார்கள்'' என்று கூறி ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.

ஏககாலத்தில், லண்டனில் இருந்து வெளியாகும் "கார்டியன்' இதழ், சிப்பாய்களின் கட்டுக்கடங்காத செயல் என்னவென்று ஏராளமான படங்களுடன் வெளியிட்ட செய்தி என்ன தெரியுமா?

பேருந்து நிலையம் சென்று 18-20 வயதுள்ள மாணவர்களை வரிசையாக நிற்கவைத்துச் சுட்டுக்கொன்றனர். பின்னர் ஒரு கிராமத்தில் நுழைந்து, கண்ணில் பட்டவர்களையெல்லாம் சுட்டு வீழ்த்தினர். அதன்பின்னர், அவர்கள் அனைவரும் முகாம் செல்லுமாறு உத்திரவு இடப்பட்டது.

பின்னர், அதே சிப்பாய்கள் சாதாரண உடையில் திரும்பவந்து ஒவ்வொரு வீடுகளிலும் நுழைந்து சுட்டுத்தள்ளிக் கொண்டே, கையில் கிடைத்தப் பொருள்களையெல்லாம் வாகனத்தில் எடுத்துப்போட்டுக்கொண்டே சென்றனர்.

இப்படிப்பட்ட வன்கொடுமை நடைபெற்ற பின்னர்தான் போராளிகள் இந்த இரக்கமற்ற சிப்பாய்களுக்குத் தண்டனை அளித்தனர் என்றும் "கார்டியன்' செய்தி வெளியிட்டிருந்தது(தகவல்: கு.வெ.கி.ஆசான், "ஈழ விடுதலைப் போர்' 1948-1996).

இப்படுகொலைகள் குறித்து நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் அ.அமிர்தலிங்கம் மற்றும் திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சம்பந்தன் இருவரும் "இலங்கையின் இனப்படுகொலைகள்' என்னும் தலைப்பில் கடிதம் எழுதியதுடன், அதை தகவல் தொடர்புச் சாதனங்களுக்கும் அளித்தனர்.

வெலிக்கடைச் சிறைச்சாலையில் உயிர் தப்பிய 19 தமிழ் இளைஞர்களும் நிர்மலா நித்தியானந்தனும் ஜூலை 27-ஆம் தேதி இரவு கட்டுநாயக்கா விமான நிலையத்திற்குக் கொண்டு வரப்பட்டனர். வெலிக்கடைத் தாக்குதலின்போது படுகாயமுற்றிருந்த இக்கைதிகள் ராணுவ வீரர்களினால் பஸ்ஸிற்குள் குப்புறப்படுத்திருக்கும்படிக் கட்டளையிடப்பட்டனர். அங்கு காவலுக்கு நின்ற ராணுவ வீரர்கள் இழிவான வார்த்தைகளினால் ஈழப் போராளிகளை ஏசியதுடன் அவர்களைத் தாக்கியும் துன்புறுத்தினர்.

வெறும் தண்ணீர்கூடக் கொடுக்கப்படாது அன்றிரவு முழுவதும் அங்கு வைத்திருக்கப்பட்ட இக் கைதிகள் மறுநாள் 28-ஆம் தேதி காலை மட்டுநகர்ச் சிறைச்சாலைக்கு விமானப்படை விமானம் மூலம் எடுத்துச் செல்லப்பட்டனர். விமானத்தில்கூட காயமுற்றிருந்த இக்கைதிகள் கீழே குனிந்தபடி இருக்குமாறு பணிக்கப்பட்டனர்.

ஜூலை 28-ஆம் தேதியும் அதற்குப் பின்னரும் சிங்களப் பிரதேசங்களிலிருந்த ஏனைய தமிழ் அரசியல் கைதிகள் சுமார் 25 பேரும் மட்டுநகர்ச் சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். இப்போராளிகள் மட்டுநகர்ச் சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்த சமயம் அங்குள்ள புத்தவிகாரையில் கைக்குண்டுகள், பெட்ரோல், டயர் போன்றவை அங்கு முகாமிட்டிருந்த ராணுவத்தினரால் சேமித்து வைக்கப்பட்டிருந்தன.

இவை மட்டுநகர்ச் சிறைச்சாலை உட்பட மட்டுநகரை எரிப்பதற்காகச் சேமிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. மட்டுநகர்ச் சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகளை மீண்டும் கொழும்பிற்கு மாற்ற சில நாள்களுக்குப்பின் அரசு முயற்சியெடுத்தது. சிங்கள அரசின் இம்முயற்சியை ஈழப் போராளிகள் செப்டம்பர் 23-ஆம் தேதி முறியடித்தனர்.

இவர்கள் விடுதலைப் போராட்டத்தை வெளியே தொடர்வதற்காகவும் இனவெறி அரசு தம்மைக் கொல்வதற்கான முயற்சியைத் தவிடுபொடியாக்கும் எண்ணத்துடனும் செப்டம்பர் 23-ஆம் தேதி இரவு சுமார் 7.45 மணியளவில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மக்கள் விடுதலைப் படையினரின் முன்முயற்சியால் மட்டுநகர்ச் சிறையைத் தகர்த்துப் புதிய வரலாறு படைத்தனர்.

மொத்தம் சுமார் 60 தமிழ் அரசியல் கைதிகள் மட்டுநகர்ச் சிறைச்சாலையிலிருந்து தப்பி வந்து விடுதலைப் போராட்டத்தை மேலும் ஊக்கத்துடன் தொடர்ந்தனர். (சிறையில் இருந்த பிற விடுதலைக் குழுக்களும் இதில் இணைந்து பங்கெடுத்தனர் என்றும் கூறப்படுகிறது.) மட்டுநகர்ச் சிறையுடைப்புச் சம்பவமானது உலகின் சமீபகால வரலாற்றில் மிகப்பெரியது என்பதுடன், எந்தவொரு தமிழ் அரசியல் கைதியும் கைது செய்யப்படாது தப்பிவிட்டனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.*

* -ஸ்ரீலங்கா, வெலிக்கடைச் சிறைப் படுகொலைகள்-ஈழ மக்கள் செய்தி தொடர்பு வெளியீட்டிலிருந்து.

http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Editorial%20Articles&artid=89910&SectionID=133&MainSectionID=133&SEO=&Title=

♥ "இலங்கைத் தமிழர் வரலாறு பாகம் 46 -"தினமணி" தொடர் ♥







"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - 46: ராணுவம் நடத்திய கொடூரத் தாக்குதல்கள்!





1983 ஜனவரியில் இருந்தே தொடர்ந்து ராணுவ பயங்கரவாத நிலைமைகள் யாழ் பகுதியில் நிலவியது. ராணுவ ஆட்சி போன்ற மூர்க்கத்தனமான கொடுமையை இலங்கைத் தமிழர்கள் மீது ஜனநாயகத்தின் பேரால் அரசு நடத்தியது.

ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு இதன் உச்ச கட்டம் படிப்படியாக வளர்கிறது. வவுனியாவில் இருந்த, 1977-லிருந்து 1981 வரை நடந்த கலவரத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் அகதிகள் அனைவரையும் காந்தீயம் நிறுவனம் புனரமைப்புச் செய்திருந்தது. அதே இடத்தில் மீண்டும் ராணுவம் ஒரு தாக்குதலைத் தொடுக்கிறது. இதில் ஆயிரக்கணக்கான அகதிகள் பாதிக்கப்பட்டனர்.

மே மாதம் 18-ஆம் தேதி அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு யாழ்ப்பாணம் வெளி உலகோடு துண்டிக்கப்பட்டுப் பத்திரிகைத் தணிக்கை அமல் படுத்தப்பட்டது.

ராணுவத்தினரின் அட்டகாசம் வெளி உலகிற்குத் தெரியாமல் இருக்கவே இப்பத்திரிகைத் தணிக்கை முறை மேற்கொள்ளப்படுகிறது. இந்த நிலையில் ராணுவ மிருகங்கள் மூன்று தமிழ்ப் பெண்களைக் கடத்திச் சென்று கற்பழித்து எறிந்து விடுகிறார்கள். தமிழ் மக்கள் ஆவேசமடைகிறார்கள். ஆத்திரம் அடைந்த விடுதலைப் புலிகள் ராணுவத்தினருடன் மோதி ராணுவ டிரக்கை குண்டு வீசி அழிக்கிறார்கள். 13 ராணுவத்தினர் கொல்லப்படுகின்றனர். ராணுவம் மூர்க்கத்தனமான ஆத்திரத்துடன் வெறி பிடித்து அலைந்தனர்.

இறந்த ராணுவச் சடலங்கள் ஜூலை 24-ஆம் தேதி கொழும்புக்குக் கொண்டுவரப்பட்டன. ராணுவத்தினரின் கோபம் முதலில் ஜனாதிபதி ஜெயவர்த்தனாவுக்கு எதிராகத் திரும்பியது. அவருடைய கார் தாக்கப்பட்டது. மயானத்திற்குச் செல்லமுடியாமல் அவர் ராணுவத்தினரால் தடுக்கப்பட்டார். வெறி அடங்காத ராணுவத்தினர் சிங்களவர்களுடன் சேர்ந்துகொண்டு கலவரத்தில் இறங்கினர்.

முதலில் தமிழர் அதிகம் வசிக்கின்ற பதுளைப் பகுதியில் அட்டூழியங்கள் துவங்கின. பின் திம்பிரிகசாயாப் பகுதிக்குப் பரவியது. கண்ணில் படும் தமிழர்கள் அனைவரையும் சிங்களவர் தாக்கினர். பொருள்களைக் கொள்ளையடித்தனர். உடமைகளுக்குத் தீ வைத்தனர்.

இக்கலவர நெருப்பு, பின்னர் வெள்ளவத்தை, தெகிவளை, பம்பலப்பிட்டி, கொள்ளுப்பிட்டி போன்ற தமிழர் பகுதிகளுக்கும் பரவியது.

அரசால் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அது வளர்ந்தது. இந்த நேரத்தில்தான் கொழும்பு வெலிக்கடைச் சிறைச்சாலையில் படுகொலைகள் - நாகரிக மனிதச் சமூகம் இதுவரை கேள்விப்படாத வகையில் நடந்தன. இதைத் தொடர்ந்து இரு வார காலக் கலவரங்களின் போது கொழும்பில் மட்டுமே ஏறத்தாழ 2000 தமிழர்கள் கொல்லப்பட்டனர்.

ஒரு லட்சம் மக்களுக்கு மேலானவர்கள் வீடிழந்தனர். அகதிகள் நிலைக்கு ஆளாகி "முகாம்'களில் தங்கவைக்கப்பட்டனர். அவர்களின் உடமைகள் கொள்ளை அடிக்கப்பட்டன. வியாபாரத் தொழில் நிறுவனங்கள் தகர்க்கப்பட்டன.

ராணுவத்தின் ஆதரவுடன் சிங்களக் குண்டர்கள் மேற்கொண்ட அட்டூழியம் கண்டி, நுவரேலியா, சந்தைப் பகுதி, மாத்தளை ஆகிய இடங்களுக்கும் பரவியது. அங்கும் வன்முறை வெறியாட்டங்கள் நடத்தப்பட்டன.

அனைத்துப் பிரதான சாலைப் போக்குவரத்துகளும், தமிழர்களை சோதனை இடுவதற்காகத் தடுத்து நிறுத்தப்பட்டன.

எல்லா இடங்களிலும் தமிழர்கள் ஊரடங்கு சட்டத்தின்போது வீடுகளுக்குள்ளேயே தங்கி இருந்தார்கள். ஊரடங்குச் சட்டம் நீடித்த நேரம் சிங்கள வெறிக் கூட்டத்திற்குச் சரியான வாய்ப்பாக இருந்தது.

அப்போதுதான் உச்சகட்டமாக அட்டூழியம் நிகழ்த்தப்பட்டது. திருகோணமலைப் பகுதி இருதடவை கடற்படை ராணுவத்தின் கொள்ளைக்கு ஆட்பட்டது.

அவர்கள் தங்கள் முகாம்களை விட்டு வெளியேறி அட்டூழியத்தில் இறங்கினர். கலவரம் நீடித்த இருவார காலத்தின் இறுதி நாட்களில் தமிழர்களில் அரசு ஊழியர்களாக இருந்த பலர் அலுவலகத்திற்கு வரவில்லை. நிர்வாகம் ஸ்தம்பித்தது. எல்லாத் தமிழர்களுமே பாதிக்கப்பட்டனர்.

துணி, திரைப்பட விநியோகம், போக்குவரத்து போன்றவற்றில் முதன்மையாக இருந்து வந்த குணரத்தினம் என்பவரும், செயின்ட் அந்தோணி இரும்பு எஃகு வியாபாரம், சின்டெக்ஸ் மற்றும் ஆசியன் காட்டன் மில்ஸ் ஆகியவற்றின் உரிமையாளரான ஞானம் (இதில் 10,000 பேர் வேலை செய்த சின்டெக்ஸ் தொழிற்சாலை தரைமட்டமாக்கப்பட்டு திரும்பவும் எடுத்து நடத்த முடியாத அளவுக்கு சேதப்படுத்தப்பட்டது) என்பவரும், அலங்காரப் பொருள் உற்பத்தியிலும், இறக்குமதி ஏற்றுமதி வியாபாரத்திலும் தமிழர்களில் முதன்மையான வருமான இராஜமகேந்திர மகாராஜா ஆகியோருடன் 50 ஆண்டுகளாகக் காலூன்றி வளர்ந்த ஐதராமனிஸ், ஜெபர்ஜீஸ், சிந்தி, போக்ரா வியாபாரிகளும் கூட சுமார் 800 கோடி ரூபாய்க்கு (அன்றைய மதிப்பில்) மேல் நஷ்டம் அடையும் வகையில் கலவரம் உச்ச நிலையில் இருந்தது.

மேற்கூறிய தொழிற்சாலைகள் பாதிக்கப்பட்டதால் 1.5 லட்சம் பேருக்கு மேல் வேலைவாய்ப்பு இழந்தனர். அரசு மேற்பார்வையிலேயே கலவரம் தூண்டிவிடப்பட்ட போதிலும், ராணுவத்தினர் மீது தன் கட்டுப்பாட்டை ஜனாதிபதி இழந்தார். தன் சொந்தப் பாதுகாப்பிற்கே விசுவாச ராணுவ உயர் அதிகாரிகளிடம் தஞ்சம் அடைந்தார்.

அந்த அளவிற்கு அரசும், கட்சிகளும் தூண்டிவிட்ட இனவெறி வாதம் ராணுவத்தினரிடம் ஊறிப் போய் இருந்தது.

வாக்காளர் பட்டியலைக் கையில் வைத்துக் கொண்டு தமிழர்களுக்குச் சொந்தமான கடை, வீடுகள், தொழிற்சாலைகளின் முகவரியைத் தேடித்தேடி இனவெறிக் கும்பல் அலைந்தது.

ராணுவம் தங்களுக்குள் திட்டமிட்டு பல குழுக்களாகப் பிரிந்து தமிழர் பகுதிகளைத் தேர்ந்து எடுத்துக் கொடூரமான தாக்குதல் நடத்தியது.

அதேநேரத்தில் சிங்களக் கூட்டமும், கலக ராணுவமும் பிக்குப் பெரமுனவைச் சேர்ந்த தீவிர புத்தமத வெறியர்களால் வழிகாட்டப்பட்டுச் செயல்பட்டனர்.

நாளை: மட்டுநகர் சிறையுடைப்பு!

http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Editorial%20Articles&artid=89341&SectionID=133&MainSectionID=133&SEO=&Title=

♥ "இலங்கைத் தமிழர் வரலாறு பாகம் 45 -"தினமணி" தொடர் ♥






'ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு'- 45: திட்டமிட்டு நிறைவேற்றிய சதி!





ராணுவத்தினரின் கண்ணீர்ப்புகைப் பிரயோகத்தைத் தொடர்ந்து சிங்களக் கைதிகள் கலைந்தனர். மேல் மாடியில் ஐந்து சிங்களக் கைதிகள் கண்ணீர்ப் புகையைச் சகிக்க மாட்டாது தமிழ்ப் போராளிகள் வசம் அகப்பட்டபோது தமிழ்ப் போராளிகள் சிங்களக் கைதிகளுக்கு உயிர்ப்பிச்சை அளித்தனர். சிங்களக் கைதிகள் கலைந்தவுடன் தமிழ்க் கைதிகள் விழுந்துகிடந்த தமது தோழர்களை அணுகியபோது படுகாயமுற்ற பலரின் உயிர்கள் பிரிந்துவிட்டன. படுகாயமுற்ற சிலரின் உயிர்கள் ஊசலாடிக் கொண்டிருந்தன. உயிர்கள் ஊசலாடிக் கொண்டிருந்தோரை சிறை அலுவலர்கள் தாக்கிக் கொண்டிருந்தனர்.

படுகாயங்களுடன் யோகராசா என்ற தமிழப் போராளி கொழும்புப் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது அங்கிருந்த சிங்கள வைத்தியர்கள் சிகிச்சையளிக்க மறுத்துவிட்டனர். அங்கிருந்த சிங்களத் தாதிகள் கேலி செய்தனர். இறுதியாகச் சிங்களப் பெண் டாக்டர் ஒருவர் யோகராசாவுக்குச் சிகிச்சையளித்து யோகராசாவுக்கு மறுபிறப்பு அளித்தார்.

27.7.1983 அன்று 18 தமிழ்ப் போராளிகள் படுகொலை செய்யப்பட்டார்கள். 19 பேர் தமது பயங்கர அனுபவங்களுடன் தப்பிப் பிழைத்தனர்.

வெலிக்கடையில் கொல்லப்பட்ட ஈழப் போராளிகளின் உடல்களை அவர்களது பெற்றோர், மனைவி, மக்கள், உறவினர், நண்பர்கள் பார்க்க அனுமதிக்கப்படவில்லை. ஈழப் போராளிகளின் உடல்கள் அவர்களது விருப்பத்திற்கு மாறாகச் சிங்கள மண்ணில் சங்கமமானது. சிங்களப் பாசிசச் சட்டத்தின் கீழ்க் கொல்லப்படும் எந்த நபரினது உடலையும் மரண விசாரணையின்றித் தகனம் செய்யவோ, அடக்கம் செய்யவோ முடியும். இதன்மூலம் ஆயுதப்படையினர் கேட்பாரின்றித் தமிழர்களைக் கொலை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

தமது பாதுகாப்பிலிருந்த சிறைக்கைதிகளின் கொலைகளுக்கு அரசு முழுப்பொறுப்பையும் ஏற்கவேண்டும். ஒரு கம்பித்துண்டைச் சிறைக் கைதிகள் வைத்திருப்பதையே மிகவும் பாரதூரமான குற்றம் எனக் கருதும் சிறைச்சாலை நிர்வாகம் பயங்கரமானதும் கொல்லக்கூடியதுமான ஆயுதங்களைச் சிங்களக் கைதிகள் வைத்திருக்க அனுமதித்தது ஏன்?

தாக்குதல் தொடங்கியவுடன் சிறை அதிகாரிகளோ அருகிலிருந்த ராணுவத்தினரோ சிங்களக் கைதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காது உற்சாகமூட்டியது ஏன்? 23-ஆம் தேதி படுகொலைகளைத் தொடர்ந்து சட்ட அமைச்சகம் நீதி விசாரணை நடைபெறும் என அறிவித்தது. ஆனால் எந்தவிதப் பாதுகாப்பும் கொடுக்கப்படாததால், முதல் நாள் கொலையிலிருந்து தப்பிய தமிழ்க் கைதிகள் 27-ஆம் தேதி கொலை செய்யப்பட அனுமதிக்கப்பட்டார்கள்.

""இலங்கையிலேயே மிகப்பெரிய சிறைச்சாலை கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையாகும். கண்டி போகம்பர சிறைச்சாலையைவிடப் பன்மடங்கு பிரம்மாண்டமானதும், சிறந்த பாதுகாப்பும் கொண்டது. இதன் வாசலில் சிறைச்சாலை கண்காணிப்பாளர் அலுவலக வீடு உள்ளது. சிறைச்சாலையின் வெளிவாசலுக்கு வலது பக்கம் பெண்கள் சிறையுண்டு. அதற்கு முன்பக்கத்தில் சிறைச்சாலை கமிஷன் அலுவலகம் உண்டு. அதன் பின்பக்கத்தில் கொழும்பு விசாரணைக் கைதிகளின் சிறைச்சாலை.

வெலிக்கடை சிறைச்சாலையின் இடது பக்கமாகச் செல்லும் சிறிய தெருவில் ஓரங்களில் சிறை உத்தியோகஸ்தர்கள், காவலர்களின் வீடுகள் உள்ளன. இவைகளுடன் சிறைச்சாலை வாசலில் ராணுவப் பாதுகாப்பும் இருந்தது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் அமைந்திருக்கும் ஒரு சிறைக்குள் இவ்வளவு பெரிய கொலைகள் நடந்தது என்றால், இது அரசின் ஆசீர்வாதத்துடன், உயர் அதிகாரிகளின் ஆதரவுடன் நடந்த கொலைகள்தான் என்பது பெரியதொரு புதிரில்லை'' என்கிறார் ஈ.பி.ஆர்.எல்.எஃப் போராளியான புஷ்பராஜா, ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம் என்கிற அவரது நூலில் (பக்.371-372).

வெலிக்கடைக் கொலைச் சம்பவங்களுக்கு முந்தைய சில நாட்களில் ""தீவ்யன'' போன்ற சிங்களப் பத்திரிகைகளில் தமிழ்க் கைதிகள் சிறைச்சாலைகளில் விசேஷமாகக் கவனிக்கப்படுகிறார்கள் என்று பொய்ச் செய்திகள் வெளியிடப்பட்டதன் மூலமும் தமிழ்க் கைதிகளுக்கு எதிராகத் துவேஷம் சிங்களக் கைதிகள் மத்தியில் வளர்க்கப்பட்டது.

வெலிக்கடைச் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட எந்தவொரு சிங்களக் கைதிக்கு எதிராகவோ சிறைச்சாலை அதிகாரிக்கு எதிராகவோ இன்றுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இவையெல்லாம், வெலிக்கடைப் படுகொலைகள் முன்னரே திட்டமிடப்பட்டு நிறைவேற்றப்பட்ட சதி என்பதை எந்தவித சந்தேகமுமின்றி சுட்டிக்காட்டுகின்றன.



வெலிக்கடைச் சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்டவர்களின் விவரம் பின்வருமாறு:

தங்கதுரை என்று அழைக்கப்படும் நடராசா தங்கவேல், குட்டிமணி என்று அழைக்கப்படும் செல்வராஜா யோகச்சந்திரன், ஜெகன் என்று அழைக்கப்படும் கணேஷானந்தன் ஜெகநாதன், தேவன் என்று அழைக்கப்படும் செல்லதுரை சிவசுப்பிரமணியம், சிவபாதம் மாஸ்டர் என்று அழைக்கப்படும் நவரத்தினம் சிவபாதம், செனட்டர் என்று அழைக்கப்படும் வைத்திலிங்கம் நடேசுதாசன், அருமைநாயகம் என்றும் சின்னராஜா என்றும் அழைக்கப்படும் செல்லதுரை ஜெயரெத்தினம், அன்ரன் என்று அழைக்கப்படும் சிவநாயகம் அன்பழகன், ராசன் என்று அழைக்கப்படும் அரியபுத்திரன் பாலசுப்பிரமணியம், சுரேஷ் மாஸ்டர் என்று அழைக்கப்படும் காசிப் பிள்ளை சுரேஷ்குமார், சின்னதுரை அருந்தவராசா, தேவன் என்றும் அரபாத் என்றும் அழைக்கப்படும் தனபாலசிங்கம் தேவகுமார், மயில்வாகனம் சின்னையா, சித்திரவேல் சிவானந்தராஜா, கணபதிப்பிள்ளை மயில்வாகனம், தம்பு கந்தையா, சின்னப்பு உதயசீலன், கணேஷ் என்றும் கணேஷ்வரன் என்றும் அழைக்கப்படும் கதிரவேற்பிள்ளை ஈஸ்வரநாதன், கிருஷ்ணபிள்ளை நாகராஜா, கணேஷ் என்று அழைக்கப்படும் கணபதி கணேசலிங்கம், அம்பலம் சுதாகரன், இராமலிங்கம் பாலச்சந்திரன், பசுபதி மகேந்திரன், கண்ணன் என்று அழைக்கப்படும் காசிநாதன் தில்லைநாதன், குலம் என்று அழைக்கப்படும் செல்லப்பா குலராஜசேகரம், மோகன் என்று அழைக்கப்படும் குமாரசாமி உதயகுமார், ராஜன் என்று அழைக்கப்படும் சுப்பிரமணியம் சிவகுமார், ராஜன் கோதண்டபிள்ளை தவராஜலிங்கம், கொழும்பான் என்று அழைக்கப்படும் கருப்பையா கிருஷ்ணகுமார், யோகன் என்று அழைக்கப்படும் ராஜயோகநாதன், அமுதன் என்றும் அவுடா என்றும் அழைக்கப்படும் ஞானசேகரன் அமிர்தலிங்கம், அந்தோணிப் பிள்ளை உதயகுமார், அழகராசா ராஜன், வேலுப்பிள்ளை சந்திரகுமார், சாந்தன் என்று அழைக்கப்படும் சிற்றம்பலம் சாந்தகுமார் முதலிய 35 பேர்.



இரண்டாம் நாள் படுகொலை செய்யப்பட்டோர் விவரம் வருமாறு:

1. தெய்வநாயகம் பாஸ்கரன் 2. பொன்னம்பலம் தேவகுமார் 3. பொன்னையா துரைராசா 4. குத்துக்குமார் ஸ்ரீகுமார் 5. அமிர்தநாயகம் பிலிப் குமாரகுலசிங்கம் 6. செல்லச்சாமி குமார் 7. கந்தசாமி சர்வேஸ்வரன் 8. அரியாம்பிள்ளை மரியாம்பிள்ளை 9. சிவபாலம் நீதிராஜா 10. ஞானமுத்து நவரத்தின சிங்கம் 11. கந்தையா ராஜேந்திரம் 12. டாக்டர் ராஜசுந்தரம் 13. சோமசுந்தரம் மனோரஞ்சன் 14. ஆறுமுகம் சேயோன் 15. தாமோதரம்பிள்ளை ஜெயமுகுந்தன் 16. சின்னதம்பி சிவசுப்பிரமணியம் 17. செல்லப்பா இராஜரட்னம் 18. குமாரசாமி கணேசலிங்கன்.



நாளை : ராணுவம் நடத்திய கொடூரத் தாக்குதல்கள்!


http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Editorial%20Articles&artid=88722&SectionID=133&MainSectionID=133&SEO=&Title=

♥ "இலங்கைத் தமிழர் வரலாறு பாகம் 44 -"தினமணி" தொடர் ♥






ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு-44: மீண்டும் கொலைவெறித் தாக்குதல்!




அதேவேளை சி-3 பிரிவில் இருந்த ஈழப் போராளிகளையும் அன்றே கொல்வதற்கு இனவெறிக் கூட்டம் ஓடிவந்து இரும்புக் கதவுகளை உடைத்தபோது அங்கு வந்த சில சிறை உயர் அதிகாரிகள், ""இன்று இவ்வளவு போதும் சென்று ஓய்வெடுங்கள் வீரர்களே! உங்களுக்கு ஒன்றும் நடக்காது'' என்று கூறியபோது, அக்கும்பலின் வெறி தற்காலிகமாகத் தணிந்தது.
25.7.1983 அன்று வெலிக்கடைச் சிறைச்சாலையின் பி-3 பிரிவில் இருந்த 6 பேரும் டி-3 பிரிவில் இருந்த 29 பேரும் பலியெடுக்கப்பட்டனர். அதாவது அன்று இரண்டு பிரிவுகளிலும் இருந்த ஒருவரும் தப்பாது மொத்தம் 35 பேர் கொல்லப்பட்டனர்.
அன்று இரவு இப்படுகொலைகளை வழிநடத்திய சிறைக் கைதிகளுக்கு மதுவும் சுவையுணவும் தாராளமாகப் பரிமாறப்பட்டன. இப்படுகொலைகள் நடைபெற்ற மறுநாள் 26.7.1983 அன்று மாலை விசாரணை என்ற நாடகத்தை நடத்துவதற்குப் போலீஸôரும், நீதிபதியும், அரசாங்க உயர் அதிகாரிகளும் வந்து கொலைக்களத்தைச் சென்று பார்வையிட்டார்கள்.
சி-3 பிரிவில் இருந்த தமிழ் இளைஞர்களிடம் நடந்த சம்பவங்களை விசாரித்தார்கள். ""இனிமேல் நேற்று நடந்த மாதிரி ஒன்றும் நடக்கமாட்டாது'' என்று நீதிபதி, சிறை உயர் போலீஸ் அதிகாரிகள் எல்லாரும் கூடிப் பேசினார்கள். தேநீர் விருந்துடன் அன்றைய விசாரணை முடிவடைந்தது. வந்த அரசாங்க அதிகாரிகள் திருப்தியுடன் சென்றுவிட்டார்கள்.
நீதிபதி வருவதற்கு முன்பு சிறை அதிகாரிகள் அங்கே மிஞ்சியிருந்த தமிழ்க் கைதிகளை நீதிபதியிடம் ஒன்றும் கூறவேண்டாம் என்று மிரட்டினார்கள். எஞ்சியிருந்த தமிழ் இளைஞர்கள் சிறை அதிகாரிகளின் பயமுறுத்தலுக்கு அஞ்சாது படுகொலையில் சம்பந்தப்பட்ட சிங்களக் கைதிகளில் சிலரை அடையாளம் காட்ட முடியும் என்று விசாரணையின்போது தெரிவித்தனர்.
ஆனால் நீதிபதியோ, அதிகாரிகளோ இது விஷயமாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. வெலிக்கடைச் சம்பவத்தின்போது உயிர் தப்பிய தமிழ்க் கைதிகள் கொலைகாரர்களிடமிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ள வெலிக்கடையிலிருந்து வேறொரு இடத்துக்கு மாற்றும்படி விடுத்த கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை.
26.7.83 அன்று இரவு வானொலியில் முதலில் கொல்லப்பட்ட போராளிகளின் பெயர் விவரம் அறிவிக்கப்பட்டபோது சிங்களக் கைதிகள் ஆரவாரம் செய்து மகிழ்ச்சி கொண்டாடினர்.
வெலிக்கடையிலிருந்து தம்மை வேறு பாதுகாப்பான இடத்துக்கு மாற்றும்படி தமிழ் அரசியல் கைதிகள் விடுத்த கோரிக்கையை நிறைவேற்றாத அதிகாரிகள் ஒரு கண்துடைப்பு நடவடிக்கையை எடுத்தனர். 26-ஆம் தேதி நள்ளிரவு 2 மணிக்கு சப்பல் கட்டடத்தின் சி-3 பிரிவில் இருந்த எஞ்சிய தமிழ்க் கைதிகள் 28 பேரையும் ஒய்.ஓ. (வர்ன்ற்ட்ச்ன்ப் ஞச்ச்ங்ய்க்ங்ழ்ள்) கட்டடத்திற்கு மாற்றினார்கள்.
இக் கட்டடம் சப்பல் கட்டடத்திற்கு அருகாமையில் புத்த விகாரைக்குப் பின்னால் சிறைச்சாலையின் மத்திய பகுதியில் அமைந்துள்ளது. ஒய்.ஓ. கட்டடம் மேல்மாடி ஒன்றைக் கொண்டுள்ளது. மேல்தளம் மண்டப வடிவில் அமைந்துள்ளது. கீழ்த்தளம் பாதுகாப்பான இரும்புக் கதவுகளுடன் கூடிய 9 அறைகளைக் கொண்டுள்ளது.
ஒய்.ஓ. கட்டடத்தில் ஏற்கெனவே 9 தமிழ் அரசியல் கைதிகள் வைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் ஒன்பது பேரும் மேல் தட்டிற்கு மாற்றப்பட்டார்கள். மதகுருமார்கள் சிங்கராயர், சின்னராசா, ஜெயகுலராஜா, டாக்டர் ஜெயதிலகராஜா, விரிவுரையாளர் நித்தியானந்தன், காந்தீய தலைவர் எஸ்.ஏ. டேவிட், காந்தீய அமைப்புச் செயலாளர் டாக்டர் ராஜசுந்தரம், சுதந்திரன் ஆசிரியர் கோவை மகேசன், தமிழீழ விடுதலை அணித் தலைவர் டாக்டர் தர்மலிங்கம் ஆகியோர் மேல்தளத்தில் இருந்தார்கள். கீழ்த்தளத்தில் 8 அறைகளில் மும்மூன்று பேரும் ஓர் அறையில் நான்கு பேருமாக 28 தமிழ்க் கைதிகள் மாற்றப்பட்டனர்.
27.7.1983 அன்று பிற்பகல் 4 மணிக்கு ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. ஊரடங்கு நேரத்தையே சிறை அதிகாரிகள் இரண்டாவது கொலைத் தாக்குதலுக்கும் தெரிந்தெடுத்தனர். ஊரடங்குச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டு இருப்பதால் இப்படுகொலைச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி எந்தவொரு கைதியும் சிறையை விட்டுத் தப்பிச் செல்லும் எவரும் சுட்டுக் கொல்லப்படலாம், அல்லது கைது செய்யப்படலாம். ஊரடங்கு நேரத்தில் மரணத்திற்குப் பயந்து கைதிகள் தப்பிச்செல்ல முயற்சிக்கமாட்டார்கள் என்பது சதிகாரச் சிறை அதிகாரிகளுக்குத் தெரிந்திருந்தது.
இரண்டாவது நாள் படுகொலைத் திட்டத்தைக் கச்சிதமாக முழுமையாக நிறைவேற்றினார்கள். சிறைக் காவலர்கள் பயங்கரமான பொய் வதந்தி ஒன்றைக் கைதிகள் மத்தியில் பரப்பினர். யாழ்ப்பாணச் சிறைச்சாலையில் இருந்த சிங்களச் சிறை அதிகாரிகளும் கைதிகளும் தமிழ்க் கைதிகளினால் கொல்லப்பட்டுவிட்டனர் என்ற வதந்தி மூலம் எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றப்பட்டது.
27.7.1983 அன்று மாலை 4.00 மணிக்கும் 4.30 மணிக்கும் இடைப்பட்ட நேரம். சப்பல் பகுதியில் ஏ-3 விசேஷ பிரிவில் இருந்த விசாரணைக் கைதிகளும் (சிங்களவர்) தண்டிக்கப்பட்ட கைதிகளும் (இத்தாலிய விமானமொன்றை பிணைப் பணம் கேட்டு கடத்தியதற்காகத் தண்டிக்கப்பட்ட சேபால ஏக்க நாயக்கா உட்பட) கத்தி, கோடாரி, பொல்லு, விறகு கட்டை, கம்பி, குத்தூசி போன்ற ஆயுதங்களுடன் பெரும் கூச்சல் போட்டுக் கொண்டு கொலை வெறியுடன் ஒய்.ஓ. கட்டடத்தை நோக்கி ஓடிவந்தார்கள்.
ஏ-3 பிரிவில் இருந்த இக்கைதிகள் ஒய்.ஓ. கட்டடத்திற்கு வரவேண்டுமானால் பூட்டிய பெரும் இரும்புக் கதவுகள் மூன்றையும் பூட்டிய சிறிய இரும்புக் கதவொன்றையும் உடைத்தும் சுவரொன்றை ஏறியுமே உள்வர முடியும். ஆனால் கைதிகள் இக்கதவுகளை உடைக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. அக்கதவுகள் யாவும் அவர்களுக்காகத் திறந்து விடப்பட்டிருந்தன.
சுதந்திரமாக விடப்பட்ட முதல் நாள் சிங்களக் கொலைகாரர்களும் இவர்களுடன் சேர்ந்து கொண்டார்கள். தாக்க வந்தவர்கள் தமது கைகளில் சாவிக்கொத்தை வைத்திருந்தார்கள். சில கதவுகள் உடைக்கப்பட்டன; சில கதவுகள் சாவிகளினால் திறக்கப்பட்டன. மீண்டும் தமிழ் இளைஞர்களின் உயிர்கள் பறிக்கப்பட்டு ரத்த ஆறு ஓடியது.
முதல்நாள் படுகொலையின் பின்னர் எஞ்சிய தமிழ் இளைஞர்கள் எச்சரிக்கையுடன் இருந்தனர். சாவதற்கு முன் எதிர்த்துப் போராடுவதற்குத் தீர்மானித்துவிட்டனர். ஆயுதத் தாங்கிய கும்பலை எதிர்ப்பதற்கு அவர்கள் கையில் எந்தவிதக் கருவிகளும் இல்லை. போர்வையைக் கதவுக் கம்பிகளுக்குள் விட்டு, கதவைத் திறக்காதபடி போர்வையை உள்ளுக்குள் இருந்து இழுத்துப் பிடித்தனர். சிறை அறையில் பாத்திரங்களுக்குள் இருந்து சிறுநீரையும் சாப்பிடக் கொடுக்கப்பட்ட காரமான குழம்பையும் இடையிடையே கொலைகாரர்கள் மீது ஊற்றினார்கள். கொலை வெறியர்கள் கதவுக்கு அருகில் நெருங்கும்போது சாப்பாட்டுக் கோப்பைகளினால் குத்தப்பட்டார்கள்.
சிங்களக் கைதிகள் வெளியிலிருந்து நீண்ட தடிகளினாலும் கம்பிகளினாலும் குத்தினார்கள். தமிழ்ப் போராளிகள் பலருக்குக் காயம் ஏற்பட்டது. தமிழ்க் கைதிகள் போர்வையால் கதவை இழுத்துப் பிடித்தபோது சிங்களக் காடையர் போர்வைகளைக் கோடாரிகளினால் கொத்தினார்கள். இப்படியே சிறிது நேரம் போராட்டம் நீடித்தது. இதேசமயம் மேல்மாடியிலிருந்த தமிழ்க் கைதிகள் தம்மைப் பாதுகாக்கத் தயாரானார்கள்.
மத குருமார்களுக்குப் பூசை செய்ய மேஜை ஒன்று கொடுக்கப்பட்டு இருந்தது. மேல் மாடிக்குச் சுமார் 50 சிங்களக் கைதிகள் வருவதைக் கண்டதும் அவர்கள் மேசைக் கால்களை உடைத்துக் கையிலெடுத்துக் கொண்டனர். 75 வயது நிரம்பிய டாக்டர் தர்மலிங்கத்தின் கையில் கூட ஒரு மேசைக் கால் இருந்தது. ""நாங்கள் நாய் போலச் சாகக்கூடாது'' என்று டாக்டர் தர்மலிங்கம் வீரமூட்டினார். சிங்களக் கைதிகள் அறைக்கதவை ஒரே அடியில் உடைத்து விட்டனர்.
டாக்டர் ராஜசுந்தரம் கதவருகே சென்று சிங்களத்தில் ""நாங்கள் சகோதரர்கள். உங்களுக்கும் எங்களுக்கும் என்ன பிரச்னை? எங்களை ஏன் கொல்ல வருகிறீர்கள்?'' என்று கூறியபொழுது அவர் வெளியே இழுக்கப்பட்டார். தலையில் பலமான ஒரு அடி. டாக்டர் ராஜசுந்தரத்தின் தலை பிளந்து ரத்தம் ஆறாக ஓடியது. அத்துடன் பல உயிர்களைக் காப்பாற்றிய உயிர் பிரிந்தது.
இடையிடையே மேலேயிருந்த தமிழ்ப் போராளிகள் கதவுக் கம்பியில் ஓங்கி அடித்துச் சத்தமெழுப்பியபோது, சிங்களக் கைதிகள் பின்வாங்கினார்கள். உண்மையில் அவர்கள் கோழைகள். வெளியிலிருந்த சிங்களக் கைதிகள் கம்பிகளினாலும், தடிகளினாலும் குத்தினார்கள். வெளியிலிருந்து கைதிகள் எறிந்த கம்பி ஒன்று தமிழ்ப் போராளிகள் வசம் கிடைத்தது. நீண்ட நேரமாக ஜீவமரணப் போராட்டம்.
இக்கொலை வெறிச் சம்பவங்கள் நடந்த அதே நேரத்தில் வெலிக்கடைச் சிறைச்சாலைக்குப் பின்னால் அமைந்த கொழும்பு விசாரணைக் கைதிகளுக்கான சிறைச்சாலையிலிருந்து கைதிகள் சிறைப் பூட்டுகளை உடைத்துத் தப்பி ஓட முயற்சித்தபோதுதான் சிறைச்சாலை நிர்வாகம் உஷாரானது. சிங்களக் கைதிகள் ஆயுதங்களைத் தங்கள் மீதே திருப்பித் தப்பி ஓட முயற்சிக்கலாம் எனப் பயந்த நிர்வாகம் கைதிகளை அமைதிப்படுத்தத் தொடங்கியது.
தாக்குதல் தொடங்கி சுமார் 45 நிமிடங்களுக்குப் பின்தான் ராணுவ அதிரடிப் படையினர் உள்ளே வந்து கண்ணீர்ப்புகை பிரயோகம் செய்தனர். கட்டடத்திற்கு வெளியேயிருந்த சிங்களக் கைதிகள் ""கொட்டியாவ மறண்ட ஓன'' ""கொட்டியாவ மறண்ட ஓன'' (புலிகளைக் கொல்ல வேண்டும், புலிகளைக் கொல்ல வேண்டும்) என வெறிக்கூச்சல் எழுப்பினர். அன்று ஓர் இஸ்லாமியரால் வழிநடத்தப்பட்ட அதிரடிப் படை ஓரளவு நியாயத்துடன் நடந்து கொண்டது.
மாறாக முதல்நாள் தாக்குதலின்போது ஆயுதப் படையினர் படுகொலைக்கு உற்சாகமூட்டினர். இதில் ஒரு சிங்களக் கமாண்டரே வழி நடத்தினார்.

நாளை: திட்டமிட்டு நிறைவேற்றிய சதி!


http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Editorial%20Articles&artid=88173&SectionID=133&MainSectionID=133&SEO=&Title=

♥ "இலங்கைத் தமிழர் வரலாறு பாகம் 43 -"தினமணி" தொடர் ♥






"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - 43: வெலிக்கடைச் சிறைப் படுகொலைகள்!






சிங்கள அரசு ஈழப் பகுதிகளில் கைது செய்யும் தமிழ்ப் போராட்ட வீரர்களைத் தமிழர் பகுதியிலுள்ள சிறைகளில் அடைக்காது சிங்களவர் அதிகம் வாழும் பகுதிகளில் உள்ள சிறைகளில் அடைத்து வைப்பதே வாடிக்கை. இந்த நடவடிக்கை மிகவும் பாதுகாப்பானது என்றே அவர்கள் நினைத்திருக்க வேண்டும். பின்னாளில் இந்த நினைப்பு உண்மையாகவும் ஆனது.

இலங்கையின் மிகப் பெரிய சிறைச்சாலை கொழும்பிலுள்ள வெலிக்கடைச் சிறையேயாகும். இங்கு சுமார் மூவாயிரம் கைதிகளை அடைக்கும் அளவுக்கு இடவசதி உண்டு. இச்சிறைக் கட்டடம் சிலுவை வடிவில் பிரிட்டிஷார் காலத்தில் (1843-இல்)கட்டப்பட்டதாகும்.

இந்தச் சிறையில் அடைக்கப்பட்ட ஈழ விடுதலைப் போராட்ட வீரர்கள் இருபத்து நான்கு மணி நேரமும் அடைக்கப்பட்ட நிலையிலேயே வைக்கப்பட்டிருப்பர். இங்கு அடைபட்டிருக்கும் ஏனைய சிங்களக் கைதிகளைப் போல் ஈழ விடுதலைப் போராட்ட வீரர்களுக்குச் செய்திப் பத்திரிகைகள் வாசிக்கவோ, உடற்பயிற்சி செய்யவோ, வானொலி கேட்கவோ, காற்றோட்டமான வசதிகளோ, சிறை நூலக வசதியோ மறுக்கப்பட்டு இருட்டு குகையில் வசிக்கிற நிலைமையைத் தோற்றுவித்தார்கள்.

தமிழ்ப் பகுதிகளில் நடந்ததாகக் கருதப்படும் சம்பவங்களுக்கான வழக்குகள் யாவும் சிங்களப் பகுதிகளிலுள்ள நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும். சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படும் ஈழ விடுதலைப் போராட்ட வீரர்களின் பெற்றோர், மனைவி மக்கள், உற்றார் உறவினர், நண்பர்கள், வழக்கறிஞர்கள் யாவரையும் சந்திக்க அனுமதியும் மறுக்கப்பட்ட நிலையில்தான் தங்கதுரை, குட்டிமணி, ஜெகன் போன்றோர் கொன்று குவிக்கப்பட்டனர்.

ஈழ மக்கள் செய்தித் தொடர்பு நிலையம் வெளியிட்ட ஸ்ரீலங்கா வெலிக்கடைச் சிறைப் படுகொலைகள் நூலிலிருந்து-சிறிதே திருத்தப்பட்ட பகுதி இதோ:

இங்குள்ள பிரிட்டிஷார் காலத்தில் கட்டப்பட்ட சப்பல் கட்டடம் இரண்டு மாடிகளைக் கொண்டதாகும். கட்டடத்தின் கீழ்ப்பகுதி ஏ-3, பி-3, சி-3, டி-3 என நான்கு விசேஷ பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இக் கட்டடத்தின் மேல்மாடிகள் இரண்டும் சாதாரணப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு சாதாரண கைதிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு மேல்மாடிகளிலும் பலதரப்பட்ட குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட்ட சுமார் 600 கைதிகள் இருந்தனர்.

இவர்களில் பெரும்பான்மையோர் சிங்களவர்கள். கொலை, கொள்ளை, வழிப்பறி, கற்பழிப்பு, தீவைப்பு, வீடுடைப்புப் போன்ற பலதரமான குற்றங்களைச் செய்த இவர்கள், தமிழ் இளைஞர்களைக் கொலை செய்வதற்கு அதிகாரிகளால் ஏவிவிடப்பட்டனர்.

கீழ்ப் பகுதியின் விசேஷ நான்கு பிரிவுகளில் பி-3 பிரிவில் குட்டிமணி, தங்கதுரை, ஜெகன், நடேசதாசன், சிவபாதம் மாஸ்டர், தேவன் ஆகிய ஆறுபேரும் தண்டிக்கப்பட்ட கைதிகளாக, வேறு சில சிங்கள விசேஷ சிறைக் கைதிகளுடன் தனித்தனி அறைகளில் பூட்டப்பட்டிருந்தனர். சி-3 பிரிவில் பனாகொடை ராணுவ முகாமில் சித்திரவதையை அனுபவித்தபின் கொண்டுவரப்பட்ட 28 தமிழ்த் தடுப்புக் காவல் கைதிகள் தனித்தனி அறைகளில் வைக்கப்பட்டிருந்தனர்.

இவ்வறைகள் தூக்குத் தண்டனை பெற்ற கைதிகளை வைத்திருப்பதற்கு அமைக்கப்பட்ட வசதிகள் குறைந்த அறைகளாகும். டி-3 பிரிவில் 29 தமிழ்த் தடுப்புக் காவல் கைதிகள் தனித்தனி அறைகளில் இருந்தனர். ஏ-3 பிரிவில் ஏற்கெனவே போடப்பட்டிருந்த சிங்கள விசாரணைக் கைதிகள் இருந்தனர்.

பலம் வாய்ந்த இரும்புக் கதவுகள் பூட்டப்பட்டிருந்த பி-3, சி-3 பிரிவுகள், பூட்டுக்கள் பூட்டப்பட்ட நிலையிலேயே எந்நேரமும் இருக்கும். இப் பிரிவு திறந்து விட்டாலன்றி எவரும் (சக அதிகாரிகள் உள்பட) உள்ளே செல்ல முடியாது. டி-3 பிரிவின் கதவு பலகையால் இருந்தாலும் பலம் வாய்ந்த பூட்டு பூட்டப்பட்ட நிலையிலேயே எந்நேரமும் இருக்கும்.

இந்த நான்கு விசேஷ பிரிவுகளுக்கும் பொறுப்பாக ஒரு ஜெயிலரும், ஒரு பொறுப்பதிகாரியும், நான்கு பிரிவுகளுக்கும் தனித்தனியே நான்கு சிறைக் காவலர்களும் கடமையில் ஈடுபட்டு இருப்பார்கள். இக்கட்டடத்தைச் சுற்றி இருவரிசை முட்கம்பி வேலி அமைக்கப்பட்டு வெளியே பலத்த ராணுவக் காவல் போடப்பட்டிருந்தது.

25-7-1983-இல் இலங்கையில் இனவெறி கோரத் தாண்டவமாடிக் கொண்டிருந்தது. தமிழ் இனப் படுகொலைகள், கொள்ளைகள், கற்பழிப்புகள், தீவைப்புகளில் சிங்கள இனவெறியர்கள் மும்முரமாக ஈடுபட்டிருந்தார்கள். அன்று பிற்பகல் இரண்டு மணியில் இருந்து ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட சிறிது நேரத்திற்குப்பின் சிறை அதிகாரிகள் தமது திட்டத்தை மிகவும் நுட்பமாக நிறைவேற்றத் தொடங்கினார்கள்.

ரெஜஸ்-துணைத் தலைமை சிறை அதிகாரி, சமிதரத்ன-சிறை அதிகாரி, பாலித-காவலதிகாரி. ஆகிய மூன்று சிறை அதிகாரிகளுமே இனப் படுகொலைக்கு சிறைக்குள்ளே திட்டம் போட்ட சூத்ரதாரிகள்.

திட்டமிட்டபடி இவ்வதிகாரிகள் குறிப்பிட்ட சிறைக் கைதிகளைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு சாராயம், கசிப்பு போன்ற மது வகைககளைக் கொடுத்து, உற்சாகப்படுத்திக் கொலை வெறியைத் தூண்டினர். அந்த நேரத்தில் சிறைச்சாலை உயரதிகாரிகள் மதிய உணவுக்காகத் தத்தம் வீடுகளுக்குச் சென்றிருந்தனர். உயர் அதிகாரிகள் சிறையில் இல்லாதபோது நடந்த வன்முறையெனத் தப்பித்துக் கொள்ள இந்த ஏற்பாடு.

தருணம் பார்த்துக் கொண்டிருந்த கொலை வெறியர்கள் தங்கள் வெறியாட்டத்தை ஆரம்பித்தார்கள். மணி பிற்பகல் 2.30. பயங்கர வெறிக்கூச்சல் எழுப்பிக் கொண்டு கொலைகாரர்கள் ஆயுதபாணிகளாகத் தமிழ் அரசியல் கைதிகள் வைக்கப்பட்டு இருந்த சப்பல் கட்டடத்தை நோக்கி ஓடி வந்தார்கள். தமிழ் அரசியல் கைதிகள் வைக்கப்பட்டிருந்த சிறைக் கூடங்களின் கதவுகள் ஏற்கெனவே இனவெறியர்களின் வரவுக்காகத் திறந்து வைக்கப்பட்டு இருந்தன. கத்திகள், பொல்லுகள், வாள், கோடரிகள், இரும்புக் கம்பிகள், குத்தூசிகள், விறகுக் கட்டைகள், தமிழ் இளைஞர்களின் உடல்களில் பதம் பார்க்கத் தொடங்கின.

வீரத்தமிழ் இளைஞர்களின் செங்குருதி சிலுவைக் கட்டடத்திற்குள் ஆறாக ஓடத் தொடங்கியது. தலைகள் பிளக்கப்பட்டன. கண்கள் தோண்டப்பட்டன. இதயங்கள் கிழிக்கப்பட்டன. குடல்கள் உறுவப்பட்டன. குரல்வளைகள் அறுக்கப்பட்டன. கை, கால்கள் துண்டிக்கப்பட்டன. இவ்வளவு கொடூரச் சித்திரவதைகளும் சிறைக்காவலர் முன்னிலையிலேயே நடைபெற்றன.

சிங்கள சிறைக்கைதிகள், தமிழ் அரசியல் கைதிகளைக் கொல்வதை இனவெறி பிடித்த சிங்கள சிறைக் காவலர் பார்த்து ரசித்தார்கள். கொலைகள் முடிந்தவுடன் கண்துடைப்பு நடவடிக்கையாக வெளியே காவலுக்கு நின்ற இராணுவ வீரர்கள் (தமிழ் அரசியல் கைதிகள் தப்பியோடாது இராணுவ வீரர்கள் வெலிக்கடையில் தொடர்ந்து காவலுக்கு நின்றார்கள்) உள்ளே அழைக்கப்பட்டார்கள். உள்ளே வந்த இராணுவ வீரர்கள் கொலை வெறிக்கு உரமூட்டினார்கள்.

ஆகாயத்தை நோக்கி வேட்டுகளைத் தீர்த்தும் இப்படுகொலைக்குத் தமது தார்மீக ஆதரவையும், மகிழ்ச்சியையும் தெரிவித்தார்கள். வெலிக்கடையில் இப்படுகொலைகள் நடைபெற்றுக் கொண்டு இருந்த வேளை ஹெலிகாப்டர் ஒன்று வெலிக்கடைச் சிறையின்மேல் தாழப் பறந்து கொண்டு இருந்தது. இது வெலிக்கடைக் கொலைக்கும் அரசாங்க உயர் மட்டத்திற்கும் இருந்த தொடர்பை உறுதிப்படுத்துகிறது.

குட்டிமணி, ஜெகன் ஆகியோருக்கு மரண தண்டனை கிடைத்த வேளையில் அவர்கள் இருவரும் தங்களது கண்களைக் கண்பார்வையற்ற தமிழர்களுக்கு அளிக்கும்படியும் அதன்மூலம் மலரவிருக்கும் ஈழத்தைப் பார்க்க வேண்டும் என்றும் உருக்கமான பொருள் நிறைந்த வேண்டுகோளை நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர்.

இதே காரணத்திற்காகக் குட்டிமணி குற்றுயிருடன் வெளியே இழுத்துவரப்பட்டு, சிறைச்சாலையின் மத்தியில் போடப்பட்டார். சிங்கள வெறியர் விசிலடித்து ஆர்ப்பரித்து ""ஜெயவேவா'' (மகிழ்ச்சி ஆரவாரம்) கோஷம் எழுப்பிக் குட்டிமணியின் கண்கள் இரண்டையும் கூரிய ஆயுதம் ஒன்றினால் தோண்டியெடுத்தனர்.

குட்டிமணியின் கண்கள் தோண்டியெடுக்கப்பட்டதும் சிங்களக் கைதிகள் கைதட்டி விசிலடித்து வெறியுணர்ச்சி பொங்க ஆர்ப்பரித்தனர். அதே வேளை குட்டிமணியின் கண்களைத் தோண்டிய இனவெறியன் ஏனைய சிங்களக் கைதிகளினால் தோளில் தூக்கப்பட்டுச் சிங்கள வீரனாகக் கொண்டாடப்பட்டான். ஏனைய கைதிகள் குட்டிமணியின் உடலைக் குத்திக் கிழித்து அவரின் ஆணுறுப்பையும் வெட்டினார்கள். இறுதியாக 15 வெறியர்கள் குட்டிமணியின் குருதியைக் குடித்தனர்.

பின்னர் சிங்கள இனவெறியர் அங்கு அமைக்கப்பட்டிருந்த புத்த விகாரையின் புத்தர் சிலையின் முன் குட்டிமணியின் உடலை நிர்வாணமாக்கிப் போட்டார்கள். இவ்வாறாக ஜெகனின் கண்களும் தோண்டப்பட்டு ஆணுறுப்பு வெட்டப்பட்டு அவரின் உடலும் நிர்வாணமாகப் புத்தர் சிலையின் முன்னால் வீசப்பட்டது. காட்டுமிராண்டித் தனமான கூச்சல்களுக்கு மத்தியில் ஏனைய தமிழ் இளைஞர்களும் சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டு, நிர்வாணமாக்கப்பட்டு புத்தரின் காலடியில் எறியப்பட்டனர்.

சிங்கள புத்த வெறியர்கள், தமிழிளைஞர்களின் தலைகள், கண்கள், கால்கள், கைகள், உடல்கள், செங்குருதி யாவற்றையும் புத்தருக்கு காணிக்கையாக அளித்தனர். இப்படுகொலைகள் நடைபெற்ற தினத்திற்கு முதல்நாள் புத்தர்களின் புனிதநாளான போயா தினமாகும். போயா தினத்தில் உபவாசம் இருந்து ""சில்'' அனுஷ்டித்தவர்கள் மறுநாள் இப்படுகொலையில் சம்பந்தப்பட்டிருந்தனர்.

சிறுவன் மயில்வாகனத்திற்கு ஏற்பட்ட மரணம் மனதை உருக்குவதாகும். இச்சிறுவன் கப்பற்படையினரின் தண்ணீர் எடுத்துச் செல்லும் வாகனத்திற்கு (பவுசர்) பொன்னாலைப் பாலத்தடியில் வெடிகுண்டு வைத்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தான்.

இச்சிறுவன் சப்பல் கட்டடத்திற்கு வெளியே சாதாரண கைதிகளுக்கு உணவு வழங்கப்படும் இடத்தில் மறைந்திருந்ததைக் கண்ணுற்ற சிறை அதிகாரி சமிரத்ன அச்சிறுவனின் தலைமயிரைப் பிடித்திழுத்துக் கத்தியால் அவன் குரல்வளையை வெட்டினான். இரத்தம் பீறிட்டுவர அச்சிறுவனும் புத்தருக்குக் காணிக்கையாக்கப்பட்டான். இச்சிறுவனைப் படுகொலை செய்த சமிதரத்ன ஒரு பட்டதாரியாவான் என்பதும் வெட்கக் கேடான உண்மையாகும்.

சிறைச்சாலை வாகனத்தில் ஈழ விடுதலைப் போராட்ட இளைஞர்களின் உடல்கள் முழு நிர்வாணமாகப் போடப்பட்டன. அந்த உடல்களின் மத்தியில் உயிர்ப் பிரிவின் முனகல் கேட்டபோது கொலை வெறியர் பொல்லால் அடித்து கம்பியால் குத்தி அவ்வொலிகளை நிரந்தரமாக நிறுத்தினார்கள்!

http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Editorial%20Articles&artid=87722&SectionID=133&MainSectionID=133&SEO=&Title=

♥ "இலங்கைத் தமிழர் வரலாறு பாகம் 42 -"தினமணி" தொடர் ♥






"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - 42: நீதிமன்றம் மவுனமானது!

 


தங்கதுரை


தங்கதுரையின் நீதிமன்ற வாதம் மேலும் தொடர்கிறது -

நான் வேறானாலும்கூட ஒரே தீவின் பிரஜைகள் என்ற வகையில் உங்கள் புரிந்துணர்வைப் பெற வேண்டும் என்ற நல்நோக்குடனேயே இவ்வழக்கின் விசாரணைக்கு நாம் சமூகமளித்தது மட்டுமல்லாது, இன்று எமது நிலையையும் உங்கட்கு தெளிவாய் காட்டினோம். இதனால் ஏற்படும் புரிந்துணர்வின் மூலம் எதிர்காலத்தில் எம்பொருட்டு நீங்கள் குரல் கொடுப்பீர்களே ஆயின், மிக்க மனநிறைவை எய்தியவர்களாவோம்.

இல்லாவிடினும்கூட தற்போதைய சமூக, பொருளாதார நடவடிக்கைகளே தொடர்ந்து அதன் சுமை தாங்காது என உணர்ந்து அதன் தளைகளை உடைத்து உங்களை விடுவிக்க நீங்கள் நடத்தும் போராட்டத்திற்கு நாம் மிக உறுதுணையாய் இருப்போம் என்பதை மனப்பூர்வமாய் உங்கட்கு தெரிவிக்கிறோம்.

தமிழ் ஈழம் அமைப்பது ஒன்றேதான் எமது முற்றான பணி. ஈழத்திய தமிழர், தமிழராய் தொடர்ந்து வாழ வேண்டுமாயின் தமிழ் ஈழம் அமைப்பது ஒன்றுதான் நம் முன் உள்ள ஒரே வழி என்பதனை ஸ்ரீலங்கா அரசு எம்மைப் பல வழிகளிலும் உந்தியதன் மூலமே அவ்வழியில் மிக முனைப்பாய் உள்ளோம்.

எமது நோக்கு மிக விசாலமானது. ஆப்பிரிக்கக் கண்டம் என்றால் என்ன, லத்தீன் அமெரிக்க நாடு என்றால் என்ன, எங்கெங்கு அடக்கி ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்கின்றார்களோ அங்கெல்லாம் அவர்களின் விடுதலைக்காகப் போராடும் நோக்கத்தையும் உள்ளடக்கியது. அப்படி இருக்கையில் எமது சகதேசத்தவரான மக்களின், குறிப்பாக சிங்கள மக்களின் நலன் அதற்குள் அடங்காது எப்படிப் போகும்.

இப்படி இருக்கையில், ஸ்ரீலங்காவின் போலீஸôர் மட்டுமே உங்கள் பார்வையில் அப்பாவிகளாய் தோற்றம் தருகின்றார்களா? பச்சைக் கொலையாக 1977-ஆம் ஆண்டில் மட்டும் உயிர் இழந்தவர்களே 400-க்கும் மேற்பட்ட தமிழர்கள். அவர்களின் குருதி பாய்ந்து ஓடியதால் இத் தீவின் மேல் கவிந்திருந்த வானமே செக்கல் மயமானது. அவை எல்லாம் உங்களுக்குப் பயங்கரவாதம் என்று தோன்றவில்லையா? தமிழ் மக்களைக் கொலை செய்தவர்கள் மட்டுமே அப்பாவிகளாகவும், குற்றம் செய்யாதவர்களாகவும் உங்களுடைய கண்களுக்கு தோற்றம் தருகின்றார்களா? தமிழ் மக்களின் உயிர், உடைமை என வரும்போது உங்கள் சிந்தனையின் மெல்லிய உணர்வுகள் அறவே மரத்துவிடுகின்றனவா? அல்லது அப்படியான ஓர் உணர்வு உங்கள் வாழ்வில் புரியாத ஒரு மொழியா?

நாம் வன்முறை மீது காதல் கொண்டவர்களோ, அன்றி அது மாதிரியான நோய்களால் பாதிப்புற்ற மன நோயாளிகளோ அல்லர். மாறாக, விடுதலையை முன்வைத்துப் போராடும் ஒரு ஸ்தாபனத்தில் அங்கம் வகிக்கும் நேர்மையான போராளிகளே நாங்கள்.

சிங்கள மக்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்வேன். எமது பூமியில் மட்டுமல்லாது உங்கள் நாட்டின் பல பாகங்களிலும் மிக அண்மைக்காலம் வரை தமிழ் மக்கள் மீது பல தடவைகள் உங்கள் நாட்டு அதிகார அமைப்பினால் கட்டவிழ்த்து விடப்பட்ட பயங்கரவாதத்தைச் சரி என நீங்கள் ஏற்றுக் கொள்கின்றீர்களா? அன்றியும் இவை மட்டுமல்லாது நம்மை நாம் அல்லாதவராக்கும் முயற்சியில் பல வழிகளிலும் ஈடுபட்டு வரும் உங்கள் அரசின் நாகரிகமற்ற நடவடிக்கைகளின் பாதிப்பில் இருந்து எம்மக்களை மீட்க நாம் முன்னின்றமையைத் தான் தவறு என்று சொல்வீர்களா?

அப்படியான ஓர் உயர்ந்த லட்சியத்தை முன்வைத்துப் போராடிய எம் மீது பயங்கரவாதத் திரையைப் போர்த்தி, உங்கள் நாட்டுச் சட்டங்களிலும் பயங்கரவாதத்தைப் புகுத்தி புதுப் பெருமையைத் தேடிக்கொண்ட உங்கள் அதிகார அமைப்பு எம்மீது விசாரணை என்ற பெயரில் நடத்தும் கண்துடைப்புகளையும் சரி என ஏற்றுக் கொள்கின்றீர்களா? அல்லது பாதிக்கப்படுபவன் தமிழன்தானே என்ற பொறுப்பற்ற உணர்வா? அப்படியாயின் தற்போதைக்கு உங்கள்மீது எம்மால் அனுதாபம் கொள்ள மட்டுமே முடியும்.

நாம் விடுதலை பெறுவது நிதர்சனமான உண்மை. அதன் பின்னர் உங்கள் நாட்டின் சட்டப் புத்தகங்களில் நிரந்தர இடம் பெற்றுவிட்ட எச்சட்டங்களும் எம்மை அணுகா. அப்படியாயின் இச்சட்டங்களையும் பயங்கரவாதத்தையும் எதிர்காலத்தில் நீங்களே சுவீகாரம் எடுப்பீர்கள் என்ற கையறு நிலையை இப்போதே எய்தி விட்டீர்களா?

இரு அயல் தேசங்கள் ஒற்றுமையாக இருக்கக்கூடாது என்ற நிர்ப்பந்தம் இல்லை. மாறுபட்ட கொள்கை உடைய எத்தனையோ நாடுகள் பொருளாதாரம், பாதுகாப்பு என்ற விஷயங்களுக்காகச் சில பொதுக் கோட்பாடுகளுக்கு இடையில் ஓர் அமைப்பை உருவாக்கிச் செயல்பட்டு வரவில்லையா? அதற்காக அந்நாடுகள் தமது இறைமையை விட்டுக் கொடுத்து விட்டன என நாம் சொல்ல முடியுமா?

இவ்வுலகின் வல்லாதிக்கம் கொண்ட சில சக்திகள், தெற்காசியப் பிராந்தியத்தில், குறிப்பாய் மூன்றாம் மண்டல நாடுகளைப் பொருளாதார ரீதியில் தலையெடுக்க விடாது செய்து வரும் கூட்டுச் சதியை முறியடிக்கும் விதத்தில், இந்த உபகண்டத்தின் தன்னாதிக்கமுள்ள முற்போக்குக் குடியரசுகள், இவ்வுபகண்ட நன்மை கருதி அதற்கு ஒரு பொது அமைப்பையோ அல்லது எந்தக் குடியரசினதும் தன்னாதிக்கத்திற்கு பங்கம் வராவகையில் பல குடியரசுகள் கொண்ட ஒரு ஒன்றியத்தை உருவாக்கும் பட்சத்தில் உபகண்ட நன்மை கருதி தமிழ் ஈழம் நிச்சயமாக தன் பங்களிப்பை வழங்கும்.

இறுதியாக ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன். ஸ்ரீலங்கா அரசின் எந்த அமைப்பிலும் இருந்து நாம் நீதியை எதிர்பார்க்கவில்லை. இம்மன்றமும் அதற்கு விதிவிலக்கல்ல. எமக்குத் தெரியும் உங்களது சங்கடமான நிலைமை. சுயேட்சையான நிர்வாகம் அருகிவரும் உங்கள் அரசியல் அமைப்பில் நீதி நிர்வாகத்தில் பணிபுரிபவர்கள் அரசைத் திருப்தி பண்ணியே ஆகவேண்டும் என்ற நிர்ப்பந்த நிலை ஏற்பட்டிருப்பது இயல்பே.

இந்நிலையில், தமிழ் இன விடுதலை இயக்கங்களை நசித்தே தீருவேன் எனக் கங்கணம் கட்டிக்கொண்டிருக்கும் ஓர் அரசின் மன்றத்தில் இனியும் மெனக்கெடுவதற்கு ஏதுமில்லை. எமது இயக்கத்தின் மீதும் இம்மன்றத்தில் நடத்தி முடிக்கப்பட இருக்கும் இரண்டாவது வழக்கு இது. இனி எத்தனை வழக்குகள் எம்மீது உங்களால் சோடிக்கப்பட்ட போதும் நாமும் விசாரணையில் பங்கெடுத்துக் கொண்டது எனும் நிலை இவ்வழக்குடன் பூர்த்தியாகின்றது. உங்களது நோக்கம் எம்மைத் தண்டிக்க வேண்டும் என்பதே. அதை இனி எமது எந்தவித இடையூறும் இல்லாது விருப்பம்போல் மிகச் சுலபமாய்ச் செய்யுங்கள். தற்போதைக்கு உங்களுக்கு நாம் செய்யும் உதவி இதுவே.

தற்போதைக்கு இவ்வழக்கின் மூலம் உண்மை நிலையை உலகிற்கும், குறிப்பாய் இத்தீவின் மக்கள் யாவர்க்கும் உணர்த்திவிட்ட மகிழ்வே எமக்கு மேலோங்கி உள்ளது. மக்களின் மனத்தீர்ப்பே எமக்கு முக்கியமானவை. அவர்கள் தீர்ப்பு நிச்சயமாய் எமக்கே சாதகமாய் அமையும் என்ற நிறைவே எய்தியுள்ளோம்.

இனி எம்மீது எத்தனை வழக்குகள்தான் சோடிக்கப்பட்டாலும், எத்தனை அவதூறுகள் வாரி இறைக்கப்பட்டாலும் எமக்கு அதுபற்றிக் கவலை இல்லை. உங்களது அந்த நடவடிக்கைகள் மூலம் வெற்றி பெறப்போவதும் நாமே. உங்கள் தீர்ப்பின் பாதிப்புகள் எம்வரை அந்நியமானவையே.

எனவே நாம் எமது கடமையை முடிந்தவரை செய்த மனநிறைவுடன் எதிர்காலத்தைச் சிறையில் கழிக்கவோ- வேண்டுமாயின் மரணத்தைக் கூடத் தழுவவோ நாம் தயங்கவில்லை.

ஓர் இனத்தின் விடுதலை வரலாற்றில் இவை எல்லாம் மிகச் சர்வ சாதாரண சம்பவங்களே! இதை நாம் தெரிந்தே ஈடுபட்டோம். எமக்கு ஏமாற்றம் என்பது எதுவுமே இல்லை. எதை எய்கின்றோமோ அதுவேதான் நம்மிடம் திரும்பி வரும், எதை விதைக்கின்றோமோ அதையேதான் அறுவடை செய்ய வேண்டும் என்பதில் அசையாத நம்பிக்கை கொண்டவன் நான். நாம் விதைத்தவை விஷ விதைகளுமல்ல, எய்தவை நச்சு பாணங்களுமல்ல. அதனால்தான் இந்த நிமிடத்திலும் நான் மிகத் தெளிவாக மனநிறைவுடன் நிற்கின்றேன்.

வாழ்க தமிழ்

வளர்க தமிழ் ஈழம்

அகன்று போகட்டும் வறுமையும்

அணுவாயுதப் பயமுறுத்தலும்.

ஒழிக பசியும் பிணியும்.

ஓங்கட்டும் மனித நேயம்.

தங்கதுரை வாதம் முடிந்ததும் நீதிமன்றம் மவுனமானது.

http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Editorial%20Articles&artid=87164&SectionID=133&MainSectionID=0&SEO=&Title=%22%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81+-+42:+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%86%C3%BC%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81!

smail

நன்றி....!

நன்றி....!

Locate IP Address on Map

Blog Widget by LinkWithin

இலவச மின் சந்தா

Enter your email address:

Delivered by FeedBurner

ஏதாவது சொல்லணும் தோனுதா....?

Guestbook

http://www.google.co.in/transliterate/indic/Tamil

தமிழில் எழுத....
ammaa=அம்மா appaa=அப்பா
குறிப்பு:
ஆங்கில தட்டச்சுக்கு மாற  Ctrl+g பட்டணை அழுத்தவும்
தமிழ் தட்டச்சுக்கு     மாற Ctrl+g  பட்டணை அழுத்தவும்
animated gifs

சற்று முன்...!

இந்த வலைப்பதிவில் தேடு

லேபிள்கள்

முந்தைய பதிவுகளில் மூழ்கித் தேட....!